பயனியர் மனப்பான்மையை வெளிக்காட்டுங்கள்
1 தற்போது தங்களால் பயனியர் சேவை செய்ய முடிகிறதோ இல்லையோ, ராஜ்ய பிரஸ்தாபிகள் எல்லாராலும் பயனியர் மனப்பான்மையை வெளிக்காட்ட முடியும். ஏனெனில் பிரசங்கித்து சீஷராக்கும்படி கொடுக்கப்பட்ட கட்டளைக்கு கீழ்ப்படியவே ராஜ்ய பிரஸ்தாபிகள் விரும்புகிறார்கள். (மத். 28:19, 20; அப். 18:5) தங்கள் ஊழியத்தை நிறைவேற்றும்பொருட்டு ஜனங்கள் மீது அவர்கள் அக்கறை காட்டுகிறார்கள், தியாகங்களும் செய்கிறார்கள். (மத். 9:36; அப். 20:24) சத்தியத்தைக் கற்க மற்றவர்களுக்கு உதவுவதற்காக என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அதையெல்லாம் செய்ய யெகோவாவின் ஊழியர்கள் மனமுள்ளவர்களாய் இருக்கிறார்கள். (1 கொ. 9:19-23) அப்படிப்பட்ட மனப்பான்மையை காட்டின ஒருவரின் உதாரணத்தை இப்போது ஆராய்வோம்; அவர்தான் சுவிசேஷகனாகிய பிலிப்பு.
2 பிரசங்கித்தலும் கற்பித்தலும்: முதல் நூற்றாண்டு சபையில் பிலிப்பு முக்கிய பொறுப்புகளை ஏற்றிருந்தார். (அப். 6:1-6) ஆனாலும், நற்செய்தியை வைராக்கியத்துடன் பிரசங்கிப்பதற்கு அவர் முதலிடம் கொடுத்தார். (அப். 8:40) அவ்வாறே இன்று மூப்பர்களும் உதவி ஊழியர்களும் தங்களுக்கென நியமிக்கப்பட்ட பொறுப்புகளை செய்துவரும் அதே சமயத்தில், முன்னின்று உற்சாகமாய் ஊழியத்தில் ஈடுபடுவதன் மூலமாக பயனியர் மனப்பான்மையை வெளிக்காட்டலாம். இது சபையின் உற்சாகத்தை எவ்வளவாய் முடுக்கிவிடும்!—ரோ. 12:11.
3 ஸ்தேவானின் மரணத்திற்குப் பிறகு, சீஷர்களின் வாழ்க்கையை குலைத்துப்போட்ட பெரும் துன்புறுத்தல்கள் அடுத்தடுத்து வந்த வண்ணமாகவே இருந்தன. என்றாலும் பிலிப்பு தொடர்ந்து பிரசங்கித்து வந்தார்; சமாரியர்களிடம் பிரசங்க வேலையை ஆரம்பித்து வைப்பதில் அவர் முக்கிய பங்கு வகித்தார். (அப். 8:1, 4-6, 12, 14-17) அவருடைய முன்மாதிரியை பின்பற்றி நாமும் சோதனைகளை எதிர்ப்பட்டாலும் தொடர்ந்து நற்செய்தியை அறிவிப்போமாக; நாம் சந்திக்கும் எல்லாரிடமும் பட்சபாதமின்றி பிரசங்கிப்போமாக.—யோவா. 4:9.
4 கடவுளுடைய வார்த்தையை பிலிப்பு திறமையுடன் கற்பித்து வந்தார் என்பதை எத்தியோப்பிய மந்திரி மதம் மாறிய விஷயத்திலிருந்து தெரிந்துகொள்ளலாம். (அப். 8:26-38) பைபிளை பயன்படுத்தும் திறமையையும், ‘வேதவாக்கியங்களின் நியாயங்களை எடுத்துரைக்கும்’ திறமையையும் வளர்ப்பது, பயனியர் மனப்பான்மையை வெளிக்காட்டும் இன்னொரு வழியாகும். (அப். 17:2, 3) பிலிப்புவைப் போலவே நாமும், ஆட்கள் இருக்கும் இடங்களுக்கெல்லாம் சென்று, பொருத்தமான ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நற்செய்தியை தெரிவிக்க முயலுகிறோம்.
5 குடும்பத்திலும் சபையிலும்: பிலிப்புவின் மனப்பான்மையும் முன்மாதிரியும் அவருடைய மகள்களின் மீது நல்ல பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும் என்பதில் சந்தேகமில்லை. (அப். 21:9) அதைப்போலவே, தங்கள் வாழ்க்கையில் ராஜ்ய அக்கறைகளுக்கு முக்கியத்துவம் தரும் கிறிஸ்தவ பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளும் அவ்வாறே செய்வதற்கு தூண்டுகின்றனர். பெற்றோர் வாரம் முழுக்க உழைத்துவிட்டு வாரக் கடைசியில் களைப்பையும் பொருட்படுத்தாமல் பிரசங்க வேலையில் ஆவலுடன் ஈடுபடும்போது பிள்ளையின் மனதில் அது அப்படியே பதிந்துவிடும்.—நீதி. 22:6.
6 யெகோவாவின் சேவையில் மிக மும்முரமாக ஈடுபட்டு வந்த வைராக்கியமுள்ள கிறிஸ்தவர்களான பவுலையும் லூக்காவையும் பிலிப்பு உபசரித்தார். (அப். 21:8, 10) இன்றும், வைராக்கியமான ஊழியர்களுக்கு நம் நன்றியையும் ஆதரவையும் எப்படி காட்டலாம்? ஒருவேளை, நிறைய பேர் ஊழியத்தில் கலந்துகொள்ளாத நாட்களில் காலையிலோ மாலையிலோ பயனியர்களுடன் சேர்ந்து ஊழியம் செய்ய நாம் முன்வரலாம். (பிலி. 2:4) உற்சாகமூட்டும் கூட்டுறவுக்காக நம் வீடுகளுக்கு வருமாறு அவர்களை அழைக்கலாம். நம் சூழ்நிலை என்னவாக இருந்தாலும் சரி, பயனியர் மனப்பான்மையை வெளிக்காட்ட நாம் அனைவருமே ஊக்கமாய் முயலுவோமாக.
[கேள்விகள்]
1. பயனியர் மனப்பான்மையை எப்படி விவரிப்பீர்கள்?
2. ஊழியத்தில் பிலிப்புவின் வைராக்கியத்தை மூப்பர்களும் உதவி ஊழியர்களும் எவ்வாறு பின்பற்றலாம்?
3. சோதனைகளை எதிர்ப்படுகையில் பயனியர் மனப்பான்மையை நாம் எவ்வாறு வெளிக்காட்டலாம்?
4. கற்பிப்பதில் பிலிப்பு என்ன முன்மாதிரி வைத்தார்?
5. கிறிஸ்தவ பெற்றோர்கள் என்ன செய்தால் தங்கள் பிள்ளைகளிலும் பயனியர் மனப்பான்மையை ஏற்படுத்தலாம்?
6. நம் சபையிலுள்ள பயனியர்களுக்கு நாம் எப்படி போற்றுதல் காண்பிக்கலாம்?