கடவுளுடைய வார்த்தையை ஆதரித்துப் பேசுகிறீர்களா?
1 பைபிளை அவமதிக்கும் இந்த உலகத்தில், உண்மை கிறிஸ்தவர்கள் கடவுளுடைய வார்த்தையை வைராக்கியமாக ஆதரித்து வருகிறார்கள். “வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது” என்று நாம் நம்புகிறோம். யெகோவாவிடம் ஜெபம் செய்கையில் “உம்முடைய வசனமே சத்தியம்” என்று இயேசு சொன்னார். அதே நம்பிக்கையை நாமும் கொண்டிருக்கிறோம். (2 தீ. 3:16; யோவா. 17:17) கடவுளுடைய வார்த்தையை நாம் திறம்பட்ட விதத்தில் எவ்வாறு ஆதரித்துப் பேசலாம்?
2 வசனங்களைக் கற்றுக்கொள்ளுங்கள்: சந்தேகமில்லாமல், இயேசு கடவுளுடைய வார்த்தையை ஊக்கமாகப் படித்தார். அவ்வாறு செய்ததால், தம்முடைய ஊழியகாலம் முழுவதும் வேதவசனங்களிலிருந்து போதிக்க அது அவருக்கு உதவியது. (லூக். 4:16-21; 24:44-46) போதிய வசனங்களை நாம் மனதில் வைத்திருப்பதற்கு எது நமக்கு உதவும்? பைபிளை தினந்தோறும் வாசித்து, நமக்கு உற்சாகமூட்டிய அல்லது ஊழியத்திற்கு பயன்தரும் என்று தோன்றிய ஒரு வசனத்தின்பேரில் தியானிப்பது உதவும். கூட்டங்களுக்காக தயாரிக்கையில், பைபிளைத் திறந்து கொடுக்கப்பட்டிருக்கும் எல்லா வசனங்களையும் வாசிக்க வேண்டும். அந்த வசனங்களின்பேரில் ஒரு குறிப்பைத் தயாரிக்கலாம். கூட்டங்களுக்கு ஆஜராகையில், பேச்சாளர் வசனங்களை வாசிக்கும்போது நாமும் நம்முடைய பைபிள்களில் அவற்றைத் திருப்பி பார்க்க வேண்டும். பைபிள் வசனங்களை கற்றுக்கொள்வது ‘சத்திய வசனத்தை நிதானமாய் பகுத்துப் போதிக்கிறவர்களாய்’ ஆவதற்கு நம்மை தயார்படுத்தும்.—2 தீ. 2:15.
3 பைபிளே பேசட்டும்: நம்முடைய ஊழியத்தின்போது பைபிளையே பேச அனுமதிக்க வேண்டும். உதாரணத்திற்கு, சூழ்நிலை அனுமதித்தால், வீட்டுக்காரருக்கு பைபிளிலிருந்து ஒரு வசனத்தை வாசித்துக் காட்டி அதன்பேரில் அவரோடு கலந்து பேச வேண்டும். அவர் ஏதோவொரு கேள்வியைக் கேட்டால் அல்லது எதிர்ப்பு தெரிவித்தால், பைபிளிலிருந்து பதில் சொல்வதே சிறந்ததாயிருக்கும். வீட்டுக்காரர் வேலையாயிருந்தாலும்கூட, “நான் போவதற்கு முன்பாக, உங்களிடம் ஒரு வசனத்தை வாசித்துக்காட்ட விரும்புகிறேன்” என்று சொல்லி, பைபிளிலுள்ள ஒரு குறிப்புக்கு அவருடைய கவனத்தை திருப்பலாம். முடிந்த வரையில், பைபிளைத் திறந்து அதிலிருந்து வாசியுங்கள்; நீங்கள் வாசிக்கும்போது வீட்டுக்காரரும் அதைப் பார்க்கும் விதமாய் பைபிளைப் பிடித்திருங்கள். ஆனால் சில நேரங்களில் சாதகமான சூழ்நிலைகள் இல்லையென்றால் நம்முடைய பையிலிருந்து பைபிளை வெளியே எடுப்பதற்குப் பதிலாக, நம் மனதிலிருந்து ஒரு வசனத்தை சொல்வது சிறந்ததாயிருக்கும்.
4 திரித்துவம் தவறான போதனை என்று வேதவசனங்களிலிருந்து ஒரு வீட்டுக்காரருக்கு காட்டியபோது, அவர் இவ்வாறு சொன்னார்: “என் வாழ்நாள் முழுதும் சர்ச்சுக்குப் போய் வருகிறேன். ஆனால் பைபிள் இவ்வாறு சொல்கிறது என்று எனக்கு தெரியவே தெரியாது!” அவர் உடனே பைபிள் படிப்பிற்கு ஒத்துக்கொண்டார். தம் ஆடுகள் தம்முடைய சத்தத்துக்கு செவிகொடுக்கும் என்று இயேசு சொன்னார். (யோவா. 10:16, 27) நேர்மை இருதயமுள்ள ஜனங்கள் சத்தியத்தை கண்டுபிடிப்பதற்குச் சிறந்த வழி, பைபிளைத் திறந்து பார்ப்பதன் மூலமே. எனவே கடவுளுடைய சத்திய வார்த்தையை ஆதரித்துப் பேசுகிறவர்களாய் இருப்போமாக!