புதிய வட்டார மாநாட்டு நிகழ்ச்சி
யெகோவா எல்லா மகிமையையும் பெற்றுக்கொள்ளத் தகுதியானவர். அப்படியானால், அவரை நாம் எவ்வாறு மகிமைப்படுத்தலாம்? இதில் என்னென்ன சவால்களைச் சிலர் சந்திக்கிறார்கள்? இன்று கடவுளை மகிமைப்படுத்துகிறவர்கள் என்னென்ன ஆசீர்வாதங்களைப் பெறுகிறார்கள்? 2008-ஆம் ஆண்டிற்கான வட்டார மாநாட்டு நிகழ்ச்சிநிரல் இத்தகைய கேள்விகளுக்குத் திருப்திகரமான பதில்களை அளிக்கும். “எல்லாவற்றையும் தேவனுடைய மகிமைக்கென்று செய்யுங்கள்” என்ற பொருளில் இந்த வட்டார மாநாடு தயாரிக்கப்பட்டிருக்கிறது. (1 கொ. 10:31) அபரிமிதமான ஆன்மீக போதனைகள் நிறைந்த இந்த இரண்டு நாள் நிகழ்ச்சியில் நாம் என்னென்ன விஷயங்களைக் கற்றுக்கொள்ளப் போகிறோம் என்பதைக் கவனியுங்கள்.
“ஏன் தேவனை மகிமைப்படுத்த வேண்டும்?,” “கடவுள் எதிர்பார்ப்பவற்றைச் செய்வதில் முன்மாதிரி வையுங்கள்” ஆகிய தலைப்புகளில் மாவட்டக் கண்காணி பேசுவார். “தேவனை மகிமைப்படுத்துகிற ஜனங்கள் யார்?” என்ற தலைப்பில் பொதுப் பேச்சையும், “ஐக்கியப்பட்டவர்களாய் உலகெங்கும் தேவனை மகிமைப்படுத்துதல்” என்ற தலைப்பில் முடிவான பேச்சையும் அவர் கொடுப்பார். தேவராஜ்ய ஊழியப் பள்ளியையும் அவர் நடத்துவார். “தேவனுடைய மகிமையைப் பிரதிபலிப்பதில் பெருமகிழ்ச்சி அடையுங்கள்,” “வட்டாரத்தின் தேவைகளுக்கு கவனம் செலுத்துதல்” என்ற தலைப்புகளிலும் 2 பேதுரு 1:12-ன் அடிப்படையில் “எப்போதும் ‘சத்தியத்தில் உறுதிப்பட்டிருங்கள்’” என்ற தலைப்பிலும் வட்டாரக் கண்காணி பேச்சு கொடுப்பார். அதோடுகூட, எவ்வாறு “பயனியர் ஊழியம் தேவனை மகிமைப்படுத்துகிறது” என்பதையும் கற்றுக் கொள்வோம். சிந்தையைத் தூண்டும் இரண்டு தொடர் பேச்சுகளில் முதல் பேச்சு “நம் வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் தேவனை மகிமைப்படுத்துதல்” என்ற தலைப்பில் அமைந்துள்ளது. 1 கொரிந்தியர் 10:31-ல் உள்ள ஏவப்பட்டு எழுதப்பட்ட வார்த்தைகளின் ஆழமான கருத்துக்களை இது படிப்படியாக விவரிக்கும். “யெகோவாவைத் துதிப்பதற்குப் பரிசுத்த சேவை செய்தல்” என்ற தலைப்பில் அமைந்த தொடர் பேச்சு நம் வணக்கத்தின் பல்வேறு அம்சங்களை விளக்கும். ஞாயிறு அன்று, காவற்கோபுர சுருக்கத்தையும் தின வசன கலந்துரையாடலையும் கேட்போம். அன்றைய நிகழ்ச்சியில் முழுக்காட்டுதல் பெறுவதற்கான ஏற்பாடும் இருக்கும்.
பெரும்பாலான மக்கள் கடவுளைப்பற்றி அறிந்துகொள்ள மறுக்கிறார்கள். அநேகர் யெகோவாவின் மகத்துவங்களைக் குறித்து சிந்தித்துப் பார்க்க முடியாதளவுக்கு மனித திட்டங்களால் திசைதிருப்பப்பட்டிருக்கிறார்கள். (யோவா 5:44) ஆனால் நாமோ, ‘எல்லாவற்றையும் தேவனுடைய மகிமைக்கென்று செய்வது’ எப்படி என்பதைச் சிந்திப்பதன்மூலம் நம் நேரங்களைப் பயனுள்ள விதத்தில் செலவிடுவோம் என்பதில் உறுதியாய் இருக்கிறோம். ஆகவே, இரண்டு நாட்களிலும் காலை, பிற்பகல் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு, அதிலிருந்து முழுமையாக நன்மை அடைவதற்கு திட்டமிடுங்கள்.