கண்ணியத்தை வெளிக்காட்டுவதன்மூலம் கிறிஸ்துவைப் பின்பற்றுங்கள்
1 சர்வலோகப் பேரரசான யெகோவா கண்ணியத்தை அணிந்திருப்பதாக பைபிள் விவரிக்கிறது. (சங். 104:1, NW) சொல்லிலும் செயலிலும் தம் தகப்பனையும் அவருடைய ஏற்பாடுகளையும் மகிமைப்படுத்தும் விதத்தில் எப்போதும் இயேசு நடந்துகொண்டார். (யோவா. 17:4) வரவிருக்கிற “கிறிஸ்துவைப் பின்பற்றுங்கள்!” மாவட்ட மாநாடுகளில், இயேசுவைப் பின்பற்றுவதற்கும், யெகோவாவை மகிமைப்படுத்துவதற்கும் நம் ஒவ்வொருவருக்கும் வாய்ப்புகள் இருக்கின்றன.
2 கண்ணியமான வழிபாடு: யெகோவா நமக்காகத் தயார்படுத்தியிருக்கிற ஆன்மீக விருந்தில் கலந்துகொள்வதற்கு ஏற்பாடு செய்வதன்மூலம் நாம் யெகோவாவைக் கனப்படுத்தலாம். வெள்ளிக்கிழமை உட்பட மூன்று நாட்களும் மாவட்ட மாநாட்டில் கலந்துகொள்வதற்காக முதலாளியிடம் பேசி, உங்கள் வேலைகளை ஒழுங்குபடுத்தியிருக்கிறீர்களா? இருக்கைகளைக் கண்டுபிடிப்பதற்கும், ஆரம்பப் பாட்டு மற்றும் ஜெபத்தில் கலந்துகொள்வதற்கும் வேண்டி சீக்கிரமாகவே மாநாட்டு மன்றத்திற்குப் போய்ச்சேர திட்டமிட்டிருக்கிறீர்களா? உங்கள் சகோதரர்களுடன் சேர்ந்து மாநாட்டு மன்றத்திலேயே சாப்பிடுவதற்காக மதிய உணவு சம்பந்தமாகத் திட்டமிட்டிருக்கிறீர்களா? ஒவ்வொரு நாளும் மாநாட்டின் தொடக்கத்தில் இசை ஆரம்பிப்பதற்கு முன்பு, நம் இருக்கைகளில் போய் உட்காரும்படி சேர்மன் அன்புடன் சொல்கிறார்; அப்போது, உடனடியாக உரையாடுவதை நிறுத்திக்கொண்டு, நிகழ்ச்சி ஆரம்பமாவதற்கு நம் இருக்கைகளில் உட்கார வேண்டும்.
3 மனதை அலையவிடாமல் நிகழ்ச்சிகளுக்குக் கவனம் செலுத்துவதும்கூட நம் பரலோகத் தகப்பனைக் கனப்படுத்துகிறது. உள்ளூரில் நடந்த ஒரு மாவட்ட மாநாட்டைக் கவனித்த பத்திரிகைச் செய்தியாளர் ஒருவர், “கூடிவந்திருப்பவர்களின் பின்பற்றத்தக்க முன்மாதிரியைப் பார்த்து” மற்றவர்கள் வசீகரிக்கப்படுவார்கள் என்று எழுதினார். “சொல்லப்படும் விஷயங்களை மரியாதைக்குரிய விதத்தில் அமைதியாக இருந்து கேட்டு, ஆன்மீக காரியங்களிடம் தாங்கள் ஈர்க்கப்பட்டிருப்பதற்கு அவர்கள் அத்தாட்சி அளிக்கிறார்கள்” என்றும் அவர் எழுதினார். “வழக்கத்துக்கு மாறாக குவிந்திருந்த பிள்ளைகள் . . . , எல்லாரும் ஆச்சரியப்படும் விதத்தில் மரியாதையோடு நடந்துகொண்டதையும் அல்லது பரிசுத்த வேதாகமத்தில் வசனங்களைத் திறந்து பார்ப்பதில் மும்முரமாய் ஈடுபட்டிருந்ததையும்” அவர் குறிப்பிட்டார். நிகழ்ச்சிகள் நடக்கும்போது, அது அநாவசியமாகப் பேசிக்கொண்டிருப்பதற்கோ, எஸ்எம்எஸ் அனுப்புவதற்கோ, சாப்பிடுவதற்கோ, நடைபாதைகளில் வீணாகச் சுற்றிக்கொண்டிருப்பதற்கோ உரிய நேரமில்லை. இளைஞர்கள் தங்கள் பெற்றோருடன் சேர்ந்து உட்கார வேண்டும்; அப்போதுதான் அந்த நிகழ்ச்சியிலிருந்து பயன் அடைய பெற்றோர் அவர்களுக்கு உதவ முடியும். (உபா. 31:12; நீதி. 29:15) இதற்காக முயற்சிகள் எடுப்பது, மற்றவர்களை மதிக்கிறோம் என்பதையும் அளிக்கப்படுகிற முக்கியமான ஆன்மீக உணவுக்கு நன்றியுள்ளவர்களாய் இருக்கிறோம் என்பதையும் சுட்டிக்காட்டுகிறது.
