உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • be படிப்பு 42 பக். 230-பக். 233 பாரா. 5
  • தகவல் நிறைந்த பேச்சு

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • தகவல் நிறைந்த பேச்சு
  • தேவராஜ்ய ஊழியப் பள்ளியிலிருந்து பயனடையுங்கள்
  • இதே தகவல்
  • அறிவை வளர்க்கும் பொருள், தெளிவாக அளிக்கப்படுதல்
    தேவராஜ்ய ஊழியப் பள்ளி துணைநூல்
  • கேள்விப் பெட்டி
    நம் ராஜ்ய ஊழியம்—2000
  • உங்கள் கேட்போரை நம்பச்செய்யுங்கள், அவர்களிடம் நியாயங்காட்டி பேசுங்கள்
    தேவராஜ்ய ஊழியப் பள்ளி துணைநூல்
  • ஆர்வத்தைத் தூண்டும் முன்னுரை
    தேவராஜ்ய ஊழியப் பள்ளியிலிருந்து பயனடையுங்கள்
மேலும் பார்க்க
தேவராஜ்ய ஊழியப் பள்ளியிலிருந்து பயனடையுங்கள்
be படிப்பு 42 பக். 230-பக். 233 பாரா. 5

படிப்பு 42

தகவல் நிறைந்த பேச்சு

நீங்கள் என்ன செய்ய வேண்டும்?

சபையாரின் சிந்தையைத் தூண்டும் விதத்திலும், பயனுள்ள ஒன்றை கற்றுக்கொண்ட உணர்வை அவர்களுக்கு உண்டாக்கும் விதத்திலும் அறிவை வழங்குங்கள்.

ஏன் முக்கியம்?

மக்களுக்கு ஏற்கெனவே தெரிந்த விஷயங்களை வெறுமனே சொன்னால், அவர்களுடைய கவனத்தை உங்களால் அதிக நேரம் ஈர்த்துப்பிடிக்க முடியாது.

உங்களுடைய சபையாருக்கு தகவல்நிறைந்த பேச்சை கொடுப்பதற்கு, பயன்தரும் ஒரு பொருளில் பேசினால் மட்டும் போதாது. உங்களையே இவ்வாறு கேட்டுக்கொள்ளுங்கள்: ‘இந்தச் சபையாருக்கு இந்தப் பொருளைப் பற்றி ஏன் சொல்ல வேண்டும்? இந்தப் பேச்சிலிருந்து சபையார் உண்மையிலேயே பயன் பெற நான் என்னென்ன விஷயங்களை சொல்லலாம்?’

எப்படி ஒருவருக்கு சாட்சிகொடுப்பது என்பதை நடித்துக் காட்டும்படி ஊழியப் பள்ளியில் உங்களுக்கு நியமிக்கப்பட்டால், வீட்டுக்காரரே உங்களுடைய சபையார். மற்ற சந்தர்ப்பங்களில், நீங்கள் முழு சபையாரிடமும் பேச வேண்டியிருக்கலாம்.

உங்களுடைய சபையாருக்கு தெரிந்தவை. ‘இந்தப் பொருளைப் பற்றி சபையார் என்ன தெரிந்திருக்கிறார்கள்?’ என உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள். இதை அடிப்படையாக வைத்தே இப்பொழுது உங்களுடைய பேச்சை அமைக்க வேண்டும். முதிர்ச்சி வாய்ந்த கிறிஸ்தவர்கள் பலர் இருக்கும் ஒரு சபையில் நீங்கள் பேசிக்கொண்டிருந்தால், பெரும்பாலோருக்குத் தெரிந்த அடிப்படை சத்தியங்களையே திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிராதீர்கள். அந்த அடிப்படை சத்தியங்களை அஸ்திவாரமாக வைத்து அதன் மீது உங்கள் பேச்சை கட்டுங்கள். அதேசமயத்தில், ஆர்வமுள்ள புதியவர்கள் அநேகர் இருந்தால், இரு சாராருடைய தேவைகளையும் நீங்கள் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

