ஆன்மீக விருந்துக்கு நீங்கள் தயாரா?
1 விருந்து என்றால் அதற்கு ஏகப்பட்ட தயாரிப்புகளைச் செய்ய வேண்டும். உணவுப் பொருள்களை வாங்க வேண்டும், ருசியாகச் சமைக்க வேண்டும், நேர்த்தியாக எடுத்து வைக்க வேண்டும். உணவை யார் பரிமாறுவது, எப்படிப் பரிமாறுவது என்பதையெல்லாம் முன்னதாகவே திட்டமிட வேண்டும். அதோடு, உணவு பரிமாறும் இடத்தைத் தயார்படுத்த வேண்டும். விருந்தினர்களும் தயாராக வேண்டும்; அதுவும் அவர்கள் தொலைதூரத்திலிருந்து பயணப்பட்டு வர வேண்டியிருந்தால் சொல்லவே வேண்டாம். ஆனால், சுவையான, ஊட்டச்சத்துமிக்க உணவை உற்றார் உறவினர்களுடன் சேர்ந்து உண்டு மகிழ்வதற்காக எத்தனை வேலைகள் செய்தாலும் தகுந்ததுதான். உலகெங்குமுள்ள யெகோவாவின் சாட்சிகள் விரைவில் ஓர் ஆன்மீக விருந்தை அனுபவிக்கப் போகிறார்கள்; ஆம், “விழிப்புடன் இருங்கள்!” என்ற தலைப்பில் பெரிய அளவிலோ, சிறிய அளவிலோ நடைபெறவுள்ள மாவட்ட மாநாட்டை ருசிக்க அவர்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள். இந்த மாநாட்டு நிகழ்ச்சிகளைத் தயாரித்து வழங்குவதற்காகவும் மற்ற காரியங்களைத் தயார்படுத்துவதற்காகவும் ஏற்கெனவே பல வேலைகள் செய்யப்பட்டிருக்கின்றன. இந்த மாநாட்டுக்கு நாம் அனைவரும் அழைக்கப்பட்டிருக்கிறோம். இதில் கலந்துகொண்டு முழுமையாய்ப் பயனடைய தனிப்பட்ட விதத்தில் நாமும் தயாராக வேண்டும்.—நீதி. 21:5, NW.
2 முழுமையாய்ப் பயனடையுங்கள்: ஆன்மீக விருந்தில் கலந்துகொண்டு அங்கு பரிமாறப்படும் எல்லா உணவையும் ருசிக்க நீங்கள் திட்டவட்டமான ஏற்பாடுகளைச் செய்துவிட்டீர்களா? நீங்கள் மாநாட்டின் முதல் நாள் உட்பட எல்லா நாட்களும் கலந்துகொள்ளப் போவதைத் தெரிவிக்க, தேவைப்பட்டால் உங்கள் முதலாளியிடம் பேசுங்கள். போக்குவரத்து ஏற்பாடுகளையும் தங்குவதற்கான ஏற்பாடுகளையும் ஏற்கெனவே செய்துவிட்டீர்களா? வயதானவர்களையும் சுகவீனர்களையும் உதவி தேவைப்படுகிற மற்றவர்களையும் கவனித்துக்கொள்வதற்குத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளனவா என்பதை மூப்பர்கள் உறுதிசெய்துகொள்ள வேண்டும்.—எரே. 23:4; கலா. 6:10.
3 சில நாடுகளில் சர்வதேச மாநாடுகள் நடைபெறும். இம்மாநாடுகளுக்குக் குறிப்பிட்ட சில சபைகளும் வெளிநாட்டுச் சகோதரர்களுமே அழைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை நினைவில் வையுங்கள். கிளை அலுவலகம் இவற்றிற்கான ஏற்பாடுகளைச் செய்கையில், இருக்கை வசதிகளையும் ஓட்டல் அறை வசதிகளையும் கருத்தில் கொண்டு எத்தனை பேரை அழைக்கலாமெனக் கவனமாகக் கணக்கிட்டிருக்கிறது. அழைக்கப்படாத பிரஸ்தாபிகள் இப்படிப்பட்ட சர்வதேச மாநாடுகளில் ஒன்றிற்குச் சென்றால் அங்கு நெரிசல் அதிகமாகலாம்.
