யெகோவாவின் மகிமையை அறிவியுங்கள்
1 “பூமியின் குடிகளே, எல்லாரும் கர்த்தரைப் பாடுங்கள். ஜாதிகளுக்குள் அவருடைய மகிமையையும், சகல ஜனங்களுக்குள்ளும் அவருடைய அதிசயங்களையும் விவரித்துச் சொல்லுங்கள்” என சங்கீதக்காரன் பறைசாற்றினார். யெகோவா நமக்கு என்னென்ன காரியங்களைச் செய்திருக்கிறார், செய்துவருகிறார், செய்யப்போகிறார் என்பதை நாம் எண்ணிப் பார்க்கும்போது அவருடைய மகிமையை அறிவிக்க நம் இருதயம் நம்மைத் தூண்டுகிறது, அல்லவா?—சங். 96:1, 3.
2 நம் ஊழியத்தில்: கடவுளுடைய பெயரைத் தரித்திருப்பதற்கும் உலகெங்கும் அதைப் பகிரங்கமாகத் துதிப்பதற்கும் யெகோவாவின் சாட்சிகளாகிய நாம் சிலாக்கியம் பெற்றிருக்கிறோம். (மல். 1:11) நேர்மாறாக, கிறிஸ்தவமண்டல குருமார்களோ தங்கள் பைபிள் மொழிபெயர்ப்புகளிலிருந்து கடவுளுடைய பெயரையே துணிச்சலுடன் நீக்கியிருக்கிறார்கள்! வரவிருக்கும் மிகுந்த உபத்திரவத்திலிருந்து காப்பாற்றப்படுவதற்கு ஆட்கள் விசுவாசத்துடன் கடவுளுடைய பெயரில் கூப்பிடுவது அவசியம் என்பதால், அவருடைய பெயரை யாவரும் அறியும்படி செய்வது அவசரமான வேலையாகும். (ரோ. 10:13-15) அத்துடன், பூமியிலுள்ளவர்களுடைய சமாதானம் உட்பட, சர்வலோகத்தின் சமாதானமும் கடவுளுடைய பெயரை பரிசுத்தப்படுத்துவதிலேயே சார்ந்திருக்கிறது. ஆம், கடவுளுடைய செயல்கள் அனைத்தும் அவருடைய பெயருடன் சம்பந்தப்பட்டிருக்கின்றன.
3 “கர்த்தர் பெரியவரும், மிகவும் ஸ்தோத்திரிக்கப்படத்தக்கவருமாயிருக்கிறார்.” எனவே ஜனங்கள், ‘கர்த்தருக்கு அவருடைய நாமத்திற்குரிய மகிமையைச் செலுத்த’ வேண்டுமானால், அவரைப் பற்றிய சத்தியத்தை அறிந்திருப்பது அவசியம். (சங். 96:4, 8) ஆனால் கடவுள் இருப்பதையே சிலர் மறுக்கிறார்கள். (சங். 14:1) இன்னும் சிலரோ அவர் சக்தியற்றவர் எனச் சொல்லி அவரை அவதூறு செய்கிறார்கள், அல்லது மனிதருடைய காரியங்களில் துளியும் அக்கறை இல்லாதவர் எனச் சொல்லி வாதம் செய்கிறார்கள். ஆகவே, நம் படைப்பாளரையும் அவருடைய நோக்கங்களையும் அவருடைய அருமையான சுபாவத்தையும் பற்றிய திருத்தமான அறிவைப் பெற நல்மனமுள்ளோருக்கு உதவும்போது யெகோவாவை நாம் மகிமைப்படுத்துகிறோம்.
4 நம் நடத்தையில்: யெகோவாவின் நீதியுள்ள தராதரங்களுக்கு இசைய வாழ்வது அவரை மகிமைப்படுத்துகிறது. நம் நல்நடத்தை பிறருடைய கண்ணில் படாமல் போவதில்லை. (1 பே. 2:12) உதாரணத்திற்கு, சுத்தமான, நேர்த்தியான நம்முடைய தோற்றத்தைக் கண்டு மற்றவர்கள் நம்மைப் பாராட்டலாம்; இது, கடவுளுடைய வார்த்தையில் காணப்படும் நியமங்களுக்கு இசைய வாழ்வதால் கிடைக்கும் நன்மைகளைப் பற்றிப் பேச நமக்கு வாய்ப்பளிக்கிறது. (1 தீ. 2:9, 10) மற்றவர்கள் ‘நம்முடைய நற்கிரியைகளைக் கண்டு, பரலோகத்திலிருக்கிற நம் பிதாவை மகிமைப்படுத்தும்போது’ நாம் எவ்வளவாய் அகமகிழ்கிறோம்!—மத். 5:16.
5 ஆகையால், சொல்லாலும் செயலாலும் ஒவ்வொரு நாளும் நமது மகத்தான கடவுளைத் துதிப்போமாக; அதன் மூலம், “கர்த்தரைப் பாடி, அவருடைய நாமத்தை ஸ்தோத்திரித்து, நாளுக்கு நாள் அவருடைய இரட்சிப்பைச் சுவிசேஷமாய் அறிவியுங்கள்” என மகிழ்ச்சியோடு விடுக்கப்படும் அழைப்புக்குக் கீழ்ப்படிவோமாக.—சங். 96:2.