நீங்கள் சொல்லும் விஷயம் சபையாருக்கு எந்தளவு தெரியும் என்பதைப் பொறுத்து பேச்சின் வேகத்தை மாற்றியமைத்துக் கொள்ளுங்கள். பெரும்பாலோருக்கு பரிச்சயமான விவரங்கள் சிலவற்றை சேர்த்தால், இவற்றை ஓரளவு விரைவாகவே சொல்லி முடித்துவிடுங்கள். ஆனால் பெரும்பாலோருக்குப் புதிதாக இருக்கும் கருத்துக்களைச் சொல்லும்போது நிறுத்தி நிதானமாக பேசுங்கள், அப்போதுதான் அவர்களால் நன்கு கிரகித்துக்கொள்ள முடியும்.

என்ன தகவல் அளிப்பது. தகவல் நிறைந்த பேச்சு என்பது புதிதாக ஏதாவது ஒன்றை சொல்ல வேண்டும் என எப்பொழுதும் அர்த்தப்படுத்தாது. நன்கு அறிந்த சில சத்தியங்களை பேச்சாளர்கள் சிலர் அவ்வளவு எளிமையாக பேசுவதால் சபையாரில் பலர் முதல் தடவையாக அவற்றை முழுமையாக புரிந்துகொள்கிறார்கள்.

வெளி ஊழியத்தில், நாம் கடைசி நாட்களில் வாழ்கிறோம் என்பதை விளக்குவதற்கு ஒரு செய்திக் குறிப்பை சொன்னால் மட்டும் போதாது. அந்தச் சம்பவங்களின் அர்த்தத்தைக் காண்பிப்பதற்கு பைபிளை பயன்படுத்துங்கள். இது உண்மையிலேயே வீட்டுக்காரருக்கு தகவல் நிறைந்த ஒன்றாக இருக்கும். இதுபோலவே, இயற்கை சட்டத்தையோ தாவர அல்லது விலங்கின வாழ்க்கையைப் பற்றிய சில விவரங்களையோ கொடுக்கும்போதும் வீட்டுக்காரர் இதுவரை கேள்விப்பட்டிராத ஏதோ கவர்ச்சிகரமான விஞ்ஞான உண்மையை சொல்வதே உங்களுடைய இலக்காக இருக்கக் கூடாது. மாறாக, நம்மீது அன்புகூருகிற படைப்பாளர் ஒருவர் இருக்கிறார் என்பதை காட்டுவதற்கு இயற்கையைப் பற்றிய உண்மையை பைபிளிலுள்ள கூற்றுகளோடு இணைத்து சொல்வதே உங்களுடைய குறிக்கோளாக இருக்க வேண்டும். இது, விஷயங்களை புதிய கண்ணோட்டத்தில் காண வீட்டுக்காரருக்கு உதவும்.

சபையார் அடிக்கடி கேட்ட ஒரு பொருளில் அவர்களிடம் பேசுவது சவாலாக இருக்கலாம். ஆனால் திறம்பட்ட பேச்சாளராக இருப்பதற்கு, இதை எப்படி வெற்றிகரமாக செய்வது என்பதை நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டும். இதை எப்படி செய்யலாம்?

ஆராய்ச்சி செய்வது கைகொடுக்கும். உடனடியாக மனதுக்கு வரும் ஏதாவது சில தகவல்களை மட்டுமே உங்களுடைய பேச்சில் சேர்த்துக்கொள்வதற்குப் பதிலாக, 33 முதல் 38 பக்கங்களில் சொல்லப்பட்டுள்ள ஆராய்ச்சி கருவிகளைப் பயன்படுத்துங்கள். நீங்கள் அடைய முயலும் குறிக்கோள்கள் சம்பந்தமாக அங்கே கொடுக்கப்பட்டுள்ள ஆலோசனைகளை சிந்தித்துப் பாருங்கள். ஆராய்ச்சி செய்யும்போது, அதிகம் அறியப்பட்டிராத ஒரு சரித்திர நிகழ்ச்சி உங்களுடைய பொருளோடு நேரடியாக தொடர்புடையதாக இருப்பதை நீங்கள் காணலாம். அல்லது நீங்கள் பேசுவதற்கு திட்டமிட்டுள்ள விஷயத்தைப் பற்றி சமீபத்தில் வெளிவந்த ஓர் அறிக்கை உங்கள் கண்ணில் படலாம்.

