பைபிள் கற்பிக்கிறது புத்தகத்திலிருந்து பைபிள் படிப்புகளை எப்படி ஆரம்பிக்கலாம்
நம்மில் அநேகருக்கு, பைபிள் படிப்பை நடத்துவதென்றால் கொள்ளைப் பிரியம்; ஆனால் அதை ஆரம்பிப்பதுதான் பெரிய விஷயமாகத் தோன்றும். இது சம்பந்தமாக, பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? என்ற புதிய புத்தகம் நமக்கு உதவும். பக்கங்கள் 3-7-ல் உள்ள முன்னுரை, வீட்டுக்காரருடன் இந்தப் புத்தகத்திலிருந்து பைபிள் படிப்பை ஆரம்பிக்கும் நோக்கத்துடனேயே தயாரிக்கப்பட்டிருக்கிறது. ஊழியத்தில் அவ்வளவாய் அனுபவப்படாதவர்களும்கூட இப்புத்தகத்தின் உதவியுடன் பைபிள் படிப்புகளை எளிதில் ஆரம்பித்துவிடுவார்கள்.
◼ பக்கம் 3-ஐக் காட்டி இந்த முறையைக் கையாளலாம்:
உங்கள் பிராந்தியத்திலுள்ள மக்களின் மனங்களைக் குடையும் ஒரு செய்தியை அல்லது ஒரு பிரச்சினையைக் குறிப்பிட்ட பிறகு, பக்கம் 3-ல் தடித்த எழுத்துக்களில் கொடுக்கப்பட்டிருக்கும் கேள்விகளை வீட்டுக்காரரிடம் காண்பித்து, அவருடைய அபிப்பிராயத்தைக் கேளுங்கள். பின்பு பக்கங்கள் 4-5-க்குத் திருப்புங்கள்.
◼ அல்லது பக்கங்கள் 4-5-ஐச் சிறப்பித்துக் காட்டி ஆரம்பிக்கலாம்:
நீங்கள் இப்படிச் சொல்லலாம்: “இந்தப் படங்களில் காட்டப்பட்டுள்ள மாற்றங்களெல்லாம் நிஜமாகவே நடந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?” அல்லது இப்படிக் கேட்கலாம்: “இவற்றில் எந்த வாக்குறுதி நிறைவேற வேண்டுமென நீங்கள் ஆசைப்படுகிறீர்கள்?” அவர் சொல்கிற பதிலைக் கவனித்துக் கேளுங்கள்.
அவற்றிலுள்ள ஏதாவதொரு வசனத்தின்மீது வீட்டுக்காரர் விசேஷ ஆர்வம் காட்டினால், இப்புத்தகத்தில் அந்த வசனம் காணப்படுகிற பாராக்களைச் சிந்தித்து, அவ்விஷயத்தைப் பற்றி பைபிள் என்ன கற்பிக்கிறது என்பதை அவருக்குக் காண்பியுங்கள். (இதே பக்கத்திலுள்ள பெட்டியைப் பார்க்கவும்.) ஒரு பைபிள் படிப்பை எப்படி நடத்துவீர்களோ அப்படியே அந்த விஷயத்தைக் கலந்தாலோசியுங்கள். இதை முதல் சந்திப்பில், வாசற்படியில் நின்றபடியே ஐந்து, பத்து நிமிடங்களில் நடத்திவிடலாம்.
◼ பக்கம் 6-ஐக் காட்டி, அவரது உள்ளத்தில் இருப்பதை வரவழைப்பது மற்றொரு அணுகுமுறை:
இந்தப் பக்கத்தில் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் கேள்விகளுக்கு வீட்டுக்காரரின் கவனத்தைத் திருப்பி, இப்படிக் கேளுங்கள்: “இதில் ஏதோவொரு கேள்வியை நீங்கள் எப்பொழுதாவது கேட்டிருக்கிறீர்களா?” ஒரு கேள்வியின் மீது வீட்டுக்காரர் ஆர்வம் காட்டினால், அதற்கான பதில் இப்புத்தகத்தில் காணப்படுகிற பாராக்களுக்குத் திருப்புங்கள். (இதே பக்கத்திலுள்ள பெட்டியைப் பார்க்கவும்.) அதிலுள்ள தகவலை இருவருமாகச் சேர்ந்து கலந்தாலோசிக்கும்போது, நீங்கள் ஒரு பைபிள் படிப்பை நடத்த ஆரம்பித்திருக்கிறீர்கள்.
