முன்னேறுகிற பைபிள் படிப்புகளை நடத்துதல்
பகுதி 9: சந்தர்ப்ப சாட்சி கொடுக்க மாணாக்கர்களைத் தயார்படுத்துதல்
1 இயேசுவே வாக்குப்பண்ணப்பட்ட மேசியா என்பதை அந்திரேயாவும் பிலிப்புவும் அறிந்துகொண்டபோது, அந்தச் சந்தோஷமான செய்தியை மற்றவர்களிடம் சொல்லாமல் அவர்களால் இருக்க முடியவில்லை. (யோவா. 1:40-45) இதைப் போலவே இன்று, பைபிள் படிக்கும் மாணாக்கர்கள் தாங்கள் கற்றுக்கொள்ளும் காரியங்களை விசுவாசிக்க ஆரம்பிக்கும்போது அவர்களாலும் அதைப் பற்றி பேசாமலிருக்க முடியாது. (2 கொ. 4:13) சந்தர்ப்ப சாட்சி கொடுக்க அவர்களை நாம் எப்படி உற்சாகப்படுத்தலாம், அதைத் திறம்பட்ட விதத்தில் செய்ய அவர்களை எப்படித் தயார்படுத்தலாம்?
2 பைபிளிலிருந்து கற்றுக்கொள்பவற்றைப் பற்றி மற்றவர்களிடம் அவர் பேசுகிறாரா என்று நீங்கள் மாணாக்கரிடம் கேட்கலாம். அவர் ஒருவேளை நண்பர்களையும் வீட்டிலுள்ள மற்றவர்களையும் தன்னோடு சேர்ந்து பைபிள் படிக்க வரும்படி கேட்கலாம். இப்படிப் படிப்பதற்குத் தங்களுக்கு ஆர்வமிருப்பதாக அவருடன் வேலை செய்பவர்களோ, பள்ளி தோழர்களோ, அவருக்குத் தெரிந்தவர்களோ எப்பொழுதாவது சொல்லியிருக்கிறார்களா என்று அவரிடம் கேளுங்கள். இந்த விதத்தில் அவர் சாட்சி கொடுக்க ஆரம்பிக்கலாம். யெகோவா தேவனையும் அவருடைய நோக்கங்களையும் பற்றி மற்றவர்களிடம் பேசும்போது விவேகத்துடன் நடந்துகொள்ள வேண்டும் என்பதையும், மரியாதையோடும் தயவோடும் பேச வேண்டும் என்பதையும் அவர் புரிந்துகொள்ள உதவுங்கள்.—கொலோ. 4:6; 2 தீ. 2:24, 25.
3 தங்கள் நம்பிக்கைகளைப் பற்றி பேசுதல்: தங்கள் நம்பிக்கைகளைப் பற்றி பேசும்போது கடவுளுடைய வார்த்தையைப் பயன்படுத்தும்படி பைபிள் மாணாக்கர்களுக்குக் கற்றுக்கொடுப்பது மிக மிக முக்கியம். படிப்பு நடத்துகையில் குறிப்பிட்ட சந்தர்ப்பங்களில், “நீங்கள் பைபிளிலிருந்து உங்கள் குடும்பத்தாருக்கு இந்தச் சத்தியத்தை எப்படி விளக்கிக் காட்டுவீர்கள்?” அல்லது “இதை உங்கள் நண்பருக்கு நிரூபித்துக் காட்ட எந்த பைபிள் வசனத்தைப் பயன்படுத்துவீர்கள்?” என மாணாக்கரிடம் கேட்கலாம். அவர் எப்படிப் பதிலளிக்கிறார் என்பதைக் கவனியுங்கள், பைபிளை ஆதாரமாக வைத்து எப்படிக் கற்பிக்கலாம் என்பதைக் காட்டுங்கள். (2 தீ. 2:15) இவ்வாறு செய்யும்போது, சந்தர்ப்ப சாட்சி கொடுப்பதற்கும் சபையாருடன் சேர்ந்து பிரசங்க வேலையில் ஈடுபட தகுதி பெறுவதற்கும் மாணாக்கரைத் தயார்படுத்துவீர்கள்.
4 எதிர்ப்பைச் சந்திப்பதற்கு பைபிள் மாணாக்கர்களைத் தயார்படுத்துவது ஞானமான செயலாகும். (மத். 10:36; லூக். 8:13; 2 தீ. 3:12) யெகோவாவின் சாட்சிகளைப் பற்றி மற்றவர்கள் கேள்விகள் கேட்கும்போது அல்லது ஏதாவது சொல்லும்போது மாணாக்கர்கள் சாட்சி கொடுப்பதற்கு வாய்ப்பு கிடைக்கிறது. யெகோவாவின் சாட்சிகள்—அவர்கள் யார்? அவர்களது நம்பிக்கை என்ன? என்ற சிற்றேடு ‘உத்தரவு சொல்ல ஆயத்தமாயிருக்க’ அவர்களுக்கு உதவுகிறது. (1 பே. 3:15) இந்தச் சிற்றேடு பைபிள் அடிப்படையிலான நம் நம்பிக்கைகளையும் செயல்களையும் பற்றி திருத்தமான தகவலை அளிக்கிறது. எனவே தங்களுடைய நலனில் அக்கறையுள்ள நண்பர்களும் குடும்பத்தாரும் புரிந்துகொள்வதற்குப் புதியவர்கள் இதைப் பயன்படுத்தலாம்.