படிப்பு 13
சபையாரை பார்த்துப் பேசுதல்
நம்முடைய கண்கள் எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் தெரிவிக்கின்றன. அவை ஆச்சரியத்தையோ அச்சத்தையோ சுட்டிக்காட்டலாம். அனுதாபத்தையோ அன்பையோ வெளிப்படுத்தலாம். சில சமயங்களில், சந்தேகப்படுவதையும் துக்கப்படுவதையும் காட்டிக்கொடுக்கலாம். உதாரணத்திற்கு, மிகுந்த துன்பம் அனுபவித்த தன்னுடைய நாட்டினரை பற்றி ஒரு முதியவர் இவ்வாறு கூறினார்: “எங்களுடைய கண்களே பேசுகின்றன.”
நம்முடைய கண்களை எங்கே ஊன்ற வைக்கிறோம் என்பதை வைத்து நம்மைப் பற்றியும் நாம் சொல்வதைப் பற்றியும் பிறர் முடிவு செய்துவிடலாம். பல கலாச்சாரங்களில், சிநேகப்பான்மைக்குரிய விதத்தில் கண்களைப் பார்த்து பேசுகிற ஒருவரை மக்களுடைய மனம் நம்புகிறது. மாறாக, அவர் தங்களை பார்க்காமல் கீழே தங்கள் பாதத்தையோ வேறொன்றையோ பார்த்து பேசினால் அவருடைய நேர்மையை அல்லது தகுதியைக் குறித்து அவர்கள் சந்தேகப்படலாம். வேறு சில கலாச்சாரத்தினர், உற்றுப் பார்த்துப் பேசுவதை முரட்டுத்தனமானதாக அல்லது சவால்விடுவதாக கருதுகின்றனர்; முக்கியமாக எதிர்பாலாரிடமோ ஒரு தலைவரிடமோ அல்லது உயர் அதிகாரியிடமோ பேசும்போது அப்படி கருதுகின்றனர். சில இடங்களில், பெரியவரிடம் ஓர் இளைஞன் நேருக்கு நேர் பார்த்து பேசினால் அது அவமரியாதையாக கருதப்படுகிறது.
என்றபோதிலும், தவறாக கருதப்படாத இடங்களில், முக்கியமான விஷயத்தை சொல்லும்போது ஒருவருடைய கண்களைப் பார்த்துப் பேசுவது நீங்கள் சொல்லும் குறிப்பிற்கு வலுசேர்க்கலாம். பேச்சாளருக்கு உறுதியான நம்பிக்கை இருப்பதை நிரூபிக்கலாம். சீஷர்கள் மிகுந்த ஆச்சரியத்தோடு, “யார் ரட்சிக்கப்படக்கூடும்” என இயேசுவிடம் கேட்டபோது அதற்கு அவர் எப்படி பதிலளித்தார் என்பதை கவனியுங்கள். பைபிள் இவ்வாறு அறிவிக்கிறது: ‘இயேசு அவர்களைப் பார்த்து, [“அவர்களுடைய முகத்தைப் பார்த்து,” NW] மனுஷரால் இது கூடாததுதான்; தேவனாலே எல்லாம் கூடும் என்றார்.’ (மத். 19:25, 26) அப்போஸ்தலன் பவுலும் கூட்டத்தாருடைய பிரதிபலிப்பை கூர்ந்து கவனித்தார் என பைபிள் காட்டுகிறது. ஒரு சந்தர்ப்பத்தில், பவுல் பேசிக் கொண்டிருந்தபோது பிறவியிலேயே முடமாக இருந்த ஒருவனும் கேட்டுக்கொண்டிருந்தான். அப்போஸ்தலர் 14:9, 10 இவ்வாறு குறிப்பிடுகிறது: ‘அவனைப் பவுல் உற்றுப்பார்த்து, இரட்சிப்புக்கேற்ற விசுவாசம் அவனுக்கு உண்டென்று கண்டு: நீ எழுந்து காலூன்றி நிமிர்ந்து நில் என்று உரத்த சத்தத்தோடே சொன்னார்.’