தகவலை நீங்கள் ஆராயும்போது, என்ன? ஏன்? எப்பொழுது? எங்கே? யார்? எப்படி? போன்ற கேள்விகளை கேட்பதன் மூலம் உங்களுடைய சிந்தையைத் தூண்டுங்கள். உதாரணமாக, இது ஏன் உண்மை? இதை நான் எப்படி நிரூபிக்கலாம்? இந்த பைபிள் சத்தியத்தைப் புரிந்துகொள்வதை கடினமாக்கும் பிரபல நம்பிக்கைகள் என்னென்ன? இது ஏன் முக்கியம்? இது ஒருவருடைய வாழ்க்கையை எப்படி பாதிக்க வேண்டும்? இதை பயன்படுத்துவதால் வரும் நன்மையை எந்த உதாரணம் எடுத்துக் காட்டுகிறது? யெகோவாவின் ஆளுமையைப் பற்றி இந்த பைபிள் சத்தியம் எதை வெளிப்படுத்துகிறது? என்றெல்லாம் கேட்டுக்கொள்ளுங்கள். மேலும், நீங்கள் பேசப்போகும் விஷயத்தைப் பொறுத்து, இது எப்பொழுது சம்பவித்தது? இதை எவ்வாறு இன்றைக்கு நடைமுறையில் பயன்படுத்தலாம்? என்றும் நீங்கள் கேட்டுக்கொள்ளலாம். பேச்சு கொடுக்கும்போது இதுபோன்ற கேள்விகள் சிலவற்றை கேட்டு அதற்கு பதிலளிப்பதன் மூலம் உங்களுடைய பேச்சிற்கு உயிரூட்டலாம்.

சிலசமயங்களில், சபையாருக்குப் பரிச்சயமான வேதவசனங்களை உங்களுடைய பேச்சில் பயன்படுத்த வேண்டிய அவசியம் ஏற்படலாம். இதை தகவல் நிறைந்த ஒன்றாக்குவதற்கு நீங்கள் என்ன செய்யலாம்? வெறுமனே அவற்றை வாசிக்காதீர்கள்; அவற்றை விளக்குங்கள்.

பழக்கப்பட்ட வசனத்தைப் பல பகுதிகளாக பிரித்துக்கொண்டு உங்களுடைய பேச்சிற்குத் தொடர்புடைய பகுதிகளைத் தனியே பிரித்து பின்பு அவற்றை விளக்கினால் சம்பாஷணையை அதிக தகவல்நிறைந்த ஒன்றாக்கலாம். உதாரணமாக, மீகா 6:8-ஐ எடுத்துக்கொள்ளுங்கள். ‘நியாயம்’ என்றால் என்ன? நியாயத்தைக் குறித்ததில் யாருடைய தராதரங்கள் இங்கே பேசப்படுகின்றன? “நியாயஞ்செய்வது” அல்லது ‘இரக்கத்தைச் சிநேகிப்பது’ எதை அர்த்தப்படுத்துகிறது என்பதை எப்படி விளக்குவீர்கள்? மனத்தாழ்மை என்றால் என்ன? வயதான ஒருவருக்கு இந்தத் தகவலை நீங்கள் எப்படி பயன்படுத்துவீர்கள்? மையப்பொருள், குறிக்கோள், சபையார், ஒதுக்கப்பட்டுள்ள நேரம் ஆகியவற்றின் அடிப்படையில் நீங்கள் பயன்படுத்தப் போகும் தகவலை தீர்மானிக்க வேண்டும்.

