அக்டோபரில் பைபிள் படிப்பை ஆரம்பிக்க உங்களால் முடியுமா?
1. அக்டோபரில் நாம் எதை அளிப்போம்?
1 அக்டோபரில் காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகளை அளிப்போம். ஆர்வம் காட்டுவோரிடம் உண்மைகளைத் தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களா? என்ற துண்டுப்பிரதியை அளித்து அவர்களுக்கு ஒரு பைபிள் படிப்பை ஆரம்பிக்க முயற்சி செய்வோம். இதை மறுசந்திப்பின்போது நாம் எப்படிச் செய்யலாம்?
2. பத்திரிகையைப் பெற்றுக்கொண்டவர்களிடம் மறுசந்திப்பின்போது உண்மைகளைத் தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களா? என்ற துண்டுப்பிரதியைக் கொடுத்து எப்படி பைபிள் படிப்பை ஆரம்பிக்கலாம்?
2 துண்டுப்பிரதியை எப்படிப் பயன்படுத்துவது: வீட்டுக்காரருக்கு ஆர்வம் இருந்தால் இப்படிச் சொல்லலாம்: “உங்களிடம் நான் கொடுத்த பத்திரிகைகள், பைபிளை ஆராய்ந்து படிக்க எல்லா மக்களையும் தூண்டும்; அவர்கள் எந்த மதத்தவர்களாய் இருந்தாலும் சரி எந்தப் பின்னணியைச் சேர்ந்தவர்களாய் இருந்தாலும் சரி! [அந்தத் துண்டுப்பிரதியை வீட்டுக்காரரிடம் கொடுத்து, முதல் பக்கத்திலுள்ள கேள்விகளைக் காட்டுங்கள்.] ஆர்வத்தைத் தூண்டும் இந்தக் கேள்விகளுக்கு, திருப்தியளிக்கும் பதில்கள் பைபிளில் உள்ளன. இந்தக் கேள்விகளில் எதையாவது நீங்கள் கேட்டதுண்டா? அதற்குப் பதில் தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களா?” வீட்டுக்காரர் குறிப்பிடுகிற கேள்விக்கான பதிலைத் துண்டுப்பிரதியிலிருந்து இருவருமாகக் கலந்தாலோசியுங்கள்; அதிலுள்ள ஒரு வசனத்தை வாசியுங்கள். பைபிள் என்ன கற்பிக்கிறது என்பதற்கு இது ஒரேவொரு உதாரணம்தான் எனச் சொல்லி, பைபிள் கற்பிக்கிறது புத்தகத்தை அவரிடம் கொடுங்கள். பொருளடக்கத்தில் அவர் தேர்ந்தெடுக்கிற அதிகாரத்திற்குத் திருப்பி அதன் ஆரம்பத்திலுள்ள ஓரிரு பாராக்களை அவரோடு கலந்தாலோசிக்கலாம். அல்லது, துண்டுப்பிரதியில் அவரோடு கலந்தாலோசித்த விஷயத்தைப் பற்றிய கூடுதலான தகவலை அந்தப் புத்தகத்திலிருந்து பேசலாம். அவற்றைப் பின்வரும் பக்கங்களில் காணலாம்:
● கடவுளுக்கு நம்மீது உண்மையிலேயே அக்கறை இருக்கிறதா? (பக். 9-11, பாரா. 6-10)
● போரும் துன்பமும் இல்லாத காலம் வருமா? (பக். 11-12, பாரா. 12-13)
● சாகும்போது நமக்கு என்ன ஏற்படுகிறது? (பக். 59-60, பாரா. 7-8)
● இறந்தவர்களை மறுபடியும் உயிரோடு பார்க்க முடியுமா? (பக். 71-72, பாரா. 13-15)
● கடவுள் என் ஜெபத்தைக் கேட்கவேண்டுமென்றால் அதை நான் எப்படிச் செய்ய வேண்டும்? (பக். 166-167, பாரா. 5-8)
● சந்தோஷமாக வாழ நான் என்ன செய்ய வேண்டும்? (பக். 9, பாரா. 4-5)
3. சூழ்நிலைக்குத் தக்கவாறு நம் அணுகுமுறையை எவ்வாறு மாற்றிக்கொள்ளலாம்?
3 முதல் முறையாக மறுசந்திப்பு செய்யும்போது பைபிள் கற்பிக்கிறது புத்தகத்திலிருந்து பைபிள் படிப்பை ஆரம்பிக்க சூழ்நிலை அனுமதிக்காவிட்டால், அடுத்த முறை அவரைச் சந்தித்து, அதே துண்டுப்பிரதியிலிருந்து வேறொரு கேள்வியைப் பற்றிக் கலந்துபேச ஏற்பாடு செய்யலாம். அவருடைய ஆர்வத்தைப் பொறுத்துப் பலமுறை இவ்வாறு செய்த பின் பைபிள் கற்பிக்கிறது புத்தகத்தைக் கொடுக்கலாம். நாம் பல்வேறு பின்னணிகளைச் சேர்ந்த மக்களிடம் பைபிள் விஷயங்களைப் பேசுவதால் சாதுரியமாகவும் விவேகமாகவும் நடந்துகொள்ள வேண்டும். பிரயோஜனமான இந்தத் துண்டுப்பிரதியை நன்கு பயன்படுத்தி, அக்டோபரில் பைபிள் படிப்பை ஆரம்பித்து, நல்மனமுள்ளவர்கள் ‘சத்தியத்தை அறிந்துகொள்ள,’ அதாவது உண்மைகளைத் தெரிந்துகொள்ள, உதவுவோமாக!—யோவா. 8:31, 32.