எப்பொழுதும் கிடைக்கிற உதவி
1 ஒரு சகோதரியின் பெயர் ஆன்னா. அவருடைய கணவர் சத்தியத்தில் இல்லாதவர். அந்தச் சகோதரி ஓய்வுஒழிச்சல் இல்லாமல் வேலைசெய்ய வேண்டியிருந்ததால், கிறிஸ்தவக் கூட்டங்களுக்குத் தவறாமல் போவதும், ஊழியத்தில் பங்குகொள்வதும், கடவுளுடைய வார்த்தையைப் படிப்பதும் அவருக்குப் பெரும் சவாலாக இருந்தது. யெகோவாமீது அவருக்கு அன்பு குறையாதபோதிலும் செயலற்ற ஒரு பிரஸ்தாபி ஆனார். என்றாலும், சந்தோஷகரமாக, அக்கறையுள்ள மூப்பர்களிடமிருந்து ஆன்மீக உதவியைப் பெற்றுக்கொண்டார்.
2 கிறிஸ்தவ சபை அளிக்கும் ஆன்மீக உதவியைப் பெற்றுக்கொள்வது யெகோவாமீது சார்ந்திருப்பதைக் காட்டுகிறது. சபை மூப்பர்கள் கனிவோடு கரிசனை காட்டுவதில் இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றுகிறவர்களாக, ஆன்மீக காரியங்களில் ஈடுபட சிரமப்படுகிறவர்களுக்குத் தேவையான ஊக்கத்தையும் நடைமுறை உதவியையும் அளிக்க சந்தர்ப்பங்களைத் தேடுகின்றனர். (1 தெ. 5:14) உறுதி அளிக்கும் பைபிள் வசனங்களை எடுத்துக்காட்டி, ஊக்கமூட்டுகிற விதத்தில் பேசுவதே பெரும்பாலும் போதுமானதாகும். இப்படிப் பலவீனமாய் இருப்பவர்களுக்கு உதவி செய்யும் பொறுப்பு, மூப்பர்களுக்கு மட்டுமே உரியதல்ல, கிறிஸ்தவர்களாகிய நம் அனைவருக்குமே இருக்கிறது. “ஏற்ற சமயத்தில் சொன்ன வார்த்தை” எந்தளவு இதமாய் இருக்கும் என்பதை நாம் அனைவருமே அனுபவத்தில் கண்டிருப்போம்.—நீதி. 25:11; ஏசா. 35:3, 4.
3 முதற்படி எடுங்கள்: உதவி தேவைப்படுகிறவர்களிடம் கனிவுடன் அக்கறை காட்டுவதற்கு, நாம் முதற்படி எடுக்க வேண்டும், அவர்கள்மீது அனுதாபம் காட்ட வேண்டும், அவர்களுக்கு உதவ ஊக்கமாய் முயலவும் வேண்டும். தாவீது மனமுடைந்து போயிருந்தது யோனத்தானுக்குத் தெரியவந்தபோது, “காட்டிலிருக்கிற தாவீதினிடத்தில் போய், தேவனுக்குள் அவன் கையைத் திடப்படுத்தி”னார். (1 சா. 23:15, 16) உதவி தேவைப்படுபவர்களைக் கனிவுடன் அணுகுங்கள். உண்மையான அக்கறையுடன் சொல்லப்படும் வார்த்தைகள் மிகச் சிறந்த பலனைத் தரும். மேலும், ஒரு சகோதரரையோ சகோதரியையோ மீண்டும் செயல்பட வைப்பதற்கு, விடாமுயற்சியோடும் குறிப்பிட்ட நோக்கத்தோடும் முயல வேண்டுமென இயேசு தெளிவாக விளக்கினார். (லூக். 15:4) ஒரு நபருக்கு உதவ வேண்டும் என்ற ஊக்கமான ஆவல், விடாமுயற்சியோடு அவருக்கு உதவ நம்மைத் தூண்டும்; அவருடைய முன்னேற்றம் உடனடியாகத் தெரியாவிட்டாலும் அப்படி உதவத் தூண்டும்.
4 மற்றவர்களை, உதாரணமாக நம் புத்தகப் படிப்பில் உள்ளவர்களை, நம்மோடு ஊழியத்தில் கலந்துகொள்ள அழைப்பதற்கு நாம் முதற்படி எடுப்பது எவ்வளவு ஊக்கமூட்டுவதாய் இருக்கும்! சக வணக்கத்தார் ஒருவருக்கு ஊழியத்தில் உதவும்போது, அச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அவர் இன்னும் அதிகம் செய்வதற்கு அவரைப் பலப்படுத்தலாம். யெகோவாவின் சேவையைச் சேர்ந்து செய்யக் கிடைக்கும் அத்தகைய சந்தோஷமான சந்தர்ப்பங்கள், முக்கியமாக ஆன்மீக சமநிலையைப் பெற முயலுபவர்களுக்கு ஊக்கமூட்டுகின்றன.
