மகா சபையில் யெகோவாவைத் துதியுங்கள்
1 ஒவ்வொரு வருடமும் நம் மாவட்ட மாநாடுகள் யெகோவாவைத் துதிப்பதற்கு அருமையான வாய்ப்பை நமக்கு அளிக்கின்றன. “மகா சபையிலே உம்மைத் துதிப்பேன்; திரளான ஜனங்களுக்குள்ளே உம்மைப் புகழுவேன்” என பாடிய தாவீதைப் போலவே நாமும் உணருகிறோம். (சங். 35:18) ஐக்கியப்பட்ட ஜனங்களாக நாம் யெகோவாவுக்குத் துதி சேர்க்கிறோம் என்பதை வரவிருக்கும் “கடவுளுக்குக் கீழ்ப்படிதல்” மாவட்ட மாநாட்டில் எப்படி வெளிக்காட்டலாம்?
2 இதைச் செய்வதற்கு ஒரு வழி நம்முடைய நடத்தையாகும். ஒரு மாநாட்டு வளாகத்தின் நிர்வாகத்தார் இவ்வாறு சொன்னார்கள்: “யெகோவாவின் சாட்சிகள் எவ்வளவு அருமையாக மாநாட்டை ஏற்பாடு செய்து நடத்துகிறார்கள் என்பதை வந்து பார்க்கும்படி இந்த வளாகத்தை வாடகைக்கு எடுத்துப் பயன்படுத்த விரும்பும் மற்ற மத அமைப்புகளிடம் சொல்கிறோம்.” இத்தகைய பெரும் பாராட்டுகளுக்கு, நம் தோற்றம், நம் ஒத்துழைப்பு, நம் நடத்தை மூலம் நாம் ஒவ்வொருவரும் பங்களிக்கிறோம், இதற்கான புகழ் அனைத்தும் யெகோவாவையே சேரும்.—1 பே. 2:12.
3 தனிப்பட்ட தோற்றம்: யெகோவாவுக்குத் துதி சேர்க்கும் விதத்தில் நம் ஆடையும் தோற்றமும் இருப்பதற்கு அடக்கம் தேவைப்படுகிறது. (1 தீ. 2:9, 10) ஊழியப் பள்ளி புத்தகத்தில் 132-ம் பக்கத்தில் இவ்வாறு சொல்லப்படுகிறது: “அடக்கமுள்ளவர் பிறரை அனாவசியமாக புண்படுத்துவதைக் குறித்து கவனமாக இருக்கிறார், தன்மீது மிதமீறிய கவனத்தையும் ஈர்ப்பதில்லை.” பல்வேறு நாடுகளில் அடக்கமற்ற விதத்தில் உடுத்துவது சர்வசாதாரணமாய் ஆகிவிட்டிருக்கிறது. இருந்தாலும், நேர்த்தியான விதத்தில் யெகோவாவை பிரதிநிதித்துவம் செய்ய நாம் எடுக்கும் முயற்சியை அவர் பெரிதும் போற்றுகிறார். (அப். 15:14) விளையாட்டு மைதானத்திலோ பொழுதுபோக்கு அரங்கத்திலோ மாநாடு நடத்தப்பட்டாலும் அந்த மாநாட்டின் மூன்று நாள் கூட்டமும் நம் “மகா சபை”யாக ஆகிவிடுகிறது. எனவே யெகோவாவுக்கு முன்பாகக் கூடிவருவதால், அகிலத்தில் முதன்மையானவரை மதிக்கும் விதத்தில் நாம் கண்ணியமாக உடுத்தி வர வேண்டும்.—1 நா. 29:11.
4 ஒவ்வொரு நாள் மாநாடு முடிந்த பின்பும் நம் தோற்றத்திற்குக் கவனம் செலுத்துவது அவசியம். ஓய்வாகப் பொழுதைக் கழிக்கும்போது அல்லது ரெஸ்டாரண்டில் சாப்பிடும்போது சௌகரியமான உடைகளை அணிந்து செல்ல விரும்பலாம்; அந்தச் சமயங்களிலும் நம்முடைய உடையும் தோற்றமும் “தேவபக்தியுள்ளவர்களென்று சொல்லிக்கொள்ளுகிற” விதத்தில் இருப்பது அவசியம். (1 தீ. 2:10) ஏற்றுக்கொள்ளத்தக்க உடை என்பது உலகத்தில் பொதுவாக உடுத்தப்படும் உடையை வைத்துத் தீர்மானிக்கப்படுவதில்லை. (1 யோ. 2:16, 17) பல்வேறு சூழலில் ஆண்களும், பெண்களும் அடக்கமான, நேர்த்தியான உடைகளை அணிந்திருப்பதைக் காட்டும் படங்கள் நம் கிறிஸ்தவ பிரசுரங்களில் உள்ளன. மாநாட்டு நகரத்தில் பேட்ஜ் கார்டுகளை அணிந்திருப்பது, எல்லா சமயங்களிலும் நாம் கிறிஸ்தவ ஊழியர்கள் என்பதை நினைப்பூட்டும்.—2 கொ. 6:3, 4.