4 கண்ணியமான தோற்றம்: கடந்த வருட மாவட்ட மாநாட்டில், “கிறிஸ்தவ கண்ணியத்தை எப்போதும் வெளிக்காட்டுங்கள்” என்ற பேச்சில் கொடுக்கப்பட்ட நினைப்பூட்டுதல்களுக்கு அநேகர் நன்றி தெரிவித்தார்கள்; தங்கள் உடையிலும் தோற்றத்திலும் கிறிஸ்தவ கண்ணியத்தை கடவுளுடைய ஊழியர்கள் வெளிக்காட்ட முயற்சி செய்ய வேண்டுமென அந்தப் பேச்சு வலியுறுத்தியது. இந்த வருடமும் இந்த விஷயத்திற்கு நாம் அதிக கவனம் செலுத்த வேண்டும். யெகோவாவிடமும் அவருடைய சாட்சிகளாக நாம் பெற்றிருக்கிற பாக்கியத்திடமும் நமக்குள்ள உணர்வுகளை நம் தோற்றம் பிரதிபலிக்கிறது. ‘தேவபக்தியுள்ளவர்களென்று சொல்லிக்கொள்ளுகிறவர்களுக்கு’ ஏற்ற விதத்தில் நாம் எப்போதும் உடுத்த வேண்டும்.—1 தீ. 2:9, 10.
5 நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும்போது மட்டுமே நம் தோற்றம் கண்ணியமானதாய் இருக்க வேண்டுமா? மாநாட்டு நகரத்திலே நாம் பேட்ஜ் கார்ட்டு அணிந்து செல்வதை அநேகர் கவனிப்பார்கள் என்பதை மனதில் வையுங்கள். மற்ற ஜனங்களிலிருந்து நாம் வேறுபட்டிருப்பதை நம் தோற்றம் வெளிக்காட்ட வேண்டும். எனவே, நிகழ்ச்சி முடிந்த பிறகு சாப்பிடப் போகிற சமயம் என ஓய்வாகப் பொழுதைக் கழிக்கிற எந்தச் சமயத்திலும் நம் உடை கிறிஸ்தவ ஊழியர்களுக்கு உகந்ததாய் இருக்க வேண்டும்; கிறிஸ்தவ மாநாட்டில் கலந்துகொள்ளும் நோக்கத்துடன் அந்த நகரத்திற்கு வந்திருப்பதால், ஜீன்ஸ், ஷாட்ஸ், டி-ஷர்ட்ஸ் போன்ற உடைகளை நாம் அணியக் கூடாது. கண்ணியமாய் உடுத்தும்போது அது அந்த வட்டாரத்தில் எப்பேர்ப்பட்ட சாட்சிகொடுக்கும்! நம்முடைய தோற்றம் கிறிஸ்தவ ஊழியர்களென நம்மை அடையாளம் காட்டுகிறபோது யெகோவா சந்தோஷப்படுகிறார்.
