நாம் பெற்ற பாக்கியங்களை நெஞ்சார நேசிக்கிறோம்!
1 மனிதர் தோன்றிய காலந்தொட்டே, யெகோவா தம் ஊழியர்களுக்குப் பலவிதமான பாக்கியங்களை அருளியிருக்கிறார். ஆண், பெண், வயது, அந்தஸ்து என எந்த வித்தியாசமுமின்றி அவற்றை அருளியிருக்கிறார். (லூக். 1:41, 42; அப். 7:46, NW; பிலி. 1:29, NW) இன்று அவர் நமக்கு என்னென்ன பாக்கியங்களை அருளியிருக்கிறார்?
2 நாம் பெற்றிருக்கும் சில பாக்கியங்கள்: யெகோவாவால் போதிக்கப்படுவது நமக்கு கிடைத்துள்ள பெரும் பாக்கியமே. (மத். 13:11, 15) சபை கூட்டங்களில் யெகோவாவைத் துதித்து பதில்களைச் சொல்வது நமக்குக் கிடைத்த மற்றொரு பாக்கியமாகும். (சங். 35:18) பதில் சொல்வதற்கு நமக்கு வாய்ப்புகள் கிடைக்கும்போது நாம் உள்ளார்வத்தோடு சொல்கிறோம். அதைப்போலவே, சபையில் நமக்கு கிடைக்கிற ஒவ்வொரு நியமிப்புகளையும் நாம் பாக்கியமாகக் கருதினால், அவற்றை நம்மால் முடிந்தளவுக்கு மிகச் சிறப்பாகச் செய்வோம். நம்முடைய ராஜ்ய மன்றங்களைச் சுத்தம் செய்வதையும் நல்ல நிலையில் வைப்பதையும் பெரும் பாக்கியமாகக் கருதி அதில் தவறாமல் கலந்துகொள்கிறோமா?
3 தங்கள் ஜெபங்களை கடவுள் உண்மையில் கேட்கிறாரா என லட்சக்கணக்கானோர் சந்தேகிக்கிறார்கள்; ஆனால் இந்தச் சர்வலோகத்திலேயே மிக முக்கியமான நபர் நம் ஜெபங்களைக் கேட்பது நாம் பெற்றுள்ள பெரும் பாக்கியமே. (நீதி. 15:29) தம் ஊழியர்களின் ஜெபங்களை யெகோவாதாமே கேட்கிறார். (1 பே. 3:12) இத்தனை தடவைதான் ஜெபிக்க வேண்டும் என்று அவர் எந்தக் கட்டுப்பாடும் வைப்பதில்லை. “எந்தச் சமயத்திலும்” அவரிடம் ஜெபம் செய்ய முடிவது நமக்குக் கிடைத்த பொன்னான பரிசு, அல்லவா?—எபே. 6:18.
4 ‘தேவனுக்கு உடன்வேலையாட்கள்’: ‘தேவனுக்கு உடன்வேலையாட்களாக’ கடவுளுடைய ராஜ்யத்தின் நற்செய்தியை அறிவிப்பது நமக்குக் கிடைத்த மிக அருமையான பாக்கியங்களில் ஒன்றாகும். (1 கொ. 3:9) இது திருப்தியையும் புத்துணர்ச்சியையும் தரும் வேலையாகும். (யோ. 4:34) இந்த வேலையைச் செய்து முடிக்க கடவுளுக்கு மனிதர்களின் உதவி தேவையில்லை; என்றாலும், இந்த வேலையை யெகோவா நமக்குத் தந்திருப்பது அவருடைய அன்பின் வெளிக்காட்டாக இருக்கிறது. (லூக். 19:39, 40) இந்தப் பாக்கியத்தை யெகோவா கண்மூடித்தனமாக எல்லாருக்கும் கொடுத்துவிடவில்லை. வெளி ஊழியத்தில் பங்குகொள்கிறவர்கள் ஆன்மீகத் தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும், அதைக் காத்து வருகிறவர்களாயும் இருக்க வேண்டும். (ஏசா. 52:11) ஒவ்வொரு வாரமும் ஊழியத்திற்கென்று முக்கியமாக நேரம் ஒதுக்குவதன்மூலம் நாம் பெற்ற இந்தப் பாக்கியத்தை நெஞ்சார நேசிக்கிறோம் என்பதைக் காட்டுகிறோமா?
5 யெகோவா அருளியிருக்கும் பாக்கியங்கள் நம் வாழ்க்கையை வளமுள்ளதாக்குகின்றன. (நீதி. 10:22) அவற்றைத் துச்சமாகக் கருதாதீர்கள். நாம் பெற்றிருக்கும் பாக்கியங்களை நெஞ்சார நேசிக்கிறோம் என்பதை செயலில் காட்டுவதன்மூலம் ‘நன்மையான எந்த ஈவையும் பூரணமான எந்த வரத்தையும்’ அருளுகிற நம் பரலோகத் தகப்பனை நாம் பிரியப்படுத்துகிறோம்.—யாக். 1:17.