வார்த்தைகளுக்கு எளிய விளக்கங்கள் கொடுப்பது பயனளிக்கும். மத்தேயு 6:10-⁠ல் குறிப்பிடப்பட்டுள்ள “ராஜ்யம்” என்ற வார்த்தைக்குரிய அர்த்தத்தை அறிந்துகொள்வது சிலருக்கு கண் திறந்தது போல இருக்கும். சொற்பொருள் விளக்கம் நினைப்பூட்டப்படுகையில், பல காலம் கிறிஸ்தவராக இருப்பவரும்கூட ஒரு வசனம் உண்மையில் என்ன சொல்கிறது என்பதை நன்கு திருத்தமாக பகுத்துணர முடியும். 2 பேதுரு 1:5-8-ஐ வாசித்து, விசுவாசம், தைரியம், ஞானம், இச்சையடக்கம், பொறுமை, தேவபக்தி, சகோதர சிநேகம், அன்பு போன்ற வார்த்தைகளின் பல்வேறு அம்சங்களை விளக்கும்போது இது தெளிவாகிறது. கிட்டத்தட்ட ஒரே விதமான அர்த்தத்தைத் தரும் வார்த்தைகள் ஒரே சூழமைவில் பயன்படுத்தப்பட்டிருக்கையில், ஒன்றை மற்றொன்றிலிருந்து வேறுபடுத்திப் பார்ப்பதற்கு நீங்கள் தரும் விளக்கம் உதவும். நீதிமொழிகள் 2:1-6-⁠ல் பயன்படுத்தப்பட்டுள்ள ஞானம், அறிவு, பகுத்துணர்வு, புரிந்துகொள்ளுதல் போன்ற வார்த்தைகளைப் பொறுத்ததில் இது உண்மையாக இருக்கிறது.

ஒரு வசனத்தை நியாயங்காட்டி விளக்கினாலே சபையார் அதிகத்தைக் கற்றுக்கொண்டதாக உணர்வார்கள். ஆதியாகமம் 2:7-⁠ல் சில பைபிள் மொழிபெயர்ப்புகளில் ஆதாம் ஜீவாத்துமாவானான் என்றும் எசேக்கியேல் 18:4-⁠ல் ஆத்துமா சாகும் என்றும் சொல்லப்பட்டிருப்பதை முதல் தடவையாக பார்க்கும்போது அநேகர் ஆச்சரியப்படுகிறார்கள். இயேசு ஒரு சந்தர்ப்பத்தில், சதுசேயர்கள் நம்புவதாக உரிமைபாராட்டிய யாத்திராகமம் 3:6-ஐ குறிப்பிட்டு, அதை மரித்தோரின் உயிர்த்தெழுதலுக்கு பொருத்திக் காட்டியபோது அவர்கள் ஆச்சரியத்தில் ஆழ்ந்து போனார்கள்.​—⁠லூக். 20:37, 38.

சில சமயங்களில் ஒரு வசனத்தின் சூழமைவையும், அது எழுதப்பட்ட சமயத்தில் நிலவிய சூழ்நிலைகளையும், பேச்சாளரை அல்லது செவிசாய்ப்பவரை பற்றிய தகவல்களையும் குறிப்பிடுவது அறிவொளியூட்டுவதாக இருக்கும். 110-⁠ம் சங்கீதம் பரிசேயர்களுக்கு நன்கு பரிச்சயமான ஒன்று. இருந்தாலும், அதன் முதல் வசனத்திலுள்ள ஒரு முக்கியமான விவரத்திற்கு இயேசு அவர்களுடைய கவனத்தை ஈர்த்தார். “கிறிஸ்துவைக் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள், அவர் யாருடைய குமாரன்? என்று கேட்டார். அவர் தாவீதின் குமாரன் என்றார்கள். அதற்கு அவர்: அப்படியானால், தாவீது பரிசுத்த ஆவியினாலே அவரை ஆண்டவர் என்று சொல்லியிருக்கிறது எப்படி? நான் உம்முடைய சத்துருக்களை உமக்குப் பாதபடியாக்கிப்போடும் வரைக்கும் நீர் என்னுடைய வலதுபாரிசத்தில் உட்காரும் என்று கர்த்தர் [“யெகோவா,” NW] என் ஆண்டவரோடே சொன்னார் என்று சொல்லியிருக்கிறானே. தாவீது அவரை ஆண்டவர் என்று சொல்லியிருக்க, அவனுக்கு அவர் குமாரனாயிருப்பது எப்படி என்றார்.” (மத். 22:41-45) இயேசுவைப் போல நீங்கள் வேதவசனங்களிலிருந்து நியாயங்காட்டி பேசும்போது, கடவுளுடைய வார்த்தையை அதிக கவனமாக வாசிக்க மக்களுக்கு உதவி செய்கிறீர்கள்.