வெளி ஊழியத்திற்குரிய ஆலோசனைகள். நீங்கள் வெளி ஊழியத்தில் ஆட்களை சந்திக்கையில் சிநேகப்பான்மையுடனும் கனிவுடனும் பேசுங்கள். பொருத்தமான சந்தர்ப்பத்தில், பரஸ்பர அக்கறைக்குரிய ஏதாவதொரு விஷயத்தில் உரையாடலை ஆரம்பிப்பதற்கு சிந்தையைத் தூண்டும் கேள்விகளைக் கேளுங்கள். இப்படி கேட்கும்போது, கண்களைப் பார்த்துப் பேச முயலுங்கள்—அல்லது மரியாதைக்குரிய, அன்பான முறையில் அந்த நபருடைய முகத்தையாவது பாருங்கள். அகமகிழ்ச்சியை கண்களில் வெளிப்படுத்துகிறவருடைய முகத்தில் தவழும் புன்சிரிப்பு மிகவும் கவர்ச்சிகரமானது. இத்தகைய உணர்ச்சி வெளிப்பாடு நீங்கள் எப்படிப்பட்டவர் என்பதைப் பற்றி அந்த நபருக்கு நிறைய சொல்கிறது, நீங்கள் பேசும்போது பயமின்றி அமைதலாக கேட்பதற்கும் அவருக்கு உதவுகிறது.
பொருத்தமான சந்தர்ப்பத்தில், அந்த நபருடைய கண்களில் வெளிப்படும் உணர்ச்சியை கவனிப்பது, ஒரு சூழ்நிலையை எப்படி சமாளிக்கலாம் என்பதற்கு உதவும் சில அறிகுறிகளைத் தரலாம். அவர் கோபமாகவோ விருப்பமற்றவராகவோ இருந்தால், அதை உங்களால் கவனிக்க முடியும். நீங்கள் சொல்வது அவருக்குப் புரியவில்லையென்றால், அதையும் உங்களால் உணர முடியும். அவர் பொறுமை இழந்திருந்தால், அதை உங்களால் சொல்ல முடியும். அவருக்கு அதிக விருப்பமிருந்தால், அதுவும் உங்களுக்குத் தெரியவரும். அவருடைய கண்கள் சிந்தும் உணர்ச்சி, உங்களுடைய வேகத்தை மாற்றியமைப்பதற்கு, அவரையும் உரையாடலில் உட்படுத்த இன்னும் கூடுதலாக முயற்சி எடுப்பதற்கு, பேச்சை முடிப்பதற்கு, அல்லது பைபிளை எப்படி படிப்பது என்பதை சொல்லித் தருவதற்கு உங்களைத் தூண்டலாம்.
வெளி ஊழியத்திலும்சரி பைபிள் படிப்பு நடத்துகையிலும்சரி, மரியாதைக்குரிய விதத்தில் கண்ணோடு கண் பார்த்துப் பேச முயலுங்கள். ஆனால் அந்த நபரை அதிக நேரம் உற்றுப் பார்க்காதீர்கள், ஏனென்றால் அது தர்மசங்கடப்பட வைக்கும். (2 இரா. 8:11, NW) இருந்தாலும், இயல்பாக, நட்புக்குரிய விதத்தில் அவர் முகத்தை அடிக்கடி பாருங்கள். பல நாடுகளில், இது உள்ளப்பூர்வமான அக்கறையை வெளிப்படுத்துகிறது. என்றாலும், பைபிளிலிருந்து அல்லது வேறெதாவது பிரசுரத்திலிருந்து வாசிக்கும்போது, உங்களுடைய கண்கள் அந்தப் பக்கத்தின் மீதே ஊன்றியிருக்கும். ஆனால் அதிலிருந்து ஒரு குறிப்பை வலியுறுத்திக் காட்டுவதற்கு, நீங்கள் அந்த நபரை நேரடியாக பார்க்க விரும்பினால் கணப்பொழுது பார்க்கலாம். அவ்வப்பொழுது பார்ப்பது வாசிக்கப்படும் விஷயத்தின் பேரில் அவருடைய பிரதிபலிப்பை கவனிக்க உதவும்.