4 மாநாட்டின் ஒவ்வொரு நாளும் முன்னதாகவே வந்துவிடுங்கள்; அப்போதுதான் நிகழ்ச்சி ஆரம்பமாவதற்கு முன்னரே இருக்கையைக் கண்டுபிடிக்க முடியும். நிகழ்ச்சி ஆரம்பமாவதற்கு முன்பு ஒரு சில நிமிடங்களுக்கு நிகழ்ச்சிநிரலைப் பார்வையிடுங்கள். இது, சொல்லப்படும் விஷயங்களைக் கவனித்துக் கேட்க உங்கள் இருதயத்தைப் பக்குவப்படுத்தும் அல்லது தயார்படுத்தும். (எஸ்றா 7:10) சேர்மேன் அறிவித்த பிறகு துவங்கும் இன்னிசையைக் கேட்டு மகிழுங்கள்; பின்னர், ஆரம்பப் பாடலிலும் ஜெபத்திலும் கலந்துகொள்ளத் தயாராய் இருங்கள்.
5 மாநாட்டில் குடும்பத்தார் எல்லாரும் சேர்ந்து உட்கார வேண்டும்; அப்போதுதான், நிகழ்ச்சியைப் பிள்ளைகள் கூர்ந்து கவனிக்கிறார்களா எனப் பெற்றோர் உறுதிசெய்துகொள்ள முடியும். (உபா. 31:12) வசனங்கள் வாசிக்கப்படும்போது எல்லாரும் தங்கள் பைபிளில் அவற்றைத் திறந்து பார்க்க வேண்டும். சுருக்கமாகக் குறிப்புகளை எழுதுவது, கூர்ந்து கவனிக்க உங்களுக்கு உதவும். அதோடு, பேச்சுகளின் முக்கியக் குறிப்புகளைப் பின்னர் நினைவுபடுத்திப் பார்க்க உதவும். நிகழ்ச்சி நடைபெறுகையில் அநாவசியமாகப் பேசுவதையோ இடையிடையே எழுந்து செல்வதையோ தவிருங்கள். உங்களிடம் செல்ஃபோன் இருந்தால் நிகழ்ச்சியின்போது உங்களுடைய கவனத்தையோ மற்றவர்களுடைய கவனத்தையோ அது திசைதிருப்பாதபடி பார்த்துக்கொள்ளுங்கள். மாநாட்டின் ஒவ்வொரு நாள் முடிவிலும் உங்கள் மனதைத் தொட்ட விஷயங்களைப் பற்றி மற்றவர்களுடன் ஏன் பேசக் கூடாது?
6 மாவட்ட மாநாட்டின்போது நம் சகோதர சகோதரிகளுடன் நெருங்கிய பந்தத்தை அனுபவித்து மகிழும் வாய்ப்பு நமக்குக் கிடைக்கிறது; இதுபோன்ற நிகரற்ற பந்தத்தை உலகில் வேறு யாரும் அனுபவிப்பதில்லை. (சங். 133:1-3; மாற். 10:29, 30) அருகே உட்கார்ந்திருப்பவர்களிடம் உங்களை அறிமுகப்படுத்திக்கொண்டு, மதிய இடைவேளையின்போது அவர்களுடன் ஏன் பேசிப் பழகக்கூடாது? இது, ஹோட்டலுக்குப் போவதற்குப் பதிலாக எளிய உணவை எடுத்து வந்து மாநாட்டு மன்றத்தில் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளில் ஒன்று. ‘ஒருவருக்கொருவர் ஊக்கம் பெறுவதற்கான’ இந்த வாய்ப்பை ஒருபோதும் தவறவிடாதீர்கள்.—ரோ. 1:11, 12.
7 உடை: உடைகளின் ஓரங்களிலே தொங்கல்களை உண்டாக்கி, அந்தத் தொங்கல்களுக்கு மேலாக நீலநிற நாடாவைக் கட்டும்படி இஸ்ரவேலருக்கு யெகோவா கட்டளை கொடுத்திருந்தது கவனிக்க வேண்டிய விஷயம். (எண். 15:37-41) அவர்கள் யெகோவாவை வழிபடுவதற்கெனப் பிரித்து வைக்கப்பட்ட மக்கள் என்பதை நினைப்பூட்டும் ஓர் அடையாளமாக அது இருந்தது. இன்று, மாநாடுகளுக்குச் செல்லும்போது கண்ணியமாகவும் அடக்கமாகவும் நாம் உடை உடுத்துவது உலக மக்களிலிருந்து நம்மைப் பிரித்துக் காட்டுகிறது. மாநாடு முடிந்து ஹோட்டல்களில் சாப்பிடச் செல்லும்போதுகூட மற்றவர்களுக்கு அது சிறந்த சாட்சியாய் அமைகிறது. எனவே, என்ன உடை அணியப் போகிறீர்களென முன்கூட்டியே கவனமாய் யோசியுங்கள்.