ஒரு பைபிள் புத்தகம் எழுதப்பட்ட காலத்தை அல்லது ஒரு சம்பவம் நடைபெற்ற சமயத்தை பேச்சாளர் குறிப்பிடும்போது, அந்தச் சமயத்தில் நிலவிய சூழ்நிலைகளையும் அவர் விவரிக்க வேண்டும். அப்படி செய்யும்போது, அந்தப் புத்தகத்தின் அல்லது அந்த சம்பவத்தின் முக்கியத்துவத்தை சபையார் இன்னும் தெளிவாக புரிந்துகொள்வார்கள்.

நீங்கள் சொல்வதை அதிக தகவல் நிறைந்த ஒன்றாக்குவதற்கு ஒப்புமைகள் கைகொடுக்கலாம். பிரபலமான ஒரு கருத்தையும் அதைக் குறித்து பைபிள் என்ன சொல்கிறது என்பதையும் வேறுபடுத்திக் காட்டலாம். அல்லது பைபிளிலுள்ள இரண்டு ஒத்த விவரப்பதிவுகளை ஒப்பிட்டுக் காட்டலாம். அவற்றில் வேறுபாடுகள் இருக்கின்றனவா? ஏன்? அவற்றிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்? போன்றவற்றை விளக்கலாம். இப்படி செய்வது அந்தப் பொருளை புதிய கண்ணோட்டத்தில் பார்க்க சபையாருக்கு உதவும்.

கிறிஸ்தவ ஊழியத்தின் ஏதாவதொரு அம்சத்தைப் பற்றி பேசும்படி உங்களுக்கு நியமிக்கப்பட்டால், முதலில் அதைப் பற்றிய சுருக்கத்தை சொல்வதன் மூலம் உங்களுடைய பேச்சுக்கு மெருகூட்டலாம். என்ன செய்ய வேண்டும், ஏன் செய்ய வேண்டும், யெகோவாவின் சாட்சிகளாக நம்முடைய ஒட்டுமொத்த இலக்குகளுடன் இது எவ்வாறு சம்பந்தப்பட்டிருக்கிறது ஆகியவற்றை சொல்லுங்கள். பின்பு, அந்த ஊழியத்தை எங்கே, எப்பொழுது, எப்படி செய்வது என்பதை விளக்குங்கள்.

‘தேவனுடைய ஆழங்கள்’ சிலவற்றைப் பற்றி பேச்சு கொடுத்தால் என்ன செய்யலாம்? (1 கொ. 2:10) அந்தப் பொருளின் சில முக்கிய அம்சங்களை குறிப்பிட்டு விளக்குவதன் மூலம் உங்களுடைய பேச்சை ஆரம்பித்தால், அதைப் பற்றிய நுட்ப விவரங்களை சபையார் அதிவிரைவில் புரிந்துகொள்வார்கள். உங்களுடைய தகவலை கடைசியில் சுருக்கமாக கூறி முடித்தால், உண்மையிலேயே ஏதோவொன்றை கற்றுக்கொண்ட திருப்தி சபையாருக்கு கிடைக்கும்.

