‘சோர்ந்துபோகிறவனுக்கு அவர் பெலன் கொடுக்கிறார்’
1 நாம் அனைவருமே அவ்வப்போது சோர்ந்துவிடுகிறோம். வேலைப் பளுவினாலோ உடல் உழைப்பினாலோ மட்டுமே நாம் சோர்வடைவதில்லை. ‘கையாளுவதற்குக் கடினமான இந்தக் கொடிய காலங்களில்’ அநேக சவால்களை எதிர்ப்படும்போதுகூட நாம் சோர்வடைந்துவிடுகிறோம். (2 தீ. 3:1, NW) யெகோவாவின் ஊழியர்களாக, நம்முடைய ஊழியத்தில் சோர்ந்துவிடாமல் இருக்க தேவையான ஆன்மீக பலத்தை நாம் எவ்வாறு பெறலாம்? ‘மகா வல்லமையை’ உடையவராகிய யெகோவாவை சார்ந்திருப்பதன்மூலம் நாம் பெறலாம். (ஏசா. 40:26) அவர் நம்முடைய தேவைகளை அறிந்திருக்கிறார், நமக்கு உதவியளிப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டுகிறார்.—1 பே. 5:7.
2 யெகோவாவின் ஏற்பாடுகள்: இப்பிரபஞ்சத்தைப் படைப்பதற்கு பயன்படுத்திய அதே நிகரற்ற வல்லமை பொருந்திய சக்தியாலேயே நம்மையும் யெகோவா பலப்படுத்துகிறார். அதுதான் பரிசுத்த ஆவி. நாம் சோர்ந்துபோகையில் “புதுப்பெலன்” அடைவதற்கு கடவுளுடைய ஆவி நமக்கு உதவுகிறது. (ஏசா. 40:31) ‘என்னுடைய கிறிஸ்தவ கடமைகளை செய்து முடிப்பதற்கு பரிசுத்த ஆவியைத் தந்து என்னை பலப்படுத்தும்படி கடைசியாக எப்பொழுது ஜெபம் செய்தேன்?’ என்று உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்.—லூக். 11:11-13.
3 கடவுளுடைய ஏவப்பட்ட வார்த்தையைத் தினந்தோறும் வாசித்து, அதை தியானித்து, கிறிஸ்தவப் பிரசுரங்களைத் தவறாமல் படிப்பதன்மூலம் ஆன்மீக ரீதியாகப் போஷிக்கப்படும்போது, ‘நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டு, தன் காலத்தில் தன் கனியைத் தந்து, இலையுதிராதிருக்கிற மரத்தைப்போலிருப்போம்.’—சங். 1:2, 3.
4 நமக்கு ‘பக்கபலமாக’ இருப்பதற்கு நம்முடைய சக விசுவாசிகளையும் யெகோவா பயன்படுத்துகிறார். (கொலோ. 4:10, 11, NW) அவர்கள் கிறிஸ்தவ கூட்டங்களில் தங்களுடைய கட்டியெழுப்பும் உரையாடல்களாலும் பதில்களாலும் பேச்சுகளாலும் நம்மைப் பலப்படுத்துகிறார்கள். (அப். 15:32) முக்கியமாக, கிறிஸ்தவ மூப்பர்கள் ஆன்மீக உதவியையும் புத்துயிரூட்டும் உற்சாகத்தையும் கொடுக்கிறார்கள்.—ஏசா. 32:1, 2.
5 ஊழியம்: நீங்கள் சோர்வடைவதாக உணர்ந்தால் ஊழியம் செய்வதை நிறுத்தாதீர்கள்! மற்ற வேலைகளைப்போல் அல்லாமல், ஊழியத்தில் தவறாமல் பங்குகொள்வது புத்துணர்ச்சியையே அளிக்கிறது. (மத். 11:28-30) நற்செய்தியை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்வது கடவுளுடைய ராஜ்யத்தினிடமாக நம்முடைய கவனத்தை ஒருமுகப்படுத்த உதவுகிறது; நித்தியகால வாழ்க்கையையும் அதன் ஆசீர்வாதங்களையும் எதிர்நோக்கி இருக்கச் செய்கிறது.
6 இந்தப் பொல்லாத உலகம் அழிக்கப்படுவதற்கு முன்பாக செய்யவேண்டியவை அநேகம் இருக்கின்றன. எனவே, ‘தேவன் தந்தருளும் பெலத்தை’ சார்ந்திருந்து, நம்முடைய சேவையில் உறுதியாய் தரித்திருப்பதற்கு நிச்சயம் நமக்கு காரணம் இருக்கிறது. (1 பே. 4:11) யெகோவாவுடைய உதவியால் நம்முடைய வேலையைச் சிறப்பாக செய்து முடிப்போம், ஏனென்றால், ‘சோர்ந்துபோகிறவனுக்கு அவர் பெலன் கொடுக்கிறார்.’—ஏசா. 40:29.