8 அன்பைச் செயலில் காட்டுங்கள்: மாநாட்டுக்கு வரும் சிலர் தங்கள் நண்பர்களுக்காகவும் உறவினர்களுக்காகவும் ஏராளமான இருக்கைகளை எப்போதும் பிடித்து வைப்பது தெரிய வந்திருக்கிறது. சிலர் அங்குள்ள அட்டன்டண்டுகளோடு ஒத்துழைக்க மறுத்திருக்கிறார்கள், கிறிஸ்தவர்களுக்குப் பொருந்தாத விதத்திலும் பேசியிருக்கிறார்கள். நிச்சயமாகவே, நான்-முதல் என்ற மனப்பான்மை நல்லது செய்பவராக ஒருவரை அடையாளம் காட்டுவதில்லை; யெகோவா தேவனுக்குத் துதியைக் கொண்டுவருவதுமில்லை. ஆகவே, நாம் அன்பும், பொறுமையும், ஒத்துழைப்பும் காண்பிக்கிறவர்களாய் இருப்போமாக. (கலா. 5:22, 23, 25) இருக்கைகளைப் பிடித்து வைப்பது சம்பந்தமான நினைப்பூட்டுதல்களை நாம் மனதில் பதிய வைத்திருக்கிறோமா? ‘சொந்த விருப்பங்களை நாடாத’ அன்பை நாம் காட்ட வேண்டும். (1 கொ. 13:5) இயேசு, தன்னலமற்ற அன்பே தம்முடைய சீடர்களை அடையாளம் காட்டும் முக்கிய அம்சமென குறிப்பிட்டார். (யோவா. 13:35) அதிகப்படியான இருக்கைகளைப் பிடித்து வைத்தால், கிறிஸ்து காட்டிய அதே விதமான அன்பைச் செயலில் காட்டுகிறோமென சொல்ல முடியுமா? கிறிஸ்து பின்வருமாறு சொன்னதைச் செய்ய கிறிஸ்தவ அன்பு நம்மைத் தூண்ட வேண்டும்: “ஆகவே, மற்றவர்கள் உங்களுக்கு எதையெல்லாம் செய்ய வேண்டுமென்று விரும்புகிறீர்களோ, அதையெல்லாம் நீங்களும் அவர்களுக்குச் செய்ய வேண்டும்.”—மத். 7:12.
9 சாட்சி கொடுங்கள்: கொஞ்சம் முன்யோசனை இருந்தால், மாநாட்டு நகரத்தில் இருக்கும்போது மற்றவர்களுக்குச் சாட்சி கொடுக்க நமக்கு வாய்ப்புக் கிடைக்கலாம். ஒரு சகோதரர் மாநாடு முடிந்து மனைவியுடன் ஹோட்டலுக்குச் சென்றார்; அங்கே, தான் அணிந்திருந்த பேட்ஜை மட்டும் வெயிட்டரிடம் காட்டி, “நிறையப் பேர் இதே போன்ற பேட்ஜை அணிந்திருப்பதைக் கவனித்தீர்களா?” என்று கேட்டார். அதற்கு அவர், “கவனித்தேன், ஆனால் எதற்காக எல்லாரும் அதை அணிந்திருக்கிறார்கள் எனப் புரியவில்லை” என்றார். இப்படித்தான் அவர்கள் பேச ஆரம்பித்தார்கள்; கடைசியில், மாநாட்டுக்கு வரும்படி அந்தச் சகோதரர் அவரை அழைத்தார்.