கிறிஸ்தவ வாழ்க்கையின் பேரில் அறிவுரை. நீங்கள் தரும் தகவல் எவ்வாறு வாழ்க்கைக்குப் பொருந்துகிறது என்பதை சபையார் கண்டுகொள்ள உதவினால் அவர்கள் அதிக பயனடைவார்கள். உங்களுக்கு நியமிக்கப்பட்ட தகவலில் இருக்கும் வேதவசனங்களை ஆராயும்போது, உங்களையே இவ்வாறு கேட்டுக்கொள்ளுங்கள், ‘நம்முடைய நாள் வரையாக ஏன் இந்தத் தகவல் பைபிளில் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளது?’ (ரோ. 15:4; 1 கொ. 10:11) வாழ்க்கையில் உங்களுடைய சபையார் எதிர்ப்படும் சூழ்நிலைகளைப் பற்றி சிந்தியுங்கள். பைபிளிலுள்ள அறிவுரைகள் மற்றும் நியமங்களின் அடிப்படையில் அந்தச் சூழ்நிலைகளை ஆராயுங்கள். உங்களுடைய பேச்சில், இப்படிப்பட்ட சூழ்நிலைகளை ஒருவர் எப்படி ஞானமாக கையாளலாம் என்பதை வேதவசனங்களிலிருந்து நியாயங்காட்டி பேசுங்கள். பொதுப்படையாக பேசுவதை தவிருங்கள். குறிப்பிட்ட மனப்பான்மைகளையும் செயல்களையும் பற்றி பேசுங்கள்.

முதலாவதாக, நீங்கள் தயாரிக்கும் பேச்சில் மேற்குறிப்பிடப்பட்ட ஆலோசனைகளில் ஓரிரண்டை பயன்படுத்துங்கள். அனுபவம் பெறும்போது, அவற்றில் அதிகமானவற்றை பயன்படுத்துங்கள். காலப்போக்கில், உண்மையிலேயே பயன்தரும் ஒன்றை கேட்கப்போகிறோம் என்ற நம்பிக்கையோடு சபையார் உங்களுடைய பேச்சை ஆவலுடன் எதிர்பார்த்திருப்பார்கள்.

எப்படி செய்வது

  • உங்களுடைய பொருளைப் பற்றி ஏற்கெனவே சபையார் என்ன தெரிந்திருக்கிறார்கள் என்பதை சிந்தியுங்கள்.

  • சரியான வேகத்தில் பேச்சைக் கொடுங்கள்​—⁠நன்கு தெரிந்த குறிப்புகளை வேகமாகவும் புதிய குறிப்புகளை நிறுத்தி நிதானமாகவும் சொல்லுங்கள்.

  • வெறுமனே சம்பவங்களைக் குறிப்பிடாதீர்கள்; அவற்றின் அர்த்தத்தை அல்லது மதிப்பை சொல்லுங்கள்.

  • என்ன? ஏன்? எப்பொழுது? எங்கே? யார்? எப்படி? போன்ற சிந்தையைத் தூண்டும் கேள்விகளை உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள்.

  • வேதவசனங்களிலிருந்து நியாயங்காட்டி பேசுவதற்கு நேரமெடுத்துக் கொள்ளுங்கள்; வசனங்களின் சில பகுதிகளை விரிவாக்குங்கள்.

  • ஒப்புமைகளையும் வேறுபாடுகளையும் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

  • உங்களுடைய தகவலின் சாராம்சத்தை சேர்த்துக்கொள்ளுங்கள்.

  • பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் தீர்மானங்கள் எடுப்பதற்கும் அத்தகவலை எப்படி பயன்படுத்துவது என்பதை காண்பியுங்கள்.

பயிற்சிகள்: (1) மத்தேயு 24:14 அல்லது யோவான் 17:3 போன்ற பழக்கமான வசனத்தை தகவல்நிறைந்த ஒன்றாக்குவதற்கு ஆராய்ச்சி செய்யுங்கள். (2) நீதிமொழிகள் 8:30, 31 மற்றும் யோவான் 5:20-ஐ வாசியுங்கள். இந்த வசனங்களில் விவரிக்கப்பட்டுள்ளபடி, யெகோவா தேவனுக்கும் கிறிஸ்து இயேசுவுக்கும் இடையே உள்ள உறவை தியானிப்பது, ஒரு குடும்பம் பயனடையும் விதத்தில் அந்த வசனங்களை உபயோகிக்க எவ்வாறு உங்களுக்கு உதவலாம்?

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்