◼ பைபிள் படிப்பு நடத்தும் முறையைக் காட்டுவதற்கு ஒரு வழியாக, பக்கம் 7-ஐ உபயோகிக்கலாம்:
இந்தப் பக்கத்திலுள்ள முதல் மூன்று வாக்கியங்களை வாசியுங்கள். பின்னர் 3-ம் அதிகாரத்திற்குத் திருப்புங்கள். பாராக்கள் 1-3-ஐப் பயன்படுத்தி படிப்பு நடத்தப்படும் விதத்தைக் காட்டுங்கள். 3-வது பாராவில் உள்ள கேள்விகளுக்கான பதில்களை அடுத்த முறை கலந்தாலோசிப்பதாகத் தெரிவியுங்கள்.
◼ மறுபடி சந்திப்பதற்கு ஏற்பாடு செய்தல்:
முதல் படிப்பை முடிக்கும்போது, அந்தக் கலந்தாலோசிப்பைத் தொடருவதற்கு ஏற்பாடு செய்யுங்கள். நீங்கள் சொல்ல வேண்டியதெல்லாம் இவ்வளவுதான்: “முக்கியமான ஒரு விஷயத்தைப் பற்றி பைபிள் என்ன கற்பிக்கிறது என சில நிமிடங்களிலேயே கற்றுக்கொண்டோம், அல்லவா? அடுத்த முறை, [கலந்தாலோசிக்கப் போகிற கேள்வி ஒன்றைச் சொல்லுங்கள்] பற்றி கலந்தாலோசிப்போம். அடுத்த வாரம் இதே நேரத்தில் இங்கு வரட்டுமா?”
யெகோவா குறித்திருக்கும் நாள் நெருங்கி வரவர, கொடுக்கப்பட்டிருக்கும் வேலையைத் திறம்படச் செய்வதற்கு அவர் நம்மைத் தொடர்ந்து தயார்படுத்துகிறார். (மத். 28:19, 20; 2 தீ. 3:16, 17) எனவே, பைபிள் படிப்புகளை ஆரம்பிப்பதற்கு உதவும் இந்த அற்புதமான புதிய புத்தகத்தைத் திறம்பட உபயோகிப்போமாக.
[பக்கம் 3-ன் பெட்டி]
பக்கங்கள் 4-5-ல் உள்ள வசனங்களுக்கான விளக்கம்
◻ வெளிப்படுத்துதல் 21:4 (பக். 27-8, பாரா. 1-3)
◻ ஏசாயா 33:24; 35:5, 6 (பக். 36, பாரா 22)
◻ யோவான் 5:28, 29 (பக். 72-3, பாரா. 17-19)
◻ சங்கீதம் 72:16 (பக். 34, பாரா 19)
பக்கம் 6-ல் உள்ள கேள்விகளுக்கான பதில்கள்:
◻ நாம் ஏன் துன்பப்படுகிறோம்? (பக். 108, பாரா. 6-8)
◻ கவலைகளை நாம் எப்படிச் சமாளிக்கலாம்? (பக். 184-5, பாரா. 1-3)
◻ குடும்ப வாழ்க்கையில் நாம் எப்படி இன்னுமதிக சந்தோஷத்தைக் கண்டடையலாம்? (பக். 143, பாரா 20)
◻ இறந்த பிறகு நமக்கு என்ன நடக்கிறது? (பக். 58-9, பாரா. 5-6)
◻ இறந்துபோன நம்முடைய பிரியமானவர்களை மறுபடியும் பார்க்க முடியுமா? (பக். 72-3, பாரா. 17-19)
◻ கடவுளுடைய வாக்குறுதிகள் நிறைவேறும் என்பதில் நாம் எப்படி நிச்சயமாய் இருக்கலாம்? (பக். 25, பாரா 17)