10 பேச்சுகள், பேட்டிகள், நடிப்புகள் என அனைத்தையும் நம் சகோதரர்கள் தயாரித்து அளித்தாலும், இந்த வருடாந்தர ஆன்மீக விருந்தை நமக்கு அன்போடு வழங்குகிறவர் நம்முடைய பரலோகத் தந்தையான யெகோவாவே. (ஏசா. 65:13, 14) மூன்று நாளும் இந்த ஆன்மீக விருந்துக்குப் போய் அங்கு அளிக்கப்படவிருக்கும் அறுசுவை உணவுகள் அனைத்தையும் ரசித்து ருசித்து மகிழ்வதன் மூலம் நமக்கு விருந்தளிப்பவருக்கு நாம் நன்றியைக் காட்டுவோம். அதற்காக நீங்கள் திட்டவட்டமான ஏற்பாடுகளைச் செய்துவிட்டீர்களா?
[கேள்விகள்]
1. ஒரு விருந்துக்கு என்னென்ன தயாரிப்புகளைச் செய்ய வேண்டியிருக்கிறது?
2. ஆன்மீக விருந்தில் கலந்துகொண்டு அங்குப் பரிமாறப்படும் எல்லா உணவையும் ருசிக்க நீங்கள் என்ன செய்ய வேண்டும்?
3. சர்வதேச மாநாட்டிற்கு நாம் அழைக்கப்படாதபோது ஏன் அங்கு போகக் கூடாது?
4. ஒவ்வொரு நாளும் நிகழ்ச்சி ஆரம்பமாவதற்கு முன்னதாகவே நாம் தயாராய் இருக்க என்ன நினைப்பூட்டுதல்கள் உதவும்?
5. குடும்பமாக நாம் எப்படி நிகழ்ச்சியிலிருந்து முழுமையாய்ப் பயனடையலாம்?
6. நம்முடைய மாநாடுகளின் தனிச்சிறப்புமிக்க அம்சம் எது, நாம் எப்படி அதை முழுமையாய் அனுபவிக்கலாம்?
7. உடையைத் தேர்ந்தெடுப்பது சம்பந்தமாக நாம் எப்படி முன்கூட்டியே தயாராகலாம்?
8. இருக்கைகளைப் பிடித்து வைப்பதைக் குறித்ததில், எந்த பைபிள் நியமங்களை நாம் பின்பற்ற வேண்டும்?
9. மாநாட்டு நகரத்தில் இருக்கும்போது நாம் எப்படி மற்றவர்களுக்குச் சாட்சி கொடுக்கலாம்?
10. நமக்கு விருந்தளிப்பவரான யெகோவாவுக்கு நாம் எப்படி நன்றியைக் காட்டலாம்?
[பக்கம் 4-ன் பெட்டி]
மாவட்ட மாநாட்டு நினைப்பூட்டுதல்கள்
◼ நிகழ்ச்சி நேரம்: மூன்று நாட்களும் காலை 9:20 மணிக்கு நிகழ்ச்சி ஆரம்பமாகும். காலை 8:00 மணிக்குக் கதவுகள் திறக்கப்படும். ஆரம்ப இசை துவங்கப் போவதாக அறிவிக்கப்படும்போது நாம் எல்லாரும் நம்முடைய இருக்கையில் அமர்ந்திருக்க வேண்டும்; இது கண்ணியமான விதத்தில் நிகழ்ச்சி ஆரம்பமாக உதவும். வெள்ளிக்கிழமையும் சனிக்கிழமையும் மாலை 4:55 மணிக்கும், ஞாயிற்றுக்கிழமை மாலை 4:00 மணிக்கும் நிகழ்ச்சிகள் முடிவடையும்.
◼ வாகனம் நிறுத்துமிடம்: சில மாநாட்டு வளாகங்களில் வாகன நிறுத்துமிடத்தை மேற்பார்வை செய்கிற பொறுப்பு நம் சகோதரர்களிடம் ஒப்படைக்கப்படலாம்; அப்போது, முதலில் வருபவர்களுக்கு முதலிடம் என்ற அடிப்படையில் கட்டணமின்றி வாகனங்களை நிறுத்த இடம் அளிக்கப்படும். பொதுவாக வாகனங்களை நிறுத்துவதற்குக் குறைவான இடமே ஒதுக்கப்படும் என்பதால் ஒரு காரில் பலர் ஒன்றாகச் சேர்ந்து வருவதற்குக் கூடுமானவரை முயற்சி செய்ய வேண்டும்.
◼ இருக்கைகளைப் பிடித்து வைப்பது: உங்களுடைய காரில் பயணிப்பவர்களுக்கு அல்லது உங்கள் வீட்டாருக்கு மட்டுமே இருக்கைகளைப் பிடித்து வைக்கலாம்.
