செயலற்றவர்களை மறந்துவிடாதீர்கள்
1 பிரஸ்தாபியாய் இருந்து செயலற்றுப்போன யாரையேனும் உங்களுக்குத் தெரியுமா? ஒருவேளை அவர் சபைக்கு வருவதை நிறுத்திவிட்டு சத்தியத்திலிருந்து வழிவிலகிச் சென்றிருக்கலாம். வீட்டுக்கு வீடு ஊழியத்தில் அப்படிப்பட்ட ஒரு நபரை நீங்கள் சந்தித்திருக்கலாம். அந்த நபர் இன்னமும் நம் ஆன்மீக சகோதரராகவே இருக்கிறார் என்பதை நினைவில் வைக்க வேண்டும். அவரை நாம் இன்னமும் நேசிக்கிறோம் என்பதை அவருக்கு உறுதிப்படுத்த வேண்டும். அவர் மறுபடியும் சபைக்கு வருவதற்கு உதவி செய்ய வேண்டும். ‘நம் ஆத்துமாக்களுக்கு மேய்ப்பரும் கண்காணியுமானவரிடத்தில் திரும்பிவர’ அவருக்கு உதவ வேண்டும்.—1 பே. 2:25.
2 அக்கறை காட்டுங்கள்: செயலற்றுப்போன பிரஸ்தாபிக்கு ஃபோன் செய்து அவருடன் சிறிது நேரம் பேசுவதோ அவரைப் போய் சந்திப்பதோ, அவரை நாம் மறந்துவிடவில்லை என்பதை அவருக்கு உணர்த்தும். அவரிடம் என்ன பேசலாம்? அவரை நாம் நினைத்துக்கொண்டிருக்கிறோம் என சொல்வதன் மூலமாகக்கூட உற்சாகப்படுத்தலாம். சந்தோஷமான விஷயங்களையும் கட்டியெழுப்பும் விஷயங்களையுமே அவரிடம் பேசுங்கள். (பிலி. 4:8) சமீபத்தில் நடந்த கூட்டத்தில் நம் மனதைத் தொட்ட ஒரு குறிப்பை நாம் அவரிடம் சொல்லலாம். அடுத்து நடைபெறவிருக்கும் கூட்டத்திற்கோ மாநாட்டிற்கோகூட அவரை நாம் அழைக்கலாம், அவருக்கு இடம் பிடித்துவைப்பதாக அல்லது அழைத்துச் செல்வதாகச் சொல்லலாம்.
3 20 வருடங்களுக்கும் மேலாக செயலற்ற பிரஸ்தாபியாய் இருந்த ஒரு சகோதரியை ஊழியம் செய்யும்போது நம் சகோதரி சந்தித்தார். அவர் பைபிள் படிப்புக்கு ஒத்துக்கொள்ளவில்லை; என்றாலும், அவரைச் சந்தித்த சகோதரி மறுபடியும் அவரிடம் சென்று சமீபத்திய பத்திரிகைகளைக் கொடுத்தார். அத்துடன், மாவட்ட மாநாடு முடிந்த பிறகு, மாநாட்டின் சிறப்புக் குறிப்புகளையும் அவருடன் கலந்துபேசினார். இவ்வாறு, செயலற்றிருந்த அந்தச் சகோதரி மீண்டும் செயல்படத் தொடங்கினார்.
4 ஒருவர் மீண்டும் வருகையில்: செயலற்ற ஒரு சகோதரர் மீண்டும் சபைக்கு வர ஆரம்பிக்கையில் அவரை நாம் எவ்வாறு நடத்த வேண்டும்? இந்த விஷயத்தில் இயேசுவின் உதாரணத்தைக் கவனியுங்கள். தம்மை தற்காலிகமாக விட்டுச்சென்ற சீஷர்களை இயேசு எவ்வாறு நடத்தினார்? அவர்களை, ‘சகோதரர்’ என்று பாசமாக அழைத்தார், அவர்கள்மீது தமக்கு நம்பிக்கை இருப்பதைக் காட்டினார். அவர்களிடம் முக்கியமான ஒரு வேலையையும் ஒப்படைத்தார். (மத். 28:10, 18, 19) அதன் பிறகு சீக்கிரத்தில் அவர்கள் சுவிசேஷத்தை “இடைவிடாமல்” அறிவித்துக்கொண்டிருந்தார்கள்.—அப். 5:42.
5 செயலற்றவராய் ஆகிவிட்ட பிரஸ்தாபியை மீண்டும் பைபிளைப் படிக்கும்படி நாம் உற்சாகப்படுத்துவதற்கு முன்பும் அப்படிப்பட்டவரை ஊழியம் செய்ய அழைப்பதற்கு முன்பும் மூப்பர்களிடம் ஆலோசனை கேட்க வேண்டும். அவ்வாறு செயலற்றுப்போன ஒரு பிரஸ்தாபியை ஊழியத்தின்போது சந்தித்தால், நாம் மூப்பர்களிடம் அதைத் தெரியப்படுத்த வேண்டும். அவருக்குத் தேவையான உதவியை அவர்கள் அளிப்பார்கள்.
6 முடிவுபரியந்தம் நிலைநிற்பவனே இரட்சிப்பைப் பெறுவான் என பைபிள் தெளிவாகச் சொல்கிறது. (மத். 24:13) எனவே, ஒருவேளை இடறலடைந்தவர்களோ சபையிலிருந்து விலகிச்சென்றவர்களோ இருந்தால் அவர்களைக் கவனத்தில் கொள்ளுங்கள். அப்படிப்பட்டவர்களிடம் உண்மையான அக்கறையைக் காட்டுவதன்மூலம் பொறுமையுடன் யெகோவாவின் அன்பை அவர்களிடம் வெளிக்காட்டலாம், அப்படிச் செய்தால் அவர்கள் மீண்டும் பரிசுத்த சேவையில் நம்முடன் சேர்ந்து ஈடுபடுவதைப் பார்க்கும் சந்தோஷத்தை நாம் பெறலாம்.—லூக். 15:4-10.
[கேள்விகள்]
1. செயலற்றுப்போன பிரஸ்தாபிகளுக்கு உதவ நாம் ஏன் ஆவலாய் இருக்க வேண்டும்?
2. செயலற்றுப்போன ஒரு பிரஸ்தாபியை நாம் எவ்வாறு உற்சாகப்படுத்தலாம்?
3. ஒரு சகோதரி எவ்வாறு மீண்டும் செயல்படத் தொடங்கினார்?
4. நீண்ட இடைவெளிக்குப் பிறகு கூட்டங்களுக்கு வந்து சபையுடன் தொடர்புகொள்ளும் ஒருவரை நாம் எவ்வாறு நடத்த வேண்டும்?
5. செயலற்றுப் போனவர்களைப்பற்றி மூப்பர்களிடம் பேச வேண்டிய சந்தர்ப்பங்களைக் கூறுங்கள்.
6. செயலற்ற பிரஸ்தாபிகளுக்கு உதவி செய்வதன்மூலம் நாம் என்ன மகிழ்ச்சியைப் பெறுவோம்?