நேரடியாக பார்த்துப் பேசுவதற்கு முதலில் கூச்சம் ஒரு தடையாக இருந்தால், முயற்சியை கைவிட்டு விடாதீர்கள். தகுந்த விதத்தில் பார்த்துப் பேசுவது பழக்கத்தால் இயல்பாக வந்துவிடும். மற்றவர்களுடன் திறம்பட்ட முறையில் பேச்சுத்தொடர்பு கொள்வதற்கும் உதவும்.
பேச்சு கொடுக்கும்போது. இயேசு மலைப் பிரசங்கத்தை ஆரம்பிப்பதற்கு முன்பு, ‘தம்முடைய சீஷர்களை நோக்கிப் பார்த்[தார்]’ என பைபிள் சொல்கிறது. (லூக். 6:20) ஆகவே, அவருடைய முன்மாதிரியிலிருந்து கற்றுக்கொள்ளுங்கள். நீங்கள் ஒரு தொகுதியினருக்கு முன்பு பேசுவதாக இருந்தால், சில வினாடிகள் அவர்களை பார்த்தவாறு அமைதியாக நில்லுங்கள், பிறகு பேச்சை ஆரம்பியுங்கள். அநேக இடங்களில், சபையாரில் சிலரை கண்ணோடு கண் பார்ப்பதை இது உட்படுத்துகிறது. இந்தக் கணப்பொழுது தாமதம் உங்களுடைய ஆரம்ப பயத்தைச் சமாளிக்க உதவும். உங்களுடைய முகத்தில் தெரியும் எந்தவொரு மனப்பான்மைக்கும் உணர்ச்சிக்கும் சபையார் தங்களை சரிப்படுத்திக் கொள்ளவும் இது உதவும். மேலும், நீங்கள் இப்படி செய்கையில் சபையார் அமைதியடைந்து, உங்களுக்கு கவனம் செலுத்த ஆயத்தமாவார்கள்.
நீங்கள் பேச்சு கொடுத்துக் கொண்டிருக்கும்போது, சபையாரை பாருங்கள். வெறுமனே மொத்த தொகுதியினரையும் அல்ல, ஆனால் அங்குள்ள தனிப்பட்ட நபர்களை பார்ப்பதற்கு முயலுங்கள். ஏறக்குறைய எல்லா கலாச்சாரங்களிலும், பொதுப் பேச்சாளர் ஓரளவுக்காவது கண்களைப் பார்த்துப் பேசுவது எதிர்பார்க்கப்படுகிறது.
உங்களுடைய சபையாரை பார்ப்பது என்பது ஒரு பக்கத்திலிருந்து மறுபக்கம் வரை கண்களை மெதுவாக ஓடவிடுவது அல்ல. சபையாரில் ஒருவரை மரியாதைக்குரிய விதத்தில் பாருங்கள். பொருத்தமாக இருந்தால், அந்த நபரைப் பார்த்து ஒரு முழு வாக்கியத்தையும் சொல்லுங்கள். பின்பு வேறொருவரை பாருங்கள், ஓரிரு வாக்கியங்களை அவரிடம் சொல்லுங்கள். ஒருவர் சங்கோஜப்படும் அளவுக்கு அவரையே நெடுநேரம் பார்க்காதீர்கள், முழு சபையாரில் சிலர் மீதே கவனம் செலுத்தாதீர்கள். இந்த முறையில் தொடர்ந்து உங்களுடைய கண்களை ஓடவிடுங்கள். ஆனால் ஒரு நபரை நோக்கிப் பேசும்போது, உண்மையிலேயே அவரிடம் பேசி அவருடைய பிரதிபலிப்பை கவனியுங்கள்; அதன் பிறகே வேறொருவரை பாருங்கள்.