◼ மதிய உணவு: மதிய இடைவேளையின்போது உணவு வாங்குவதற்காக மாநாட்டு மன்றத்திலிருந்து வெளியே செல்லாதபடிக்குத் தயவுசெய்து மதிய உணவை எடுத்து வாருங்கள். பெரிய டிபன் கேரியர்கள், கண்ணாடிப் பாத்திரங்கள் ஆகியவை மாநாட்டு மன்றத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டா. மாநாட்டு நிர்வாகம் உணவுக்கோ சிற்றுண்டிக்கோ ஏற்பாடு செய்யாது.
◼ நன்கொடைகள்: ராஜ்ய மன்றத்திலோ மாநாட்டு வளாகத்திலோ உலகளாவிய வேலைக்கு மனமுவந்து நன்கொடைகள் அளிப்பதன் மூலம் மாநாட்டு ஏற்பாடுகளுக்கு நம் நன்றியுணர்வைக் காட்டலாம். மாநாட்டில் நன்கொடையாகச் செக்குகளைக் கொடுப்பதாக இருந்தால், “The Watch Tower Bible and Tract Society of India” என்ற பெயருக்குக் கொடுக்க வேண்டும்.
◼ விபத்துகளும் அவசர நிலைகளும்: மாநாட்டு வளாகத்தில் மருத்துவ ரீதியாக அவசர உதவி தேவைப்படும்போது அருகிலுள்ள அட்டென்டண்டிடம் தயவுசெய்து சொல்லுங்கள்; அவர் உடனடியாக முதலுதவி இலாகாவிடம் சொல்லுவார்; அப்போதுதான், வளாகத்தில் முதலுதவி அளிக்கத் தகுதி பெற்றிருப்பவரால், சூழ்நிலை எந்தளவுக்கு மோசமாக இருக்கிறது என்பதைத் தீர்மானித்து உதவி அளிக்க முடியும்.
◼ காலணிகள்: கால்களுக்குப் பொருந்தும் நேர்த்தியான காலணிகளை அணிவது மிகவும் நல்லது; இது படிக்கட்டுகள், இரும்பு சட்டங்கள் போன்றவற்றின் மீது நடக்கும்போது தடுக்கி விழுந்துவிடாதிருக்க உதவும்.
◼ காது கேளாதோருக்கு: பின்வரும் மாநாடுகளில் மட்டும் நிகழ்ச்சிகளை சைகை மொழியில் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது: பெங்களூர்-3 (ஆங்கிலம்); கோயம்புத்தூர் (தமிழ்); கொச்சி (மலையாளம்); பூனா-சின்ச்சுவாடு (ஆங்கிலம்).
◼ ரெக்கார்டிங்: வளாகத்திலுள்ள மின் அமைப்புடன் அல்லது ஒலி அமைப்புடன் எந்த ரெக்கார்டர்களையும் இணைக்கக் கூடாது; மற்றவர்களுக்கு எந்தத் தொந்தரவும் ஏற்படாத விதத்தில் மட்டுமே அவற்றைப் பயன்படுத்த வேண்டும்.
◼ குழந்தைகளுக்கான தள்ளுவண்டிகளும் மடக்கு நாற்காலிகளும்: குழந்தைகளை உட்கார வைத்துத் தள்ளிச் செல்லும் வண்டிகளையும் மடக்கு நாற்காலிகளையும் மாநாட்டு வளாகத்திற்கு எடுத்துவரக் கூடாது. ஆனாலும், பெற்றோரின் அருகிலுள்ள இருக்கையோடு சேர்த்து பொருத்தக்கூடிய குழந்தை-பாதுகாப்பு இருக்கைகளை எடுத்து வரலாம்.
◼ சென்ட்டுகள்: பெரும்பாலான மாநாடுகள் நாலா பக்கமும் மூடியிருக்கும் அரங்கங்களில் நடைபெற இருக்கின்றன; அவற்றில் செயற்கை முறை காற்றுப்போக்கு வசதிகளே உள்ளன. அதனால், சுவாசக் கோளாறு போன்ற பிரச்சினைகள் உள்ளவர்களைச் சிரமப்படுத்தாதபடி, நறுமணப் பொருள்களையோ வாசனைத் தைலங்களையோ சென்ட்டுகளையோ நாம் அளவாகப் பயன்படுத்துவது தயவான செயலாகும்.—1 கொ. 10:24.
