கேள்விப் பெட்டி
◼ முன்பின் தெரியாதவர்களுடன் இன்டர்நெட் மூலமாக தொடர்பு கொள்வதில் என்னென்ன ஆபத்துக்கள் இருக்கின்றன?
இன்டர்நெட் மூலமாக மற்றவர்களுடன் தொடர்பு கொள்வதற்காக ஏகப்பட்ட வெப்சைட்டுகள் முளைத்திருக்கின்றன. இதில் பெரும்பாலான வெப்சைட்டுகள், ஒருவர் தன்னைப் பற்றிய எல்லா விவரங்களையும் அதில் போட்டு வைத்துக்கொள்ளும் விதத்தில் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. அதில் தங்களுடைய படங்களையும் தங்களைப் பற்றிய மற்ற தனிப்பட்ட தகவல்களையும் போட்டுவைக்கலாம். அந்த விவரங்களைப் பார்ப்பவர்கள் அவர்களோடு தொடர்பு கொள்ளலாம். இப்படிப்பட்ட வெப்சைட்டுகள் இளைஞர்கள் மத்தியில் மிக பிரபலமாகிக்கொண்டு வருகின்றன. சபையிலுள்ள சில இளைஞர்களும் யெகோவாவின் சாட்சிகள் என்று சொல்லிக்கொள்பவர்களுடன் இதுபோன்ற வெப்சைட்டுகள் மூலம் தொடர்பு கொள்கிறார்கள்.
இன்டர்நெட் மூலமாக நாம் சந்திக்கும் நபர், தன்னைப் பற்றியும் யெகோவா தேவனோடு தனக்கிருக்கும் உறவைப் பற்றியும் அவருடைய உள்நோக்கங்களைப் பற்றியும் நம்மிடமிருந்து மிக சுலபமாக மூடி மறைத்துவிடலாம். (சங். 26:4, NW) தன்னை ஒரு யெகோவாவின் சாட்சி என்று சொல்லிக்கொள்ளும் ஒருவர் உண்மையில் ஒரு அவிசுவாசியாகவோ சபை நீக்கம் செய்யப்பட்டவராகவோ இருக்கலாம். இன்னும் சொல்லப்போனால் தன் வளையில் சிக்கவைக்க காத்துக்கொண்டிருக்கும் ஒரு விசுவாசதுரோகியாகவும் இருக்கலாம். (கலா. 2:4) பிள்ளைகளைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்யும் காமுகர்கள் தங்களுடைய இரையைத் தேட இதுபோன்ற வெப்சைட்டுகளை உபயோகிக்கிறார்கள் என்று அறிக்கை காட்டுகிறது.
இன்டர்நெட் மூலமாக நாம் தொடர்புகொள்ளும் நபர் சபையில் நல்ல நிலைநிற்கையில் இருக்கிறார் என்று நமக்கு தெளிவாக தெரிந்திருந்தாலும், இப்படிப்பட்ட சூழலில் நாம் தகாத காரியங்களை சுலபமாக பேச ஆரம்பிக்கலாம். ஏனெனில் நேருக்கு நேர் பார்க்காத ஒரு நபரிடம், ஜனங்கள் வரம்பு மீறி பேச தயங்கமாட்டார்கள். ஆன்லைனில் தொடர்புகொள்ளும்போது அவர்களை யாராலும் பார்க்கமுடியாது என்றும் அவர்கள் என்ன பேசினாலும் மற்றவர்களுக்கு, அதாவது தங்களுடைய பெற்றோருக்கு அல்லது மூப்பர்களுக்கு தெரியவராது என்றும் நினைக்கலாம். இதில் சோகமான விஷயம் என்னவென்றால் கிறிஸ்தவ பெற்றோர்களால் வளர்க்கப்பட்ட அநேக இளைஞர்கள் இந்த வளையில் சிக்கியிருக்கிறார்கள்; அசிங்கமான பேச்சிலும் ஈடுபட்டிருக்கிறார்கள். (எபே. 5:3, 4; கொலோ. 3:8) இன்னும் சிலர், காம உணர்ச்சிகளைத் தூண்டும் தங்கள் புகைப்படங்களை அதில் போட்டுவைக்கிறார்கள். கேவலமான செல்லப்பெயர்களைச் சூட்டிக்கொள்கிறார்கள். அல்லது பாலியல் விஷயங்களை அப்பட்டமாக விவரிக்கும் மியூசிக் வீடியோக்களுக்கு செல்லும் பாதையை அந்த விவரங்களோடு கொடுக்கிறார்கள்.
மேற்கூறப்பட்ட விஷயங்களின் காரணமாக தங்களுடைய பிள்ளைகள் கம்ப்யூட்டரைப் எப்படி பயன்படுத்துகிறார்கள் என்பதில் பெற்றோர் கவனமாக இருக்கவேண்டும். (நீதி. 29:15) முன்பின் தெரியாத ஒரு நபரை நாம் விட்டுக்குள் அழைப்போமா? அல்லது அவர்களை நம் பிள்ளைகளுடன் தன்னந்தனியாகதான் இருக்கவிடுவோமா? அதேபோல்தான் இன்டர்நெட் மூலமாக முன்பின் தெரியாதவர்களை நண்பர்களாக ஆக்கிக்கொள்வது நமக்கும் சரி நம்முடைய பிள்ளைகளுக்கும் சரி ஆபத்துதான். அவர்கள் தங்களை யெகோவாவின் சாட்சிகள் என்று சொல்லிக்கொண்டாலும் அது ஆபத்துதான்.—நீதி. 22:3.