5 யெகோவாவின் மேஜைக்கு மரியாதை காட்டுங்கள்: சர்வலோக பேரரசராகிய கர்த்தர் நமக்கு ஒரு விருந்தைத் தயார்படுத்தி இருக்கிறார். (ஏசா. 25:6; 1 கொ. 10:21) யெகோவாவின் ஆன்மீக மேஜையில் புசிப்பதைப் பெரும் பாக்கியமாக நாம் கருதுகிறோமென்றால் மூன்று நாட்களும் மாநாட்டில் கலந்துகொள்வதே நம்முடைய இலக்காக இருக்கும். தங்குமிடங்களுக்கும், போக்குவரத்திற்கும், வேலையிலிருந்து விடுப்பு எடுப்பதற்கும் நீங்கள் ஏற்பாடு செய்துவிட்டீர்களா? இருக்கைகளைக் கண்டுபிடிப்பதற்கும், உங்கள் சகோதரர்களுடன் கூட்டுறவை அனுபவிப்பதற்கும், ஆரம்ப பாட்டிலும் ஜெபத்திலும் அவர்களுடன் சேர்ந்து யெகோவாவைத் துதிப்பதற்கும் நேரங்காலத்தோடு மாநாட்டு மன்றத்துக்குச் செல்ல வேண்டும்; அதற்குத் தயாராவதற்கும், பயணிப்பதற்கும் போதுமான நேரத்தை ஒதுக்கி வைத்திருக்கிறீர்களா?—சங். 147:1.
6 யெகோவாவின் மேஜைக்கு மரியாதை காட்டுவது, நிகழ்ச்சிக்குக் கூர்ந்து கவனம் செலுத்துவதற்கும், மற்றவர்களுடன் அநாவசியமாக பேசிக்கொண்டிருப்பது, சாப்பிடுவது, நடைபாதையில் நடப்பது போன்றவற்றைத் தவிர்ப்பதற்கும் நம்மைத் தூண்டும். உண்மையும் விவேகமுமுள்ள அடிமை வகுப்பார் மூலம் தற்போது நமக்குத் தேவைப்படும் ஆன்மீக உணவை யெகோவா தருகிறார். (மத். 24:45, NW) இதில் எதையும் நாம் தவறவிடக் கூடாது. பெற்றோர் தங்கள் பிள்ளைகளுடன் சேர்ந்து உட்கார வேண்டும், முழுமையாக பயனடைய அவர்களுக்கு உதவ வேண்டும்.—உபா. 31:12.
7 மதிய இடைவேளையின்போது உணவு வாங்குவதற்காக மாநாட்டு மன்றத்திலிருந்து வெளியே செல்லாதபடிக்கு மதிய உணவை எடுத்து வரும்படி நாம் கேட்டுக்கொள்ளப்படுகிறோம். கடந்த வருட மாநாட்டிற்கு வந்த பெரும்பாலானவர்கள் இதைப் பின்பற்றியது பாராட்டுக்குரியது. இதை எல்லாரும் இந்த வருடமும் பின்பற்றுவது எவ்வளவு போற்றத்தக்கதாக இருக்கும்! (எபி. 13:17) இந்த ஏற்பாடு, நம் சகோதரர்களுடன் கட்டியெழுப்பும் கூட்டுறவை அனுபவித்து மகிழ்வதற்கு அருமையான சந்தர்ப்பத்தை அளிக்கிறது, யெகோவாவுக்குத் துதி சேர்க்கும் விதத்தில் ஐக்கியமும் சமாதானமும் நிலவும் சூழலுக்கு வழி செய்கிறது.—சங். 133:1.