5 ஓர் அன்பான ஏற்பாடு: கொஞ்ச காலமாகப் பிரசங்க வேலையில் பங்குகொள்ளாமலும், சபையோடு கூட்டுறவு கொள்ளாமலும் இருப்பவர்களுடைய விசுவாசம் பலப்பட கூடுதல் உதவி தேவைப்படலாம். ஒரே மெய்க் கடவுளை வணங்குங்கள், யெகோவாவிடம் நெருங்கி வாருங்கள், பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? போன்ற ஏதாவதொரு புத்தகத்திலிருந்து அவருக்கு மீண்டும் பைபிள் படிப்பு நடத்துவது போதுமானதாய் இருக்கலாம். அவர் ஏற்கெனவே முழுக்காட்டுதல் பெற்றவர் என்பதால், படிப்பை வெகுகாலம் நடத்த வேண்டியிருக்காது. இந்த ஏற்பாட்டிலிருந்து யாரெல்லாம் நன்மை அடையலாம் என்பதை சபையின் ஊழியக் குழு கவனமாகச் சிந்திக்க வேண்டும்.—நவம்பர் 1998, நவம்பர் 2000, நம் ராஜ்ய ஊழிய பிரதிகளில் வெளிவந்த கேள்விப் பெட்டியைக் காண்க.
6 முன்பு குறிப்பிடப்பட்ட சகோதரி ஆன்னா, ஆன்மீக முதிர்ச்சியுள்ள ஒரு சகோதரி தனக்கு பைபிள் படிப்பு நடத்துவதற்கு மூப்பர்கள் செய்த ஏற்பாட்டை நன்றியுடன் ஏற்றுக்கொண்டார். நான்கு முறை படிப்பு நடத்தப்பட்டதுமே அவரால் மீண்டும் யெகோவாவிடம் நெருங்கி வர முடிந்தது. சபை கூட்டங்களுக்கு அவர் மறுபடியும் வரத்தொடங்கினார், ஊழியத்தில் யெகோவாவைத் துதிப்பதற்கான ஆவலையும் புதுப்பித்துக்கொண்டார். முதிர்ச்சி வாய்ந்த அந்தச் சகோதரி தன் பைபிள் படிப்புகளுக்கு ஆன்னாவையும் கூட்டிச் சென்றார்; தானாகவே வீட்டுக்கு வீடு ஊழியத்தில் பங்குகொள்ளுமளவு பலப்படும்வரை ஆன்னாவுக்கு உதவி செய்தார். ஆம், கிறிஸ்தவ நடவடிக்கைகளில் மீண்டும் சுறுசுறுப்பாக இயங்க அன்பான ஓர் உதவிக்கரம் மட்டுமே அவருக்குத் தேவைப்பட்டது!
7 பலம் தேவைப்படுகிறவர்களுக்கு உதவி செய்யும்போது எல்லாருக்குமே நன்மை கிடைக்கிறது. உதவியைப் பெற்றுக்கொள்பவர், யெகோவாவிடம் நெருங்கி வரும் சந்தோஷத்தையும், அவருடைய அமைப்பு சம்பந்தப்பட்ட காரியங்களில் பங்கேற்கும் சந்தோஷத்தையும் ருசிக்கிறார். அவரது ஆன்மீக முன்னேற்றத்தைக் காணும் மூப்பர்கள் அகமகிழ்கின்றனர். (லூக். 15:5, 6) ஒருவருக்கொருவர் அன்புடன் ஒத்தாசை செய்கையில் சபையும் ஐக்கியப்படுகிறது. (கொலோ. 3:12-14) ஆகவே, எப்பொழுதும் உதவி அளிப்பவரான யெகோவாவைப் பின்பற்ற நம் அனைவருக்குமே தகுந்த காரணங்கள் உள்ளன!—எபே. 5:1.
[கேள்விகள்]
1. ஒருவர் ஆன்மீக ரீதியில் எப்படி பலவீனமாகிவிடலாம்?
2. கிறிஸ்தவர்களாய் இருக்கும் நாம் அனைவருமே எவ்விதத்தில் எப்பொழுதும் உதவியாய் இருக்கலாம்?
3, 4. மற்றவர்களுக்கு உதவுவதில் என்ன உட்பட்டிருக்கிறது, நாம் எப்படி உதவலாம்?
5. சில சூழ்நிலைகளில், மூப்பர்கள் என்ன உதவியை அளிக்கலாம்?
6. ஒரு சகோதரி ஆன்மீக ரீதியில் எவ்வாறு மீண்டும் பலப்படுத்தப்பட்டார்?
7. மற்றவர்களை ஆன்மீக ரீதியில் பலப்படுத்தும்போது என்ன நன்மைகள் கிடைக்கின்றன?