முன்னேறுகிற பைபிள் படிப்புகளை நடத்துதல்
பகுதி 7: படிப்பின்போது ஜெபிப்பது
1 பைபிள் மாணாக்கர்கள் ஆவிக்குரிய முன்னேற்றம் செய்வதற்கு யெகோவாவின் ஆசீர்வாதம் நிச்சயம் தேவை. (1 கொ. 3:6) எனவே, பைபிள் படிப்பின் ஆரம்பத்திலும் முடிவிலும் ஜெபம் செய்வது பொருத்தமானது. ஆட்கள் கிறிஸ்தவ ஜெபங்களைப் பற்றி அறிந்திருந்தால் பெரும்பாலும் முதல் படிப்பையே ஜெபத்துடன் ஆரம்பிக்கலாம். மற்றவர்களைப் பொறுத்தவரை, எப்போது ஜெபத்துடன் ஆரம்பிப்பது பொருத்தமானது என்பதை விவேகத்துடன் தீர்மானிக்க வேண்டும். சங்கீதம் 25:4, 5-யும் 1 யோவான் 5:14-யும் பயன்படுத்தி, ஜெபம் செய்வதன் அவசியத்தை மாணாக்கருக்குப் புரிய வைக்கலாம்; மேலும், யோவான் 15:16-ஐ உபயோகித்து, இயேசு கிறிஸ்துவின் மூலம் யெகோவாவிடம் ஜெபிப்பதன் அவசியத்தை விளக்கலாம்.
2 பைபிள் படிப்பு நடத்துகையில் யார் ஜெபம் செய்ய வேண்டும்? ஒரு சகோதரி நடத்தும் படிப்புக்கு முழுக்காட்டப்பட்ட சகோதரர் ஒருவர் சென்றால் அந்தச் சகோதரரே ஜெபம் செய்ய வேண்டும்; அந்தச் சகோதரி முக்காடிட்டு பைபிள் படிப்பை நடத்தினாலும்கூட அந்தச் சகோதரரே ஜெபம் செய்ய வேண்டும். (1 கொ. 11:5, 10) மறுபட்சத்தில் ஒரு சகோதரி நடத்தும் படிப்புக்கு முழுக்காட்டப்படாத ஆண் பிரஸ்தாபி சென்றால் அந்தச் சகோதரி ஜெபம் செய்யலாம். இந்தச் சந்தர்ப்பத்தில் ஜெபிக்கும்போதும் படிப்பு நடத்தும்போதும் அவர் தலையை முக்காடிட்டிருக்க வேண்டும்.
3 ஜெபத்தில் என்ன விஷயங்களைச் சேர்த்துக்கொள்ளலாம்: பைபிள் படிப்பில் நீண்ட ஜெபங்களைச் செய்ய வேண்டியதில்லை, ஆனால் அவை குறிப்பாய் இருக்க வேண்டும். படிப்பில் கடவுளுடைய ஆசீர்வாதத்தைக் கேட்பதுடனும், கற்றுக்கொண்ட சத்தியங்களுக்காக நன்றி தெரிவிப்பதுடனும்கூட, போதனைகளுக்கு மூலாதாரம் யெகோவா என்பதால் அவருக்குத் துதி செலுத்துவதும் பொருத்தமானது. (ஏசா. 54:13) மாணாக்கர் மீது நமக்கிருக்கும் உண்மையான கரிசனையையும் யெகோவா பயன்படுத்துகிற அமைப்பிடம் நமக்கிருக்கும் போற்றுதலையும் வெளிப்படுத்துகிற வார்த்தைகளைப் பயன்படுத்தலாம். (1 தெ. 1:2-4; 2:7, 8) கற்றுக்கொள்வதைக் கடைப்பிடிப்பதற்கு மாணாக்கர் எடுக்கும் முயற்சிகளை ஆசீர்வதிக்கும்படி யெகோவாவிடம் ஜெபிக்கும்போது ‘திருவசனத்தின்படி செய்கிறவர்களாயும்’ இருப்பதன் முக்கியத்துவத்தை அவரால் புரிந்துகொள்ள முடியும்.—யாக். 1:22.
4 ஜெபத்தால் கிடைக்கும் பலன்கள் ஏராளம். இது கடவுளுடைய ஆசீர்வாதத்தைப் பெற்றுத் தருகிறது. (லூக். 11:13) கடவுளுடைய வார்த்தையை படிப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது. நம் ஜெபங்களை மாணாக்கர் கேட்பதால், எப்படி ஜெபிப்பது என அவரால் கற்றுக்கொள்ள முடிகிறது. (லூக். 6:40) மேலும், யெகோவா மீதுள்ள அன்பினாலும், அவருடைய ஒப்பற்ற குணங்களிடமான போற்றுதலினாலும் செய்யப்படுகிற இருதயப்பூர்வமான ஜெபங்கள் அவருடன் தனிப்பட்ட பந்தத்தை வளர்த்துக்கொள்ள மாணாக்கருக்கு உதவுகின்றன.
[கேள்விகள்]
1. (அ) பைபிள் படிப்பின் ஆரம்பத்திலும் முடிவிலும் ஜெபம் செய்வது ஏன் பொருத்தமானது? (ஆ) பைபிள் படிப்பில் ஜெபம் செய்ய ஆரம்பிக்கும் முன்னர் என்ன செய்யலாம்?
2. ஒரு சகோதரி நடத்தும் படிப்புக்கு ஒரு முழுக்காட்டப்பட்ட சகோதரர் செல்லும்போதும் முழுக்காட்டப்படாத ஆண் பிரஸ்தாபி செல்லும்போதும் யார் ஜெபம் செய்ய வேண்டும்?
3. பைபிள் படிப்பில் என்ன விஷயங்களுக்காக ஜெபிப்பது பொருத்தமானது?
4. பைபிள் படிப்பின் ஆரம்பத்திலும் முடிவிலும் ஜெபம் செய்வது என்னென்ன பலன்களை பெற்றுத் தருகிறது?