8 சந்தர்ப்ப சாட்சி கொடுத்தல்: மாநாட்டு மன்றத்திற்கு வந்து போக பயணிக்கும்போது நம் உதடுகளால் யெகோவாவைத் துதிக்க நமக்கு அநேக வாய்ப்புகள் கிடைக்கின்றன. (எபி. 13:15) ரெஸ்டாரண்டில் சாப்பிடும்போதும் சரி, ஹோட்டல் பணியாளர்களிடம் பேசும்போதும் சரி, சாட்சி கொடுப்பதற்கு நாம் வழிகளைத் தேடுவோமாக. மாநாட்டில் கேட்ட முத்தான ஆன்மீக விஷயங்கள் நம் மனதிலும் இருதயத்திலும் ஏராளம் இருக்கும். இந்த அரும்பெரும் பொக்கிஷங்களைச் சந்தர்ப்ப வசமாக சந்திப்பவர்களிடம் நாம் பகிர்ந்து கொள்வோமாக.—1 பே. 3:15.
9 யெகோவாவை ‘சபைகளிலே துதிப்பதற்கு’ கிடைக்கும் இந்த வாய்ப்புக்காக நாம் ஆசை ஆசையாக காத்திருக்கிறோம். (சங். 26:12) “கடவுளுக்குக் கீழ்ப்படிதல்” மாவட்ட மாநாட்டில் ஒன்று சேர்ந்து யெகோவாவைத் துதிப்போமாக.
[கேள்விகள்]
1, 2. மாவட்ட மாநாடு என்ன வாய்ப்பை நமக்கு அளிக்கிறது, இதை என்ன வழிகளில் நாம் செய்ய முடியும்?
3, 4. மாநாட்டின் போதும், மாநாட்டிற்குப் பின்பும் கிறிஸ்தவ ஊழியர்களுக்கு உரிய விதத்தில் உடுத்துவதற்கு அடக்கம் எப்படி நமக்கு உதவும்?
5, 6. யெகோவாவின் ஆன்மீக மேஜைக்கு நாம் எப்படி மரியாதை காட்டலாம்?
7. மதிய உணவு சம்பந்தமாக நம்மிடம் என்ன கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறது, ஏன்?
8, 9. யெகோவாவைத் துதிப்பதற்கு வேறென்ன வாய்ப்புகளை மாநாடு நமக்கு அளிக்கிறது?
[பக்கம் 5-ன் பெட்டி]
மாவட்ட மாநாட்டு நினைப்பூட்டுதல்கள்
◼ நிகழ்ச்சி நேரம்: மூன்று நாட்களும் காலை 9:30 மணிக்கு நிகழ்ச்சி ஆரம்பமாகும். காலை 8:00 மணிக்கு கதவுகள் திறக்கப்படும். நிகழ்ச்சி ஆரம்பமாவதற்கு சில நிமிடங்கள் முன்பு, ஆரம்ப ராஜ்ய பாடல் பாடும்போது சேர்மன் மேடையில் அமர்ந்திருப்பார். அந்தச் சமயத்தில், கண்ணியமான முறையில் நிகழ்ச்சி ஆரம்பமாவதற்கு வசதியாக நாம் எல்லாரும் நம்முடைய இருக்கையில் அமர வேண்டும். நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை ஆகிய இரு தினங்களும் மாலை 5:05 மணிக்கும் ஞாயிற்றுக்கிழமை மாலை 4:10 மணிக்கும் முடிவடையும்.
◼ வாகனம் நிறுத்துமிடம்: வாகனம் நிறுத்துமிடமுள்ள எல்லா மாநாட்டு வளாகங்களிலும் முதலில் வருபவர்களுக்கு முதலிடம் என்ற அடிப்படையில் கட்டணமின்றி பயன்படுத்த அனுமதிக்கப்படும். அப்படி நிறுத்துவதற்கு மாநாட்டு பேட்ஜ் கார்டுகள் அடையாள அட்டைகளாக பயன்படுத்தப்படும். பொதுவாக இதற்கு குறைவான இடமே ஒதுக்கப்படுவதால் ஒரு காரில் ஒருவரோ இருவரோ வருவதற்குப் பதிலாக முடிந்தவரைக்கும் பலர் ஒன்றாக சேர்ந்து வர வேண்டும்.
◼ இருக்கைகளைப் பிடித்து வைப்பது: உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு அல்லது உங்கள் பைபிள் மாணாக்கர்களுக்கு மட்டுமே இருக்கைகளைப் பிடித்து வைக்கலாம்.
