தனிப்பட்ட அக்கறை காட்டுங்கள்—முகத்தைப் பார்த்துப் பேசுவதன் மூலம்
1 வீட்டுக்கு வீடு ஊழியத்திலும் பொது இடங்களிலும் சாட்சி கொடுக்கும்போது, நாம் பேச வாயெடுப்பதற்கு முன் ஜனங்களின் முகத்தைப் பார்க்கிறோம். அந்தக் கொஞ்ச நேரத்திற்குள், அவர்களுடைய முகபாவனையிலிருந்து, நாம் அங்கு சென்றிருப்பதைப் பற்றி அவர்கள் எப்படி உணருகிறார்கள் என்பதைப் புரிந்துகொள்கிறோம்; அவர்களுடைய மனநிலையையும்கூடப் புரிந்துகொள்கிறோம். அவ்வாறே நம்மைப் பற்றி நிறைய விஷயங்களை அவர்களாலும் புரிந்துகொள்ள முடியும். தன்னைச் சந்திக்க வந்த ஒரு சாட்சியைப் பற்றி ஒரு பெண் கூறினதாவது: “அவருடைய சிரித்த முகத்தில் தெரிந்த அமைதி எனக்கு நினைவிருக்கிறது. அது என் ஆர்வத்தைக் கிளறியது.” அந்த ஆர்வமே, நற்செய்தியைக் கேட்க அந்தப் பெண்ணைத் தூண்டியது.
2 தெரு ஊழியத்தின்போதும், பொது இடங்களில் சாட்சிகொடுக்கும்போதும், மற்றவர்களின் முகத்தைப் பார்த்துப் பேசுவது சாட்சிகொடுப்பதற்குத் திறம்பட்ட வழியாக இருக்கிறது. ஒரு சகோதரர், அவரை நோக்கி வருகிறவர்களின் முகத்தையே கவனிப்பாராம். அவர்கள் அவரைப் பார்க்கும்போது புன்னகைத்துவிட்டு பத்திரிகைகளைக் காட்டுவாராம். இந்த அணுகுமுறையைப் பயன்படுத்தி, நிறைய பேருடன் இனிமையாக உரையாட முடிவதோடு, நிறைய பிரசுரங்களை அவரால் விநியோகிக்கவும் முடிகிறதாம்.
3 மற்றவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளுங்கள்: மற்றவர்களின் முகத்தைப் பார்த்துப் பேசுவது, அவர்களுடைய உணர்வுகளைப் புரிந்துகொள்ள உதவும். உதாரணமாக, யாருக்காவது நாம் சொல்வது புரியவில்லை என்றாலோ, நாம் சொல்வதை அவர்கள் ஒத்துக்கொள்ளவில்லை என்றாலோ, அது அவர்கள் முகத்திலேயே தெரிந்துவிடும். அவர்களுடைய முகபாவனையிலிருந்து, அவர்கள் அதிக வேலையாக இருக்கிறார்களா, பொறுமை இழந்துவிட்டார்களா என்பதை நாம் புரிந்துகொள்வோம். அதற்கேற்றவாறு நாம் சொல்லப்போகிற விஷயத்தைச் சுருக்கிக்கொள்ளலாம் அல்லது மாற்றியமைத்துக் கொள்ளலாம். மற்றவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்வது, அவர்கள்மீது நமக்கிருக்கும் அக்கறையைக் காட்டுவதற்கு மிகச் சிறந்த வழியாகும்.
4 உண்மையான அக்கறையோடும் உறுதியான நம்பிக்கையோடும் பேசுங்கள்: பல்வேறு கலாச்சாரங்களில், கேட்போரின் முகத்தைப் பார்த்துப் பேசுவது, அவர்மீது உண்மையான அக்கறை இருப்பதைச் சுட்டிக்காட்டுகிறது. பின்வரும் சந்தர்ப்பத்தைக் கவனியுங்கள்: ஒருமுறை இயேசுவின் சீஷர்கள், “யார் ரட்சிக்கப்படக்கூடும்” என்று கேட்டார்கள். அப்போது ‘இயேசு, அவர்களைப் பார்த்து: மனுஷரால் இது கூடாததுதான்; தேவனாலே எல்லாம் கூடும்’ என்று சொன்னதாக பைபிள் கூறுகிறது. (மத். 19:25, 26) ஆம், இயேசுவின் முகத்தில் தெரிந்த உறுதியான நம்பிக்கை, அவர் சொன்ன வார்த்தைகளுக்கு வலிமை சேர்த்தது. அவ்வாறே நாம், உண்மையான அக்கறையோடும் உறுதியான நம்பிக்கையோடும் ராஜ்ய செய்தியைத் தெரிவிப்பதற்கு, மற்றவர்களின் முகத்தைப் பார்த்துப் பேசுவது உதவும்.—2 கொ. 2:17; 1 தெ. 1:5.