முன்னேறுகிற பைபிள் படிப்புகளை நடத்துதல்
பகுதி 2: படிப்பை நடத்துவதற்கு தயாரித்தல்
1 பைபிள் படிப்பு நடத்துகையில் திறம்பட்ட விதமாக கற்பிப்பதற்கு, வெறுமனே பாராக்களிலுள்ள விஷயங்களைக் கலந்தாலோசித்து, அவற்றில் குறிப்பிடப்பட்டுள்ள வசனங்களை எடுத்துப் பார்ப்பது மட்டும் போதாது. மாணாக்கரின் இருதயத்தை உந்துவிக்கும் விதத்தில் அந்தத் தகவலை தெரிவிப்பது அவசியம். எனவே மாணாக்கரை மனதில் வைத்து முழுமையாக தயாரிக்க வேண்டும்.—நீதி. 15:28.
2 எப்படி தயாரிப்பது: முதலில், அந்த மாணாக்கருக்காகவும் அவருடைய தேவைகளுக்காகவும் யெகோவாவிடம் ஜெபியுங்கள். மாணாக்கரின் இருதயத்தை உந்துவிக்கும் விதத்தில் பேசுவதற்கு யெகோவாவிடம் உதவி கேளுங்கள். (கொலோ. 1:9, 10) மையப்பொருளை தெளிவாக புரிந்துகொள்வதற்கு நடத்தவிருக்கும் அதிகாரத்தின் அல்லது பாடத்தின் தலைப்பையும், உபதலைப்புகளையும், படங்களையும் சிந்தித்துப் பார்க்க சற்று நேரம் செலவிடுங்கள். பின்னர் ‘இந்த அதிகாரத்தில்/பாடத்தில் உள்ள முக்கிய கருத்து என்ன?’ என உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள். இவ்வாறு கேட்டுக்கொள்வது, படிப்பு நடத்தும்போது முக்கிய குறிப்புகளை வலியுறுத்துவதற்கு உதவும்.
3 ஒவ்வொரு பாராவாக விஷயத்தை கவனமாய் பார்வையிடுங்கள். கொடுக்கப்பட்டிருக்கும் கேள்விகளுக்கு பதில்களை கண்டுபிடியுங்கள்; அதிலுள்ள முக்கிய வார்த்தைகளையும் சொற்றொடர்களையும் மட்டும் குறித்துக்கொள்ளுங்கள். மேற்கோளின்றி கொடுக்கப்பட்டிருக்கும் வசனங்கள் அந்தப் பாராவின் முக்கிய குறிப்புடன் எவ்வாறு சம்பந்தப்பட்டிருக்கிறது என்பதை ஆராயுங்கள்; அதன் பிறகு படிப்பின்போது எந்த வசனங்களை வாசிப்பது என தீர்மானியுங்கள். பிரசுரத்திலுள்ள மார்ஜினில் அந்த வசனங்கள் பற்றிய குறிப்புகளை எழுதி வைப்பது நல்லது. தான் கற்பது கடவுளுடைய வார்த்தையில் இருக்கிறது என்பதை மாணாக்கர் தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும்.—1 தெ. 2:13.
4 நபருக்கேற்ப படிப்பை நடத்துதல்: பின்பு, அந்த மாணாக்கரை மனதில் வைத்து சிந்தியுங்கள். அவர் என்னென்ன கேள்விகளை கேட்பார், என்னென்ன குறிப்புகள் அவருக்குப் புரியாதவையாகவோ அவரால் ஒத்துக்கொள்ள முடியாதவையாகவோ இருக்கலாம் என்பதை முன்கூட்டியே யோசித்துப் பாருங்கள். ‘ஆன்மீக ரீதியில் முன்னேறுவதற்கு அவர் எதை புரிந்துகொள்ள வேண்டும், அல்லது எதில் உழைக்க வேண்டும்? அவருடைய இருதயத்தை தொடும் விதத்தில் நான் எப்படி பேசலாம்?’ என்று உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள். பின்பு அதற்கேற்றவாறு மாற்றியமைத்து படிப்பை நடத்துங்கள். சில சமயங்களில், அந்த மாணாக்கர் ஒரு குறிப்பின் அல்லது வசனத்தின் அர்த்தத்தைப் புரிந்துகொள்வதற்கு ஏதாவது ஓர் உதாரணத்தை, விளக்கத்தை, அல்லது சிறு சிறு கேள்விகளை நீங்கள் தயாரித்துச் செல்ல வேண்டியிருக்கலாம். (நெ. 8:8) ஆனால் கலந்தாலோசிக்கப்படும் விஷயத்துடன் சம்பந்தமில்லாத குறிப்புகளை கூடுதலாக சேர்த்துக்கொள்வதை தவிருங்கள். படிப்பின் முடிவில் விஷயத்தை சுருக்கமாக மீண்டும் பார்வையிடுவது முக்கிய குறிப்புகளை ஞாபகத்தில் வைக்க மாணாக்கருக்கு உதவும்.
5 யெகோவாவுக்கு துதி சேர்க்கும் விதத்தில் புதியவர்கள் நீதியின் கனிகளைப் பிறப்பிப்பதைக் காண்பது நமக்கு எப்பேர்ப்பட்ட சந்தோஷம்! (பிலி. 1:10) அந்த இலக்கை அடைய அவர்களுக்கு உதவும் வகையில், பைபிள் படிப்பை நடத்தச் செல்லும் போதெல்லாம் முழுமையாக தயாரித்துவிட்டுச் செல்லுங்கள்.