◼ “தயவுசெய்து போய் பார்க்கவும்” படிவங்கள்: மாநாட்டு சமயத்தில் சந்தர்ப்ப சாட்சி கொடுத்ததன் பலனாக ஆர்வமுள்ள எவரையாவது நாம் சந்தித்திருந்தால், தயவுசெய்து போய் பார்க்கவும் (S-43-TL) படிவத்தைப் பயன்படுத்த வேண்டும். பிரஸ்தாபிகள் இந்தப் படிவங்களில் ஒன்றிரண்டை மாநாட்டுக்கு எடுத்துவர வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை மாநாட்டு புத்தக இலாகாவில் கொடுக்கலாம் அல்லது சபை செயலரிடம் பின்னர் கொடுக்கலாம்.—பிப்ரவரி 2005 தேதியிட்ட நம் ராஜ்ய ஊழியத்தில் பக்கம் 6-ஐப் பாருங்கள்.
◼ உணவகங்கள்: உணவகங்களில் உங்கள் நல்நடத்தை மூலம் யெகோவாவின் பெயருக்கு மகிமை சேருங்கள். உணவகங்களில் அளிக்கப்படுகிற சேவைக்கு ஏற்ப டிப்ஸ் கொடுப்பது பல இடங்களில் வழக்கமாக இருக்கிறது.
◼ ஓட்டல்கள்: (1) தயவுசெய்து தேவைக்கு அதிகமான அறைகளை புக் செய்யாதீர்கள், அனுமதிக்கப்படுவதற்கும் அதிகமானோரை உங்கள் அறையில் தங்க வைக்காதீர்கள். (2) ஓட்டலில் நீங்கள் பதிவு செய்திருக்கும் அறையை ரத்து செய்ய விரும்பினால் உடனடியாக அதன் நிர்வாகத்தாரிடம் தெரிவியுங்கள். (3) லக்கேஜை எடுத்துச் செல்ல உதவும் தள்ளுவண்டிகளை உடனடி உபயோகத்திற்கு மட்டுமே பயன்படுத்துங்கள், மற்றவர்களும் பயன்படுத்துவதற்கு வசதியாக உடனடியாக அவற்றைத் திருப்பிக்கொடுங்கள். (4) சமைக்க அனுமதிக்கப்படாத அறைகளில் சமைக்காதீர்கள். (5) ஒவ்வொரு நாளும் அறையை சுத்தம் செய்பவர்களுக்கு டிப்ஸ் கொடுங்கள். (6) ஓட்டலில் தங்கும் நபர்களுக்கு இலவசமாகக் கொடுக்கப்படுகிற காலை உணவு, காபி அல்லது ஐஸ் போன்றவற்றைத் தவறாகப் பயன்படுத்தாதீர்கள். (7) எல்லா சமயத்திலும், கடவுளுடைய சக்தி பிறப்பிக்கும் குணங்களை ஓட்டல் பணியாளரிடம் வெளிக்காட்டுங்கள். அவர்கள் எத்தனையோ பேரைக் கவனிக்க வேண்டியிருப்பதால், நாம் கனிவோடும், பொறுமையோடும், நியாயத்தன்மையோடும் நடந்துகொள்ளும்போது சந்தோஷப்படுவார்கள். (8) சிபாரிசு செய்யப்படுகிற தங்குமிடங்களுக்கான பட்டியலில் அறை வாடகையாகக் குறிப்பிடப்பட்டுள்ள தொகை, வரிக் கட்டணம் சேர்க்கப்படாத ஒரு நாள் வாடகையாகும். நீங்கள் கேட்காத அல்லது பயன்படுத்தாத பொருள்களுக்கென கூடுதல் தொகையைச் செலுத்தச் சொன்னால் அவற்றைச் செலுத்தாமல், உடனடியாக மாநாட்டிலுள்ள அறைவசதி இலாகாவுடன் தொடர்புகொள்ளுங்கள். (9) உங்கள் ஓட்டல் அறை சம்பந்தமாக ஏதேனும் பிரச்சினை எழுந்தால், அறைவசதி இலாகாவிடம் மாநாட்டின்போதே மறக்காமல் தெரிவியுங்கள்.