தொடர்ந்து ‘மிகுந்த கனிகளைக் கொடுங்கள்’
1 இயேசு, தம்மை ஒரு மெய்யான திராட்சச் செடிக்கும், தம்முடைய தகப்பனைத் திராட்சத்தோட்டக்காரருக்கும், தம்மைப் பின்பற்றும் அபிஷேகம் செய்யப்பட்டவர்களைத் திராட்சக் கொடிகளுக்கும், அதாவது கிளைகளுக்கும் அடையாள அர்த்தத்தில் ஒப்பிட்டார். அந்தத் தோட்டக்காரரின் வேலையைப்பற்றி விவரிக்கையில், திராட்சக் கொடி அதன் செடியோடே பலமாக ஒட்டியிருக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். (யோவா. 15:1-4) இதிலிருந்து நமக்கு என்ன பாடம்? யெகோவா தேவனோடு தனிப்பட்ட விதத்தில் அன்னியோன்னியமான உறவை வைத்துக்கொண்டிருக்கிறவர்கள், ‘மெய்யான திராட்சச்செடியான’ இயேசு கிறிஸ்துவுடன் சேர்ந்து கனிதரும் கொடியைப்போல் இருக்கவேண்டும். எனவே, நாம் இரண்டு விதமான கனிகளை அதாவது “ஆவியின் கனி” மற்றும் ராஜ்ய கனியைத் தொடர்ந்து அதிக அளவில் கொடுத்துக்கொண்டே இருக்கவேண்டும்.—கலா. 5:22, 23; மத். 24:14; 28:19, 20.
2 ஆவியின் கனி: ஆவியின் கனியை நாம் எந்தளவுக்கு வெளிக்காட்டுகிறோம் என்பதை வைத்தே நம்முடைய ஆன்மீக வளர்ச்சி பெரும்பாலும் அளவிடப்படுகிறது. எனவே, கடவுளுடைய வார்த்தையைத் தவறாமல் படித்து அதைத் தியானிப்பதன் மூலம் ஆவியின் கனியை வளர்த்துக்கொள்ள நீங்கள் அயராது உழைக்கிறீர்களா? (பிலி. 1:9-11) பரிசுத்த ஆவிக்காக ஜெபம் செய்ய கொஞ்சம்கூட தயங்காதீர்கள். ஏனெனில் பரிசுத்த ஆவி யெகோவாவை மகிமைப்படுத்தும் குணங்களை வளர்த்துக்கொள்ளவும் ஆன்மீக ரீதியில் தடையின்றி தொடர்ந்து முன்னேறவும் உங்களுக்கு உதவும்.—லூக். 11:13; யோவா. 13:35.
3 ஆவியின் கனியை வளர்த்துக்கொள்வது, ஊழியத்தில் இன்னும் வைராக்கியத்தோடு செயல்பட நமக்கு உதவும். உதாரணமாக, சொந்த வேலைகளில் பிஸியாக இருந்தாலும், ஊழியத்தில் தவறாமல் பங்குக்கொள்ள அன்பும் விசுவாசமும் நம்மைத் தூண்டும். சமாதானம், நீடியபொறுமை, தயவு, சாந்தம், இச்சையடக்கம் போன்ற குணங்கள் ஊழியத்தில் நம்மிடம் எரிந்து விழுபவர்களிடம் நல்லபடியாக நடந்துக்கொள்ள நமக்கு உதவும். ஜனங்கள் நாம் சொல்வதைக் காதுகொடுத்து கேட்காவிட்டாலும் ஊழியத்தில் திருப்தி காண சந்தோஷம் நமக்கு உதவும்.
4 ராஜ்ய கனி: நாம் ராஜ்ய கனியை கொடுப்பதும் அவசியம். “அவருடைய [யெகோவாவுடைய] நாமத்தைத் துதிக்கும் உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திரபலியை” செலுத்துவது அதில் அடங்கும். (எபி. 13:15) நற்செய்தியைப் பிரசங்கிப்பதில் முழுமூச்சோடும் உறுதியோடும் செயல்படுவதன் மூலம் நாம் இதைச் செய்யலாம். தனிப்பட்டவிதத்தில் உங்களுடைய ஊழியத்தை முன்னேற்றுவிப்பதன் மூலம் அபரிமிதமான ராஜ்ய கனியைக் கொடுக்க நீங்கள் கடுமையாக முயற்சி செய்கிறீர்களா?
5 தம்மை உண்மையுடன் பின்பற்றுகிறவர்கள் வெவ்வேறு அளவில் கனிகளைத் தருவார்கள் என்று இயேசு குறிப்பிட்டார். (மத். 13:23) எனவே, நாம் நம்மை மற்றவர்களோடு ஒப்பிட கூடாது. ஆனால் நம்மாலான மிகச் சிறந்ததை யெகோவாவுக்கு கொடுக்கவேண்டும். (கலா. 6:4) கடவுளுடைய வார்த்தையின் உதவியோடு நம்முடைய சூழ்நிலைகளை நேர்மையாக சுயபரிசோதனை செய்வது, ‘மிகுந்த கனிகளைக் கொடுத்து’ தொடர்ந்து யெகோவாவை மகிமைப்படுத்த நமக்கு உதவும்.—யோவா. 15:8.