கேள்விப் பெட்டி
◼ ஒரு பேச்சாளர் சபையாரிடம் வசனங்களை எடுத்துப் பார்க்கச் சொல்லும்போது அவற்றை பார்ப்பது ஏன் பயனுள்ளது?
பேசப்படும் பொருள் எதைப் பற்றியது என்பதையும் பைபிளில் ஒரு பகுதியை ஒவ்வொரு வசனமாக விளக்கும் பேச்சாக அது இருக்கிறதா என்பதையும் பேச்சாளர் கவனிக்க வேண்டும். சபையார் எத்தனை வசனங்களை எடுத்துப் பார்க்க சொல்வது என்பதை இவற்றின் அடிப்படையில் தீர்மானிக்கலாம்.
சொல்லப்படுவது பைபிளில் உள்ளது என்பதை ஊர்ஜிதப்படுத்துவதே வசனங்களை வாசிப்பதற்கான ஒரு காரணம் என்பதை மனதில் வைத்திருப்பது அவசியம். (அப். 17:11) எல்லாருடைய விசுவாசம் பலப்படத் தக்கதாக அங்கு கலந்தாலோசிக்கப்படும் பொருளுக்கு வேதபூர்வ ஆதாரத்தைக் கொடுப்பதே மற்றொரு நோக்கம். பேச்சாளர் ஒரு முக்கியமான வசனத்தை வாசிக்கும்போது, சபையார் அதை எடுத்துப் பார்ப்பது, அவர்கள் மனதில் அதை பசுமரத்து ஆணிபோல் பதியவைக்கும். வசனங்களை எடுத்துப் பார்ப்பதுடன்கூட, குறிப்புகள் எடுப்பதும் சொல்லப்படும் கருத்துக்களை கோர்வையாகச் சிந்திப்பதும் பிரயோஜனமாக இருக்கும்.
சொஸைட்டியின் குறிப்புத்தாளில் நிறைய வசனங்கள் குறிப்பிடப்பட்டிருக்கும். பேச்சைத் தயாரிக்கும்போது பேச்சாளருக்கு உதவும்படி இவை கொடுக்கப்பட்டிருக்கின்றன. இவை பின்னணி தகவலைக் கொடுக்கலாம்; உட்பட்டிருக்கும் வேதபூர்வ நியமங்களை நன்கு மனதில் வைப்பதற்கும், பேச்சுப்பொருள் படிப்படியாக எவ்விதமாக விளக்கப்படுகிறது என்பதைப் புரிந்துகொள்வதற்கும் அவருக்கு உதவும். பேச்சை படிப்படியாக விளக்கி கோர்வையாக கொண்டு போவதற்கு எந்த வசனங்கள் முக்கியம் என்று பேச்சாளர் தீர்மானிக்கிறார். பின்னர் அந்த வசனங்களை அவர் வாசித்து விளக்கும்போது சபையாரும் அந்த வசனங்களை எடுத்துப்பார்த்து கவனிக்கும்படி உற்சாகப்படுத்துகிறார். ஆதாரமாக இருக்கும் மற்ற வசனங்களை குறிப்பிடலாம் அல்லது அவற்றின் சாராம்சத்தை சுருக்கமாகச் சொன்னாலும் போதும். அவ்வாறு குறிப்பிடும்போது சபையார் அவற்றை கட்டாயமாக எடுத்துப் பார்க்க வேண்டும் என்று அவசியமில்லை.
குறிப்பிட்ட வசனங்களை பேச்சாளர் வாசிக்கும்போது, கம்ப்யூட்டர் பிரின்ட் போன்றவற்றிலிருந்து வாசிக்காமல் நேரடியாக பைபிளிலிருந்து வாசிக்க வேண்டும். சபையாரையும் பைபிளை திறந்து பார்க்க சொல்லும்போது, பைபிள் புத்தகம், அதிகாரம், வசன(ம்)ங்கள் ஆகியவற்றை பேச்சாளர் தெளிவாக சொல்ல வேண்டும். அவர் வசனத்தைப் பற்றி ஒரு கேள்வி கேட்குமுன் அல்லது வசனத்தை ஏன் வாசிக்கப் போகிறோம் என்று ஒரு சுருக்கமான குறிப்பைச் சொல்வதற்கு முன் சற்று நிறுத்தம் கொடுப்பது சபையார் அந்த வசனத்தை எடுப்பதற்கு நேரம் கொடுக்கும். மீண்டும் அந்த வசனத்தை அவர் குறிப்பிடும்போது அதை அவர்களால் ஞாபகத்தில் வைத்துக்கொள்ள முடியும். ஆனால் அந்த வசனமிருக்கும் பக்கத்தின் எண்ணை குறிப்பிடாமல் இருப்பதே நல்லது. ஏனென்றால் சபையில் உள்ள வெவ்வேறு நபர்கள் வைத்திருக்கும் வித்தியாசமான பைபிள் பதிப்புகளைப் பொறுத்து அது மாறுபடும். பைபிளை எடுத்துப் பார்க்கும்படி பேச்சாளர் சபையாரை உற்சாகப்படுத்தும்போது எடுத்துப் பார்ப்பது, கடவுளுடைய வார்த்தைக்கிருக்கும் வல்லமையை புரிந்துகொண்டு பயனடைய உதவும்.—எபி. 4:12.