ஒருவரையொருவர் உற்சாகப்படுத்தலாம்!
1 ரோமிலிருந்த சபையாருக்கு அப்போஸ்தலன் பவுல் எழுதினதாவது: ‘நீங்கள் ஸ்திரப்படுவதற்காக ஆவிக்குரிய சில வரங்களை உங்களுக்குக் கொடுக்கும்படிக்கும், உங்களிலும் என்னிலுமுள்ள விசுவாசத்தினால் உங்களோடேகூட நானும் ஆறுதலடையும்படிக்கும், [“உற்சாகமடையும்படிக்கும்,” NW] உங்களைக் காண வாஞ்சையாயிருக்கிறேன்.’ (ரோ. 1:10-12) இன்றும்கூட, பயணக் கண்காணிகள் சபைகளைச் சந்திக்கையில் அவ்வாறே பரஸ்பரம் உற்சாகத்தைப் பெற வாய்ப்புகள் கிடைக்கின்றன.
2 சபையாருக்கு உற்சாகம்: பொதுவாக, வட்டாரக் கண்காணியின் சந்திப்பு பற்றி சுமார் மூன்று மாதங்களுக்கு முன்னதாகவே சபைக்கு அறிவிக்கப்படுகிறது. இதனால், முழுமையாக நன்மை அடையும்படி முன்கூட்டியே அதற்கான ஏற்பாடுகளைச் செய்வதற்குப் போதிய வாய்ப்பு கிடைக்கிறது. (எபே. 5:15, 16) நீங்கள் வேலைக்குச் செல்பவராக இருந்தால், அந்த வாரத்தில் வெளி ஊழியத்தில் கலந்துகொள்வதற்கு வசதியாக விடுப்பு கேட்கலாம். சிலர் அந்த மாதத்தில் துணைப் பயனியர் ஊழியம் செய்வதற்குத் திட்டமிடுகிறார்கள். நீங்கள் ஒருவேளை வேறெங்காவது போகத் திட்டமிட்டிருந்தால், வட்டாரக் கண்காணியின் சந்திப்பைத் தவறவிடாதபடி உங்கள் திட்டத்தை மாற்றியமைத்துக்கொள்ள முடியுமா?
3 சபையாரைத் தனிப்பட்ட விதத்தில் உற்சாகப்படுத்துவதோடு, வெளி ஊழியத்தில் பயிற்சி அளிப்பதும் வட்டாரக் கண்காணி சபைகளைச் சந்திப்பதன் முக்கிய நோக்கமாகும். வட்டாரக் கண்காணியோடு, அல்லது அவருக்குத் திருமணமாகியிருந்தால் அவருடைய மனைவியோடு ஊழியம் செய்வதற்கு நீங்கள் கேட்டுக்கொள்ள முடியுமா? வெவ்வேறு பிரஸ்தாபிகளுடன் சேர்ந்து ஊழியம் செய்ய வட்டாரக் கண்காணி விரும்புகிறார், ஊழியத்தில் அனுபவம் இல்லாத, அல்லது திறமையை வளர்த்துக்கொள்ள ஆவலாயிருக்கிற பிரஸ்தாபிகளுடனும் ஊழியம் செய்ய விரும்புகிறார். ஊழியத்தில் அவர் பேசுவதைப் பார்த்து நிறைய விஷயங்களை நாம் அனைவருமே கற்றுக்கொள்ளலாம், அவர் கனிவோடு தருகிற ஆலோசனைகளைக் கடைப்பிடிக்கலாம். (1 கொ. 4:16, 17) அவரைச் சாப்பாட்டிற்கு அழைப்பது, உற்சாகமூட்டும் கூட்டுறவைப் பெற உங்களுக்கு வாய்ப்பை அளிக்கும். (எபி. 13:2) சபையின் தேவைக்கு ஏற்றவாறு அவர் பேச்சு கொடுப்பதால் அவற்றைக் கவனமாகக் கேளுங்கள்.
4 வட்டாரக் கண்காணிக்கு உற்சாகம்: அப்போஸ்தலன் பவுல், தான் சந்தித்த சபைகளிலிருந்த சகோதரர்களைப் போலவே இருந்தார். எப்படியெனில், பற்பல சவால்களையும் கவலைகளையும் அவரும்கூட சமாளித்துவந்தார். அத்துடன், அவர் பெற்ற உற்சாகத்திற்கு நன்றியுள்ளவராகவும் இருந்தார். (2 கொ. 11:26-28) கடைசியாக ரோமிற்கு ஒரு சிறைக்கைதியாய் பவுல் வருவதைச் சபையார் கேள்விப்பட்டபோது, அவர்களில் சிலர் அங்கிருந்து சுமார் 74 கிலோமீட்டர் தூரத்திலிருந்த அப்பியுபுரம் சந்தை வரைக்கும் வந்தார்கள். ‘அவர்களைக் கண்ட பவுல், தேவனை ஸ்தோத்திரித்துத் தைரியமடைந்தார்.’ (அப். 28:15) அவ்வாறே நீங்களும் உங்களுடைய வட்டாரக் கண்காணியை உற்சாகப்படுத்தலாம். வட்டாரக் கண்காணியின் சந்திப்பிற்கு முழுமூச்சாக ஆதரவு காட்டுவதன் மூலம் அவருக்கு ‘இரட்டிப்பான கனத்தைக்’ கொடுங்கள். (1 தீ. 5:17) உங்களுக்காக அவர் பட்ட பிரயாசைக்கான உங்களுடைய உள்ளப்பூர்வமான நன்றியை சொல்லிலும் செயலிலும் காட்டுங்கள். உங்களுடைய விசுவாசம், அன்பு, சகிப்புத்தன்மை ஆகியவற்றைக் கண்டு அவரும் அவருடைய மனைவியும் அகமகிழ்வார்கள்.—2 தெ. 1:3, 4.
5 ‘கையாளுவதற்குக் கடினமான [இந்தக்] கொடிய காலங்களில்,’ யாருக்குத்தான் உற்சாகம் தேவையில்லை? (2 தீ. 3:1) ஆகவே, வட்டாரக் கண்காணி சந்திக்கப்போகிற விசேஷ வாரத்தில் நீங்கள் முழுமையாகப் பங்கெடுக்க இப்போதே தீர்மானியுங்கள். வட்டாரக் கண்காணிகளும் சரி பிரஸ்தாபிகளும் சரி, அனைவருமே பரஸ்பர உற்சாகத்தைப் பெற்று மகிழலாம். இவ்வாறு, ‘ஒருவரையொருவர் தேற்றி, ஒருவருக்கொருவர் பக்திவிருத்தி உண்டாகும்படியும்’ செய்யலாம்.—1 தெ. 5:11.
[கேள்விகள்]
1. பயணக் கண்காணிகள் சபைகளைச் சந்திக்கையில் என்னென்ன விசேஷ வாய்ப்புகள் கிடைக்கின்றன?
2. வட்டாரக் கண்காணியின் சந்திப்பு பற்றி ஏன் முன்னதாகவே அறிவிக்கப்படுகிறது?
3. வட்டாரக் கண்காணியின் சந்திப்பில் உற்சாகத்தைப் பெற நாம் தனிப்பட்ட விதத்தில் என்ன செய்யலாம்?
4. வட்டாரக் கண்காணியை நாம் எவ்வாறு உற்சாகப்படுத்தலாம்?
5. நம் அனைவருக்கும் இன்று உற்சாகம் ஏன் தேவைப்படுகிறது?