குடும்ப அட்டவணை—குடும்பமாக வெளி ஊழியத்திற்கு
1 தம்முடைய பெயரைப் பிள்ளைகள் துதிப்பதைக் கண்டு யெகோவா ஆனந்தப்படுகிறார். (சங். 148:12, 13) இயேசுவின் நாளில் ‘குழந்தைகளும் பாலகரும் [கடவுளுக்குத்] துதி உண்டாகும்படி’ செய்தார்களே. (மத். 21:15, 16) இன்றும் பிள்ளைகள் துதிக்கிறார்கள். பெற்றோர்களே, உங்கள் பிள்ளைகள் கிறிஸ்தவ ஊழியத்தில் யெகோவாவை வைராக்கியமாகத் துதிப்பதற்கு நீங்கள் எப்படி உதவலாம்? சபை கூட்டங்கள் பற்றிய மேலே உள்ள கட்டுரையில் வலியுறுத்தப்பட்ட விதமாகவே, உங்கள் முன்மாதிரியின் மூலம் முக்கியமாக உதவலாம். “நீங்கள் சொல்வதைப் பிள்ளைகள் செய்வதில்லை; ஆனால், நீங்கள் செய்வதைச் செய்வார்கள்!” என ஒரு தகப்பன் சொன்னார்; பெரும்பாலான பெற்றோரின் கருத்தும் இதுதான்.
2 கடவுள் பயமுள்ள பெற்றோரால் வளர்க்கப்பட்ட ஒரு சகோதரி இவ்வாறு சொன்னார்: “சனிக்கிழமை காலையில் எழுந்திருக்கும்போது இன்றைக்கு ஊழியத்திற்கு போறோமாவென கேள்வியே கேட்டதில்லை. எங்களுக்குத் தெரியும் நாங்கள் போவோமென்று.” அதேபோல நீங்களும் வாரம் தவறாமல் குடும்பமாக வெளி ஊழியத்தில் கலந்துகொள்வதைப் பழக்கமாக்குவதன் மூலம் உங்கள் பிள்ளைகளின் மனதில் பிரசங்க வேலை எவ்வளவு முக்கியம் என்பதைப் பதிய வைக்கலாம். இது உங்களைப் பார்த்து அவர்கள் கற்றுக்கொள்வதற்கு உதவும்; அதோடு, அவர்களுடைய மனநிலை, பழக்கவழக்கங்கள், அவர்களில் உருவாகிவரும் திறமைகள் என இவற்றையெல்லாம் நீங்கள் கவனிப்பதற்கும் உதவும்.
3 படிப்படியாகப் பயிற்றுவித்தல்: ஊழியத்தில் பிள்ளைகள் சந்தோஷமாக ஈடுபடுவதற்கு, திறம்பட்ட விதத்தில் பேச அவர்களுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும். ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்ட அந்தச் சகோதரி இதையும் சொன்னார்: “எங்க அப்பா அம்மா ஊழியத்திற்குப் போகும்போது சும்மா அவர்கள் பின்னாலே நாங்கள் போய் வர மாட்டோம். காலிங் பெல்லை அழுத்துவதாக இருந்தாலும் சரி, துண்டுப்பிரதியைக் கொடுப்பதாக இருந்தாலும் சரி, ஊழியத்தில் எங்களுக்கும் பங்குண்டு என்பதை அறிந்திருந்தோம். ஒவ்வொரு வாரமும், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் ஊழியத்திற்குப் போவதற்கு முன் நன்கு தயாரித்துக்கொண்டு போனதால் என்ன பேசப் போகிறோமென அறிந்திருந்தோம்.” குடும்பப் படிப்பின் போதோ வேறொரு சமயத்திலோ ஒவ்வொரு வாரமும் ஊழியத்திற்காகத் தயார்படுத்த கொஞ்ச நேரம் செலவழிப்பதன் மூலம் நீங்களும் உங்கள் பிள்ளைகளுக்கு அத்தகைய பயிற்சியை அளிக்க முடியும்.
4 குடும்பமாக ஊழியத்தில் ஈடுபடுவது, உங்கள் பிள்ளைகளின் மனதில் சத்தியத்தை ஆழப் பதிய வைப்பதற்கு இன்னுமொரு வாய்ப்பை அளிக்கிறது. ஒரு கிறிஸ்தவ தகப்பன், மற்றொரு பள்ளத்தாக்கில் இருந்த கிராமத்தாருக்குத் துண்டுப்பிரதிகளை வினியோகிப்பதற்கு போக வர மொத்தம் 20 கிலோமீட்டர் நடந்து சென்றபோது தன் மகளையும் அழைத்துச் சென்றார். “அப்படி நடந்துபோகும்போதுதான் என் அப்பா என் மனதில் சத்தியத்தைப் பதிய வைத்தார்” என அவரது மகள் ஆசை ஆசையாக நினைத்துப் பார்த்துச் சொன்னார். (உபா. 6:7) உங்கள் வாராந்தர குடும்ப அட்டவணையில் வெளி ஊழியத்தையும் சேர்த்துக்கொள்ளும்போது நீங்களும்கூட அதேபோல ஆசீர்வதிக்கப்படுவீர்களாக.