◼ நன்கொடைகள்: ஒரு மாவட்ட மாநாட்டை ஏற்பாடு செய்வதற்கு ஏகப்பட்ட செலவாகிறது. நம் ராஜ்ய மன்றத்திலோ மாநாட்டு வளாகத்திலோ உலகளாவிய வேலைக்கு மனமுவந்து நன்கொடைகள் அளிப்பதன் மூலம் நம் போற்றுதலைக் காட்டலாம். மாநாட்டில் செக்குகளை நன்கொடையாக அளிக்கும்போது அவற்றை “உவாட்ச் டவர்” என்ற பெயரில் எடுக்க வேண்டும்.
◼ மதிய உணவு: மதிய இடைவேளையின்போது உணவு வாங்குவதற்காக மாநாட்டு மன்றத்திலிருந்து வெளியே செல்லாதபடிக்கு தயவுசெய்து மதிய உணவை எடுத்து வாருங்கள். உங்கள் சீட்டின் அடியில் வைக்க முடிந்த சிறிய பைகளையும் டிபன் கேரியர்களையும் எடுத்து வரலாம். ஆனால் நடைபாதையை அடைத்துக் கொள்ளும் பெரிய பொருட்களை, சாமான்கள் வைக்கும் அறையில் வைக்க வேண்டும்.
◼ ரெக்கார்டிங்: வளாகத்திலுள்ள மின் அமைப்புடன் அல்லது ஒலி அமைப்புடன் எந்த ரெக்கார்டர்களையும் இணைக்கக் கூடாது; மற்றவர்களுக்கு எந்தத் தொந்தரவும் ஏற்படாத விதத்தில் மட்டுமே அதைப் பயன்படுத்த வேண்டும்.
◼ ஃபோட்டோ எடுப்பது: கூட்டம் நடக்கும்போது ஃபோட்டோ எடுக்க ஃபிளேஷைப் பயன்படுத்தக் கூடாது.
◼ பேஜர்களும் செல் ஃபோன்களும்: மற்றவர்களுடைய கவனத்தைத் திசைதிருப்பாதபடி இதை “செட்” செய்து வைத்திருக்க வேண்டும்.
◼ விபத்துகளும் அவசர நிலைகளும்: மாநாட்டு வளாகத்தில் மருத்துவ அவசர நிலை ஏற்படும்போது அருகிலுள்ள அட்டென்டண்டிடம் தயவுசெய்து சொல்லுங்கள்; அவர் உடனடியாக முதலுதவி இலாகாவிடம் சொல்லுவார்; அப்போது வளாகத்தில் முதலுதவி அளிக்க தகுதி பெற்றிருப்பவர் சூழ்நிலை எந்தளவுக்கு மோசமாக இருக்கிறது என்பதையும், என்ன உதவி அளிக்க வேண்டும் என்பதையும் தீர்மானிக்க முடியும்.
◼ ரெஸ்டாரண்டுகள்: பல இடங்களில், சேவைக்கு ஏற்ப டிப்ஸ் கொடுப்பது வழக்கமாக இருக்கிறது.
◼ ஹோட்டல்கள்: (1) தேவைக்கும் அதிகமான அறைகளைப் புக் செய்யாதீர்கள், அனுமதிக்கப்படுவதற்கும் அதிகமான ஆட்களை உங்களுடன் தங்க வைக்காதீர்கள். (2) புக் செய்த அறையை ரத்து செய்ய வேண்டுமென்றால் உடனடியாக ஹோட்டல் நிர்வாகத்தாரிடம் தெரிவியுங்கள். (3) சமைக்க அனுமதிக்கப்படாத அறைகளில் சமைக்காதீர்கள். (4) ஒவ்வொரு நாளும் ஹௌஸ்கீப்பருக்கு டிப்ஸ் கொடுங்கள். (5) ஹோட்டலில் தங்கும் நபர்கள் பயன்படுத்துவதற்கு இலவசமாகக் கொடுக்கும் காலை உணவு, காபி அல்லது ஐஸ் போன்றவற்றைத் தவறாகப் பயன்படுத்தாதீர்கள். (6) முக்கியமாக அதிக பிஸியாக இருக்கும் செக்-இன், செக்-அவுட் சமயத்தில் ஹோட்டல் பணியாளருடன் நடந்துகொள்ளும் விதத்தில் ஆவியின் கனியை வெளிக்காட்டுங்கள்.