கேள்விப் பெட்டி
◼ வீட்டு வாசலில் நின்று பைபிள் படிப்பு நடத்தும்போது ஜெபம் செய்ய வேண்டுமா?
பைபிள் படிப்பிற்கு முன்பும் பின்பும் ஜெபம் செய்வதனால் அநேக நன்மைகள் கிடைக்கின்றன. படிப்பின்போது அவருடைய சக்தியைத் தரும்படி யெகோவாவிடம் நாம் ஜெபத்தில் கேட்கிறோம். (லூக். 11:13) பைபிள் படிப்பின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ளவும், எப்படி ஜெபம் செய்ய வேண்டும் என்பதை மாணவர் கற்றுக்கொள்ளவும் ஜெபம் உதவுகிறது. (லூக். 6:40) எனவே, பைபிள் படிப்பின்போது சீக்கிரமாகவே மாணவருடன் சேர்ந்து ஜெபம் செய்ய ஆரம்பிப்பது நல்லது. இருந்தபோதிலும், சூழ்நிலைமைகள் வேறுபடலாம். ஒருவேளை, வீட்டு வாசலில் நின்று பைபிள் படிப்பு நடத்துகிறீர்கள் என்றால் அப்போது ஜெபம் செய்யலாமா வேண்டாமா என்பதை நடத்துபவர் பகுத்துணர வேண்டும்.
மிக முக்கியமாக, எப்படிப்பட்ட சூழ்நிலையில் பைபிள் படிப்பு நடத்தப்படுகிறது என்பதைக் கவனத்தில் கொள்வது அவசியம். வீட்டின் வாசல் கொஞ்சம் மறைவாக இருந்தால் பைபிள் படிப்பிற்கு முன்பும் பின்பும் சுருக்கமாகவும், விவேகமாகவும் ஜெபம் செய்யலாம். ஆனால், மற்றவர்களுடைய கவனத்தைக் கவரும் விதத்திலோ அல்லது மாணவரை தர்மசங்கடத்தில் ஆழ்த்தும் சூழ்நிலைமையில் இருந்தாலோ ஜெபம் செய்யாமல் இருப்பதே நல்லது. அதற்கு ஏற்ற சூழ்நிலைமை அமையும்வரை காத்திருக்கலாம். ஆக, பைபிள் படிப்பு நடத்தப்படும் சூழ்நிலையை வைத்து எப்போதுமுதல் ஜெபம் செய்ய ஆரம்பிப்பது என்பதை நாம் தீர்மானிக்க வேண்டும். இதற்கு சமயோசிதமாகச் சிந்தித்து தீர்மானம் எடுக்க வேண்டும்.—மார்ச் 2005 நம் ராஜ்ய ஊழியத்தில் பக்கம் 8-ஐப் பாருங்கள்.