6 திருப்தி தரும் பலன்கள்: நம் மாவட்ட மாநாடுகளில் கிறிஸ்தவ கண்ணியத்தை வெளிக்காட்டுவது, சந்தர்ப்ப சாட்சி கொடுப்பதற்கு வாய்ப்புகளை ஏற்படுத்துகிறது; நம்மை கவனிப்பவர்கள் மனதில் நல்லெண்ணத்தையும் ஏற்படுத்துகிறது. ஒரு மாவட்ட மாநாடு முடிந்தபோது ஓர் அதிகாரி இவ்வாறு சொன்னார்: “இதுபோல நல்ல விதத்தில் நடந்துகொள்கிற ஜனங்களை நாங்கள் பார்த்ததே இல்லை. நீங்கள் மட்டும்தான் கடவுளுக்குப் பிரியமாக நடக்கிறீர்கள்.” கண்ணியத்தை வெளிக்காட்டுவது, ஒருவருக்கொருவர் மரியாதையையும் அன்பையும் காட்டுவதையும், யெகோவாவை மகிமைப்படுத்துவதையும் குறிக்கிறது. (1 பே. 2:12) நம்முடைய தகப்பனால் போதிக்கப்படுகிற பாக்கியத்திற்கு நன்றி உணர்வையும் நம்முடைய பயபக்தியையும் இது வெளிக்காட்டுகிறது. (எபி. 12:28) இந்த வருடம் நடைபெறவிருக்கிற “கிறிஸ்துவைப் பின்பற்றுங்கள்!” மாவட்ட மாநாட்டில் கலந்துகொள்ள ஆவலாய் காத்திருக்கும் சமயத்தில் கண்ணியத்தை வெளிக்காட்ட முயற்சி செய்வோமாக.
[கேள்விகள்]
1. கண்ணியத்தை வெளிக்காட்டுவதுடன் இந்த வருட மாவட்ட மாநாட்டின் பொருள் எப்படிச் சம்பந்தப்பட்டுள்ளது?
2. ஒவ்வொரு நாளும் மாநாட்டில் கலந்துகொள்ள நாம் தயாராவது யெகோவாவை எப்படிக் கனப்படுத்துகிறது?
3. மனதை அலையவிடாமல் நிகழ்ச்சிகளுக்குக் கவனம் செலுத்துவது எப்படி நம் வழிபாட்டைக் கண்ணியமிக்கதாய் ஆக்குகிறது?
4. மாநாட்டில் கலந்துகொள்ளும்போது நம் தோற்றம் ஏன் கண்ணியமானதாய் இருக்க வேண்டும்?
5. மாநாட்டு நகரத்திலே ஓய்வாகப் பொழுதைக் கழிக்கிறபோது நாம் எப்படிக் கண்ணியமான தோற்றத்தை வெளிக்காட்டலாம்?
6. கிறிஸ்தவ கண்ணியத்தை வெளிக்காட்டுவதால் கிடைக்கிற நல்ல பலன்கள் யாவை?
[பக்கம் 5-ன் பெட்டி]
மாவட்ட மாநாட்டு நினைப்பூட்டுதல்கள்
◼ நிகழ்ச்சி நேரம்: மூன்று நாட்களும் காலை 9:20-க்கு நிகழ்ச்சி ஆரம்பமாகும். காலை 8:00 மணிக்கு கதவுகள் திறக்கப்படும். ஆரம்ப ராஜ்ய இசை துவங்குகிறபோது நாம் எல்லாரும் நம்முடைய இருக்கையில் அமர வேண்டும். இது கண்ணியமான விதத்தில் நிகழ்ச்சி ஆரம்பமாக உதவும். வெள்ளிக்கிழமையும் சனிக்கிழமையும் மாலை 5:05-க்கும், ஞாயிற்றுக்கிழமை மாலை 4:10-க்கும் நிகழ்ச்சிகள் முடிவடையும்.
