ஊழியத்தில் நாம் எப்போதும் ஆர்வத்துடன் ஈடுபட வேண்டும்
1 உலகளாவிய ராஜ்ய பிரசங்கிப்பு வேலையிலும் சீஷராக்கும் வேலையிலும் யெகோவாவின் சாட்சிகள் முழுமூச்சுடன் ஈடுபட்டு, 1992 முதல் ஒவ்வொரு வருடமும் 100 கோடிக்கும் அதிகமான மணிநேரத்தை செலவிட்டிருக்கிறார்கள். மாபெரும் இந்தச் சாதனையில் நாமும் ஒரு சிறிய பங்கை வகித்திருக்கிறோம் என்பதை எண்ணிப் பார்க்கையில் எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது!—மத். 28:19, 20.
2 பார்க்கப்போனால், யெகோவாவுக்கே எல்லா நன்றியும் மகிமையும் சேர வேண்டும். ஏனெனில், இந்தக் ‘கொடியகாலங்களில்’ ஊழியத்தைச் செய்வதற்கு நமக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் ஆதரவையும் அளித்து வருகிறவர் அவரே. (2 தீ. 3:1) முக்கியமான இந்த வேலையில் தொடர்ந்து ஆர்வத்துடன் ஈடுபட வேண்டுமென்றால் நமக்கு என்ன தேவை?
3 ஆர்வத்தின் ஆதாரம்: கடவுள் மற்றும் சக மனிதர்கள்மீது நமக்கிருக்கிற ஆழமான அன்பு, நம் ஒப்புக்கொடுத்தலுக்கு இசைவாக நடக்க வேண்டுமென்ற உள்ளார்ந்த ஆசை ஆகியவை ராஜ்ய பிரசங்கிப்பு வேலையைச் செய்ய நம்மைத் தூண்டுகின்றன. (மத். 22:37-39; 1 யோ. 5:3) பிரசங்க வேலையில் மும்முரமாய் ஈடுபடுவதற்காக நிறைய தியாகங்களைச் செய்வதற்கு அன்பு நம்மை உந்துவிக்கிறது.—லூக். 9:23.
4 ஆர்வத்தை காத்துக்கொள்ள கடினமாய் முயலுங்கள்: ஊழியத்தில் நம் ஆர்வத்தைக் குறைப்பதற்கு நம் எதிரியான பிசாசு தன்னால் முடிந்த எல்லாவற்றையும் செய்கிறான். நம் பிராந்தியத்தில் நற்செய்திக்குச் செவிசாய்க்காத மக்கள், நம்மைத் திசை திருப்பும் உலகக் காரியங்கள், அன்றாட வாழ்க்கையின் கவலைகள், நாளுக்கு நாள் மோசமாகி வரும் நம் உடல்நிலை ஆகியவை பிசாசு நம்மை சோர்வடையச் செய்வதற்குப் பயன்படுத்தும் காரியங்களில் சில மட்டுமே.
5 எனவே, நம்முடைய ஆர்வம் தணிந்துவிடாமல் காத்துக்கொள்ள நாம் கடினமாய் முயல வேண்டும். ‘ஆதியில் நாம் கொண்டிருந்த அன்பை’ மறுபடியும் வளர்த்துக்கொள்வது அவசியம். அதற்கு கடவுளுடைய வார்த்தையாகிய பைபிளை நாம் தவறாமல் வாசித்து, தியானிக்க வேண்டும். அதோடு, நம் விசுவாசத்தைப் பலப்படுத்திக்கொள்வதற்காக “உண்மையும் விவேகமுமுள்ள ஊழியக்காரன்” மூலமாக யெகோவா ஏற்பாடு செய்யும் அனைத்து காரியங்களையும் நன்றாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.—வெளி. 2:4; மத். 24:45; சங். 119:97.
6 பைபிள் தீர்க்கதரிசனங்கள் தெளிவாகக் குறிப்பிடுகிறபடி, தேவபக்தியில்லாத மக்களை அழிப்பதற்கான யெகோவாவின் நாள் வேகமாய் நெருங்கி வருகிறது. (2 பே. 2:3; 3:10) இதை மனதில் வைத்துக்கொண்டு, இப்போது நடந்துவரும் ராஜ்ய பிரசங்கிப்பு வேலையிலும் சீஷராக்கும் வேலையிலும் மும்முரமாய் ஈடுபட்டு ஊழியத்தில் நமக்கிருக்கும் ஆர்வத்தை காத்துக்கொள்வோமாக!