உங்களுடைய குறிப்புத்தாளை பீடத்திலோ உங்களுடைய கையிலோ அல்லது உங்களுடைய பைபிளிலோ வைக்க வேண்டும், அப்பொழுதுதான் கண் அசைவால் மட்டும் அதை அவ்வப்போது நோட்டமிட முடியும். குறிப்புத்தாளைப் பார்ப்பதற்கு உங்களுடைய தலையை முழுவதுமாக தாழ்த்த வேண்டியதாக இருந்தால், சபையாரை பார்த்துப் பேசுவது தடைப்படும். உங்களுடைய குறிப்புத்தாளை எவ்வளவு அடிக்கடி பார்க்கிறீர்கள், எப்பொழுது பார்க்கிறீர்கள் என்பதற்கு கவனம் செலுத்த வேண்டும். உங்களுடைய பேச்சில் உச்சக்கட்டத்தை அடையும்போது குறிப்புத்தாளை பார்த்துக்கொண்டிருந்தால், சபையாருடைய பிரதிபலிப்பை காணத் தவறிவிடுவீர்கள், உங்களுடைய பேச்சு ஓரளவுக்கு அதன் வலிமையையும் இழந்துவிடும். அதைப் போலவே, குறிப்புத்தாளையே அடிக்கடி பார்த்துக் கொண்டிருந்தாலும் சபையாரை பார்த்துப் பேச முடியாமல் போகும்.
நீங்கள் ஒரு பந்தை ஒருவரிடம் வீசும்போது, அதைப் பிடித்துவிட்டாரா என அறிய அவரை பார்க்கிறீர்கள். உங்களுடைய பேச்சில் சபையாரிடம் நீங்கள் சொல்லும் ஒவ்வொரு கருத்தும் ஒரு “வீச்சுக்கு” சமம். அவர்களுடைய பிரதிபலிப்பை பொறுத்து—தலையசைத்தல், சிரித்தல், கூர்ந்து பார்த்தல் ஆகியவற்றை பொறுத்து—“பிடித்துவிட்டார்களா” என்பதை கண்டுகொள்ளலாம். சபையாரை நன்கு பார்த்துப் பேசினால், உங்களுடைய கருத்துக்களைப் “பிடித்துவிட்டார்களா” என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.
சபையார் முன்பு வாசிக்கையில் நீங்கள் அவர்களை பார்க்க வேண்டுமா? பைபிளிலிருந்து வாசிக்கையில் சபையார் கவனித்துக்கொண்டே வந்தால், நீங்கள் அவர்களை பார்க்கிறீர்களா இல்லையா என்பது பெரும்பாலோருக்குத் தெரியாது. ஆனால் நீங்கள் சபையாரை பார்க்கும்போது அவர்களுடைய பிரதிபலிப்பை நன்கு அறிந்துகொள்கிறீர்கள், இது உங்களுடைய வாசிப்பை உயிர்ப்பூட்டுவதற்கு உதவும். வாசிக்கும்போது அவர்களை பார்ப்பது, பைபிளை திறக்காதவர்களையும் மனதை எங்கோ அலைபாய விடுகிறவர்களையும் வாசிக்கப்படும் விஷயத்திற்கு கவனத்தைத் திருப்ப உதவும். ஆனால் நீங்கள் கணப்பொழுதுதான் நிமிர்ந்து பார்க்க முடியும், அதுவும் வாசிப்பதற்கு தடங்கல் ஏற்படாதவாறு பார்க்க வேண்டும். இதற்காக, பைபிளை கையில் பிடித்துக்கொண்டு, தாடை உங்கள் மார்பில் படாதவாறு உங்களுடைய தலையை நேராக வைத்துக்கொண்டு வாசிப்பது நல்லது.
மாநாடுகளில் சிலசமயம் மான்யுஸ்க்ரிப்டுகளைப் பயன்படுத்தி சொற்பொழிவு ஆற்றுமாறு மூப்பர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இதை திறம்பட செய்வதற்கு அனுபவமும் நல்ல தயாரிப்பும் பயிற்சியும் அவசியம். மான்யுஸ்க்ரிப்டுகளைப் பயன்படுத்தும்போது சபையாரை அதிகமாக பார்த்துப் பேச முடியாது என்பது உண்மைதான். ஆனால் பேச்சாளர் நன்கு தயாரித்திருந்தால், வாசிக்கிற இடத்தை விட்டுவிடாமல் கேட்போரை அவ்வப்பொழுது அவரால் பார்க்க முடியும். இப்படி செய்வது கேட்போருடைய கவனத்தை ஈர்த்து வைப்பதற்கு உதவும், கொடுக்கப்படும் முக்கியமான ஆவிக்குரிய போதனையிலிருந்து அவர்கள் முழுமையாக பயனடைவதற்கும் உதவும்.