◼ வாகனம் நிறுத்துமிடம்: வாகனம் நிறுத்துமிடமுள்ள எல்லா மாநாட்டு வளாகங்களிலும் முதலில் வருபவர்களுக்கு முதலிடம் என்ற அடிப்படையில் அவற்றைப் பயன்படுத்த அனுமதிக்கப்படும். அப்படி நிறுத்துவதற்கு மாநாட்டு பேட்ஜ் கார்டுகள் அடையாள அட்டைகளாக பயன்படுத்தப்படும். உடல் ஊனமுற்றவர்களுக்குச் சொந்தமான வாகனங்கள் மட்டும் அவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள பகுதியில் நிறுத்த அனுமதிக்கப்படும். பொதுவாக வாகனங்களை நிறுத்துவதற்குக் குறைவான இடமே ஒதுக்கப்படும் என்பதால் ஒரு காரில் ஒருவரோ இருவரோ வருவதற்குப் பதிலாக முடிந்தவரைக்கும் பலர் ஒன்றாகச் சேர்ந்து வர வேண்டும்.
◼ இருக்கைகளைப் பிடித்து வைப்பது: உங்களுடைய காரில் பயணிப்பவர்களுக்கு அல்லது உங்கள் குடும்பத்தினருக்கு மட்டுமே இருக்கைகளைப் பிடித்து வைக்கலாம்.
◼ மதிய உணவு: மதிய இடைவேளையின்போது உணவு வாங்குவதற்காக மாநாட்டு மன்றத்திலிருந்து வெளியே செல்லாதபடிக்கு தயவுசெய்து மதிய உணவை கையோடு எடுத்து வாருங்கள். உங்கள் சீட்டிற்கு அடியில் வைக்க முடிந்த சிறிய டிபன் கேரியர்களை எடுத்து வரலாம். பெரிய பெரிய டிபன் கேரியர்கள், கண்ணாடி பாத்திரங்கள், மதுபானங்கள் ஆகியவை மாநாட்டு மன்றத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டா.
◼ நன்கொடைகள்: ஒரு மாவட்ட மாநாட்டை ஏற்பாடு செய்வதற்கு ஏகப்பட்ட செலவாகிறது. எனவே, ராஜ்ய மன்றத்திலோ மாநாட்டு வளாகத்திலோ உலகளாவிய வேலைக்கு மனமுவந்து நன்கொடைகள் அளிப்பதன் மூலம் நம் நன்றி உணர்வைக் காட்டலாம். மாநாட்டில் செக்குகளை நன்கொடையாக அளிக்கும்போது அவற்றை “Watch tower” என்ற பெயரில் எடுக்க வேண்டும்.
◼ விபத்துகளும் அவசர நிலைகளும்: சின்னச்சின்ன விஷயங்களுக்கெல்லாம் செல் ஃபோனில் அநேகர் அழைப்பதாக அவசர உதவி அழைப்புக் குழுவினர் புகார் செய்திருக்கிறார்கள். மாநாட்டு வளாகத்தில் மருத்துவ அவசர நிலை ஏற்படும்போது அருகிலுள்ள அட்டென்டண்டிடம் தயவுசெய்து சொல்லுங்கள்; அவர் உடனடியாக முதலுதவி இலாகாவிடம் சொல்லுவார்; அப்போதுதான் சூழ்நிலை எந்தளவுக்கு மோசமாக இருக்கிறது என்பதையும், என்ன உதவி அளிக்க வேண்டும் என்பதையும் வளாகத்தில் முதலுதவி அளிக்க தகுதி பெற்றிருப்பவரால் தீர்மானிக்க முடியும்.
◼ காது கேளாதோருக்கு: பெங்களூரில் நடைபெறவிருக்கும் ஆங்கில மாநாட்டில் மட்டும் நிகழ்ச்சிகளை அமெரிக்கன் சைகை மொழியிலும் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
◼ ரெக்கார்டிங்: வளாகத்திலுள்ள மின் அமைப்புடன் அல்லது ஒலி அமைப்புடன் எந்த ரெக்கார்டர்களையும் இணைக்கக் கூடாது; மற்றவர்களுக்கு எந்தத் தொந்தரவும் ஏற்படாத விதத்தில் மட்டுமே அவற்றைப் பயன்படுத்த வேண்டும்.
◼ சென்ட்டுகளின் உபயோகம்: பெரும்பாலான மாநாடுகள் நாலா பக்கமும் மூடியிருக்கும் அரங்கங்களில் நடைபெற இருக்கின்றன; அவற்றில் செயற்கை முறை காற்றுப்போக்கு வசதிகளே உள்ளன. அதனால், சுவாசக் கோளாறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் உள்ளவர்களைச் சிரமப்படுத்தாதபடி, மூக்கைத் துளைக்கும் சென்ட்டுகளைப் பயன்படுத்தாமல் இருப்பது தயவான செயலாகும்.—1 கொ. 10:24.
