பிரசங்கிக்க வாய்ப்புகளை உருவாக்குங்கள்
1 கிறிஸ்தவ சபையில் பலதரப்பட்ட சூழ்நிலைகளில் உள்ளவர்கள் இருக்கிறார்கள். ஆனாலும், யெகோவாவைத் துதிக்க வேண்டும் என்ற உறுதியான தீர்மானத்தில் நாம் அனைவருமே ஒன்றுபட்டிருக்கிறோம். (சங். 79:13) ஒருவேளை உடல்நலக் குறைபாடு, கஷ்டமான சூழ்நிலைகள் போன்ற காரணங்களால் நற்செய்தியைப் பிரசங்கிப்பதில் நாம் முழுமையாகப் பங்குகொள்ள முடியாவிட்டால், அதற்கான வாய்ப்புகளை நாம் எவ்வாறு உருவாக்கலாம்?
2 அன்றாட காரியங்களில்: இயேசுவின் உதாரணத்தை எடுத்துக்கொள்வோம்; அவர் அன்றாடம் ஜனங்களோடு நேரம் செலவிட்ட சந்தர்ப்பங்களைச் சாட்சி கொடுக்கப் பயன்படுத்திக்கொண்டார். வரி வசூலிக்கப்படும் இடத்தைக் கடந்து சென்றபோது மத்தேயுவிடம் பேசினார், ஓர் ஊரின் வழியே நடந்து சென்றபோது சகேயுவிடம் பேசினார், ஓய்வெடுக்க சற்று உட்கார்ந்தபோது சமாரியப் பெண்ணிடம் பேசினார். (மத். 9:9; லூக். 19:1-5; யோவா. 4:6-10) அவ்வாறே, நாமும் நம் அன்றாட காரியங்களின்போது, மற்றவர்களிடம் பேசக் கிடைக்கும் சந்தர்ப்பங்களைச் சாட்சிகொடுக்கப் பயன்படுத்திக்கொள்ளலாம். பைபிள், துண்டுப்பிரதிகள், சிற்றேடுகள் போன்றவற்றைத் தயாராக வைத்திருந்தோமானால், நமது நம்பிக்கையைக் குறித்து மற்றவர்களிடம் பேச நாம் தூண்டப்படுவோம்.—1 பே. 3:15.
3 சகஜமாக நடமாட முடியாததன் காரணமாக உங்களால் வீட்டுக்கு வீடு ஊழியத்தில் சரிவரப் பங்குகொள்ள முடியவில்லையா? அப்படியானால், உங்களைப் பார்க்க வருகிற மருத்துவப் பணியாளரிடமும், வேறு வேலையாக உங்களுடன் தொடர்புகொள்ளும் நபர்களிடமும் சாட்சிகொடுக்கக் கிடைக்கும் சந்தர்ப்பங்களைப் பயன்படுத்திக்கொள்ள கவனமாயிருங்கள். (அப். 28:30, 31) சூழ்நிலை காரணமாக நீங்கள் பெரும்பாலும் வீட்டிலேயே இருக்க நேர்ந்தால், டெலிபோன் அல்லது கடிதம் மூலமாக சாட்சிகொடுக்க முயன்றிருக்கிறீர்களா? ஒரு சகோதரி, சத்தியத்தில் இல்லாத தனது குடும்பத்தாருக்குத் தவறாமல் கடிதம் எழுதுகிறார். பைபிளிலிருந்தும், தான் சாட்சிகொடுத்தபோது கிடைத்த அனுபவங்களிலிருந்தும், ஊக்கமூட்டுகிற சில விஷயங்களையும் அதில் குறிப்பிடுகிறார்.
4 வேலைபார்க்கும் இடத்திலோ பள்ளியிலோ: யெகோவாவைத் துதிக்க நமக்கிருக்கும் ஆவல், வேலைபார்க்கும் இடத்திலோ பள்ளியிலோ சத்திய விதைகளை விதைப்பதற்கான வாய்ப்புகளை உருவாக்கிக்கொள்ளவும் நம்மைத் தூண்டும். பிரஸ்தாபியாய் இருந்த எட்டு வயதுப் பையன், விழித்தெழு! பத்திரிகையில் சந்திரனைப் பற்றி தான் வாசித்த விஷயத்தைத் தன் வகுப்பு மாணவர்களிடம் சொன்னான். இந்தத் தகவலை எங்கிருந்து பெற்றான் என்பதை அறிந்துகொண்ட அவனுடைய ஆசிரியர், அதன்பின் காவற்கோபுரம், விழித்தெழு! ஆகிய பத்திரிகைகளை சாட்சிகள் தனக்குத் தந்தபோதெல்லாம் பெற்றுக்கொண்டார். வேலைபார்க்கும் இடத்தில், பைபிள் கற்பிக்கிறது புத்தகத்தை மற்றவர்கள் பார்வையில் படும்படி வைக்கும்போது, அவர்கள் அதைப் பற்றி கேள்வி கேட்கத் தூண்டப்படலாம், அவர்களிடம் சாட்சிகொடுக்க நமக்கு நல்லதொரு வாய்ப்பும் கிடைக்கலாம்.
5 உங்களது அன்றாட காரியங்களின்போது பிரசங்கிப்பதற்கான வாய்ப்புகளை உருவாக்கும் வேறு வழிகளைப் பற்றி நினைத்துப் பார்க்க முடிகிறதா? கிடைக்கும் வாய்ப்புகளை நன்கு பயன்படுத்திக்கொள்வதன் மூலம், “உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திர பலியை . . . தேவனுக்குச் செலுத்த” நாம் அன்றாடம் பிரயாசப்படுவோமாக.—எபி. 13:15.