மாநாட்டு நிகழ்ச்சிகளை மறுபார்வை செய்வதற்கான புதிய ஏற்பாடு
சாத்தானிய உலகம் தொடர்ந்து சீர்கெட்டு வருகையில், நாம் ‘அவபக்தியையும் லெளகிக இச்சைகளையும் வெறுத்து, தெளிந்த புத்தியும் நீதியும் தேவபக்தியும் உள்ளவர்களாய் இவ்வுலகத்திலே ஜீவனம் பண்ணுவதற்கு’ யெகோவா நம்மை பலப்படுத்துகிறார். (தீத். 2:12) “உண்மையும் விவேகமுமுள்ள அடிமை” வகுப்பின் மூலமாக அவர் செய்து வரும் ஏற்பாடுகளில், வருடாந்தரம் நடைபெறும் வட்டார மாநாட்டு நிகழ்ச்சியும் விசேஷ மாநாட்டு தின நிகழ்ச்சியும் அடங்கும். (மத். 24:45, NW) இந்த ஆன்மீக கூட்டங்கள் நமக்கு எவ்வளவாய் தெம்பூட்டுகின்றன!
மாநாட்டில் கேட்கும் அறிவுரையை நினைவில் வைப்பதற்கும், நடைமுறையில் பொருத்துவதற்கும் மறுபார்வைக்கான புதியதோர் ஏற்பாடு 2005 ஊழிய ஆண்டில் செய்யப்படும். மாநாடுகளில் கொடுக்கப்போகும் பேச்சுக்களின் ஒரு கண்ணோட்டத்தையும், ஒவ்வொரு மாநாட்டு நிகழ்ச்சிக்குமான மறுபார்வை கேள்விகளையும் கொண்ட கட்டுரைகள் இந்த உட்சேர்க்கையில் பக்கங்கள் 5-6-ல் உள்ளன. நீங்கள் கலந்துகொள்ளும் மாநாடுகள் நடப்பதற்கு கொஞ்ச நாட்களுக்கு முன்பும் அதற்குப் பின்பும் நடைபெறுகிற ஊழியக் கூட்டத்தின்போது இந்தத் தகவல் சபைகளில் கலந்தாராயப்படும். இது எவ்வாறு ஏற்பாடு செய்யப்படும்?
சபையார் வட்டார மாநாட்டில் கலந்து கொள்வதற்கு ஓரிரு வாரங்களுக்கு முன், ஊழியக் கூட்டத்தில் “புதிய வட்டார மாநாட்டு நிகழ்ச்சி” என்ற கட்டுரையின் அடிப்படையில் பத்து நிமிட பேச்சு ஒன்று இருக்கும்; இது வரவிருக்கும் மாநாட்டு நிகழ்ச்சிக்கான நம்முடைய ஆவலைத் தூண்டும். இந்தப் பாகத்தை நடத்துகையில் பேச்சாளர் மறுபார்வை கேள்விகளிடம் கவனத்தை திருப்புவார், அத்துடன், மாநாடு முடிந்து சில வாரங்களுக்குப் பின்பு நடத்தப்படும் இந்த மறுபார்வைக்கு தயாரிக்கும் வகையில் அனைவரும் குறிப்புகள் எடுத்துக்கொள்ளுமாறும் உற்சாகப்படுத்துவார்.
மாநாடு முடிந்து சில வாரங்களுக்குள், மாநாட்டின் முதல் நாள் நிகழ்ச்சியின் 15 நிமிட மறுபார்வை ஊழியக் கூட்டத்தில் கலந்தாலோசிக்கப்படும். அதற்கடுத்த வாரத்தில், இரண்டாம் நாள் நிகழ்ச்சியை மறுபார்வை செய்வதற்காக 15 நிமிடங்கள் ஒதுக்கப்படும். இந்த உட்சேர்க்கையில் கொடுக்கப்பட்டுள்ள மறுபார்வை கேள்விகளின் அடிப்படையில் அந்தக் கலந்தாலோசிப்புகள் இருக்கும். இந்த மறுபார்வை, மாநாட்டில் கேட்டுவந்த தகவலின் நடைமுறை பயன்களை வலியுறுத்திக் காண்பிக்க வேண்டும். இந்தப் பகுதிகளை நடத்துவதற்காக ஊழியக் கூட்டப் பகுதிகளின் நேரத்தை சுருக்கவோ, நீக்கவோ, வேறொரு நாளுக்கு மாற்றவோ மூப்பர்கள் ஏற்பாடு செய்யலாம்.
விசேஷ மாநாட்டு தின நிகழ்ச்சி சம்பந்தமாகவும் இதே ஏற்பாடு பின்பற்றப்படும்; ஆனால் முழு நிகழ்ச்சியையும் மறுபார்வை செய்வதற்காக 15 நிமிட பகுதி ஒன்று மட்டுமே இருக்கும். யெகோவா வழங்கும் அருமையான அறிவுரையிலிருந்து முழுமையாய் பயனடைய நாம் அனைவரும் இந்த உட்சேர்க்கையை பத்திரமாக வைத்திருந்து பயன்படுத்த வேண்டும்.—ஏசா. 48:17, 18.