◼ மறுசந்திப்புப் படிவங்கள்: மாநாட்டு சமயத்தில் சந்தர்ப்ப சாட்சி கொடுத்ததன் பலனாக ஆர்வமுள்ள எவரையாவது நாம் கண்டுபிடித்திருந்தால், ப்ளீஸ் ஃபாலோ அப் (S-43) படிவத்தில் குறிப்பிட வேண்டும். பிரஸ்தாபிகள் இந்தப் படிவங்களில் ஒன்றிரண்டை எடுத்துவர வேண்டும். இவை மாநாட்டிலுள்ள புத்தக இலாகாவிலும் கிடைக்கும். பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை மாநாட்டு புத்தக இலாகாவிலோ, வீடு திரும்பிய பின் உங்கள் சபை செயலரிடமோ சமர்ப்பிக்கலாம்.—பிப்ரவரி 2005 தேதியிட்ட நம் ராஜ்ய ஊழியத்தில் பக்கம் 6-ஐக் காண்க.
◼ ரெஸ்டாரன்ட்டுகள்: பல இடங்களில், சேவைக்கு ஏற்ப 10 முதல் 15 சதவீத டிப்ஸ் கொடுப்பது வழக்கமாக இருக்கிறது.
◼ ஓட்டல்கள்: (1) தயவுசெய்து தேவைக்கு அதிகமான அறைகளை புக் செய்யாதீர்கள், அனுமதிக்கப்படுவதற்கும் அதிகமான ஆட்களை உங்களுடன் தங்க வைக்காதீர்கள். (2) புக் செய்த அறையை ரத்து செய்ய வேண்டுமென்றால் உடனடியாக ஓட்டல் நிர்வாகத்தாரிடம் தெரிவியுங்கள். (3) லக்கேஜை எடுத்துச் செல்ல உதவும் தள்ளுவண்டிகளை உடனடி உபயோகத்திற்கு மட்டுமே பயன்படுத்துங்கள், மற்றவர்களும் பயன்படுத்துவதற்கு வசதியாக உடனடியாக அவற்றைத் திருப்பிக்கொடுங்கள். (4) சமைக்க அனுமதிக்கப்படாத அறைகளில் சமைக்காதீர்கள். (5) ஒவ்வொரு நாளும் அறையை ஒழுங்குபடுத்த உதவும் ஹௌஸ்கீப்பருக்கு டிப்ஸ் கொடுங்கள். (6) ஓட்டலில் தங்கும் நபர்களுக்கு இலவசமாகக் கொடுக்கப்படுகிற காலை உணவு, காபி அல்லது ஐஸ் போன்றவற்றை கிறிஸ்தவர்களான நாம் தவறாகப் பயன்படுத்தக் கூடாது. (7) எல்லா சமயத்திலும் ஓட்டல் பணியாளருடன் நடந்துகொள்ளும் விதத்தில் ஆவியின் கனியை வெளிக்காட்டுங்கள். (8) சிபாரிசு செய்யப்படுகிற தங்குமிடங்களுக்கான பட்டியலில் அறை வாடகையாக குறிப்பிடப்பட்டுள்ள தொகை, வரிக் கட்டணம் சேர்க்கப்படாத ஒரு நாள் வாடகையாகும். நீங்கள் கேட்காத அல்லது பயன்படுத்தாத பொருள்களுக்கென கூடுதல் தொகையைச் செலுத்தச் சொன்னால் அவற்றைச் செலுத்தாமல், உடனடியாக மாநாட்டிலுள்ள அறைவசதி இலாகாவுடன் தொடர்புகொள்ளுங்கள். (9) உங்கள் ஓட்டல் அறை சம்பந்தமாக ஏதேனும் பிரச்சினை எழுந்தால், அறைவசதி இலாகாவிடம் மாநாட்டின்போதே மறக்காமல் தெரிவியுங்கள்.