நம் ஆன்மீகச் சிந்தையைப் பாதுகாக்க உதவும் ஒரு வட்டார மாநாடு
1. நற்செய்தியை அறிவிக்கும்படி நமக்குக் கொடுக்கப்பட்டுள்ள வேலையைச் செய்ய உதவுவதற்காக யெகோவா செய்துள்ள ஓர் ஏற்பாடு என்ன?
1 நற்செய்தியை அறிவிக்கும்படி கடவுளால் நமக்குக் கொடுக்கப்பட்டுள்ள வேலையில் நாம் ஈடுபடுவதற்குத் தேவையான அறிவுரைகளையும் பயிற்சியையும் ஊக்குவிப்பையும் யெகோவா தாராளமாக அளிக்கிறார். (மத். 24:14; 2 தீ. 4:17) அதற்காக யெகோவா செய்துள்ள ஏற்பாடுகளில் ஒன்றுதான் வட்டார மாநாடு. 2010 ஊழிய ஆண்டில் நடக்கவிருக்கும் வட்டார மாநாட்டின் பொருள், “உங்கள் ஆன்மீகச் சிந்தையைப் பாதுகாத்திடுங்கள்” என்பதாகும்; இது ரோமர் 8:5 மற்றும் யூதா 17-19-ன் அடிப்படையிலானது. இந்த மாநாடு நவம்பர் 2009-ல் ஆரம்பமாகும்.
2. (அ) வட்டார மாநாடு எவ்விதங்களில் நமக்கு பயனளிக்கும்? (ஆ) முன்பு நடந்த வட்டார மாநாடுகள் ஊழியத்தில் உங்களுக்கு எப்படி உதவியிருக்கின்றன?
2 எப்படிப் பயனளிக்கும்: இந்த மாநாடு ஆபத்துகளைக் குறித்து நம்மை எச்சரிக்கும்; உதாரணமாக, நம் நேரத்தை விழுங்கி, உண்மையிலேயே முக்கியமான காரியத்திடமிருந்து நம் கவனத்தைத் திசைத் திருப்புகிற காரியங்களைக் குறித்து எச்சரிக்கும். மனம்போன போக்கில் வாழும் மனப்பான்மையைத் தவிர்ப்பது எப்படியென நாம் கற்றுக்கொள்வோம்; அதோடு, ஆன்மீகச் சிந்தையுள்ளவராய் இருப்பதில் என்னென்ன உட்பட்டுள்ளது என்பதையும் கற்றுக்கொள்வோம். அதிகரித்துவரும் அழுத்தங்கள், விசுவாசத்திற்கு வரும் பயங்கரமான சோதனைகள் ஆகியவற்றின் மத்தியிலும் தங்களுடைய ஆன்மீகச் சிந்தையைக் காத்துக்கொள்வதற்குத் தனிப்பட்ட விதத்திலும் குடும்பமாகவும் என்னென்ன படிகளை எடுக்கலாம் என்பதை ஞாயிற்றுக்கிழமை கொடுக்கப்படும் தொடர்பேச்சு விளக்கும். இந்நிகழ்ச்சி, நம் இருதயத்தைப் பாதுகாப்பதற்கும், நம் ஆன்மீக நலனைப் பராமரிப்பதற்கும், ஆன்மீகச் சிந்தையைப் பாதுகாப்போருக்குக் கிடைக்கப்போகும் மாபெரும் ஆசீர்வாதங்களை மனதில் தெளிவாக வைத்திருப்பதற்கும் உதவும்.
3. அடுத்த வட்டார மாநாடு எப்போது நடைபெறும், உங்களுடைய தீர்மானம் என்ன?
3 அடுத்த வட்டார மாநாடு எப்போது, எங்கே நடைபெறும் என்பதைப் பற்றி அறிந்தவுடன், இரண்டு நாள் நிகழ்ச்சிகளிலும் பங்குகொண்டு கவனித்துக் கேட்பதற்கு ஏற்பாடுகளைச் செய்யுங்கள். ஜாக்கிரதையுள்ளவரை, அதாவது ஊக்கத்துடன் உழைப்பவரை யெகோவா ஆசீர்வதிப்பார் என்பதில் நிச்சயமாய் இருங்கள்.—நீதி. 21:5.
4. வரவிருக்கும் வட்டார மாநாடு எதற்கு உதவுமென நாம் நிச்சயமாய் இருக்கலாம்?
4 ஆம், இந்த நல்ல பரிசைத் தருபவர் யெகோவாவே. உண்மையுள்ள அடிமை வகுப்பாரால் தயாரிக்கப்பட்டிருக்கிற இந்த மாநாடு, கிறிஸ்தவ ஊழியர்களாக நம்முடைய வேலையைச் செய்வதற்கு நிச்சயம் உதவும். ‘எவ்விதச் சந்தேகமும் இல்லாமல் நம்முடைய நம்பிக்கையைப் பற்றி எல்லாருக்கும் அறிவிப்பதற்காக’ யெகோவா அளித்துள்ள அன்பான ஏற்பாடுகள் அனைத்திற்கும் நாம் நன்றியுள்ளவர்களாய் இருக்கிறோம்.—எபி. 10:23-25; யாக். 1:17.