ஊழியம் செய்கையில் ஒருவரையொருவர் பலப்படுத்துங்கள்
1 பலப்படுத்தும் விதமாக, ‘ஏற்ற சமயத்தில் சொல்லப்படும் வார்த்தையைக்’ கேட்க நாம் எல்லாருமே விரும்புவோம். (நீதி. 25:11) மற்றவர்களோடு சேர்ந்து ஊழியம் செய்யும்போது, நம்முடைய பேச்சு அவர்களை பலப்படுத்தும் விதத்தில் இருக்க நாம் என்ன செய்யலாம்?
2 ஊக்கமூட்டும் பேச்சு: கடவுளுடன் நம்முடைய உறவைப் பலப்படுத்திக்கொள்ள உதவும் விஷயங்களை நம்மோடு ஊழியம் செய்பவர்களிடம் பேசுவது அதிக பயனளிக்கும், அல்லவா? (சங். 37:30) நற்செய்தியைச் சொல்லும் விதத்தைப் பற்றியோ, சமீபத்தில் ஊழியத்தில் நமக்குக் கிடைத்த அனுபவங்களைப் பற்றியோ பேசலாம். (அப். 15:3) தனிப்பட்ட பைபிள் படிப்பிலோ, சமீபத்திய பத்திரிகைகளிலோ, சபைக் கூட்டத்திலோ ஆர்வமூட்டும் விஷயத்தைக் கற்றுக்கொண்டிருந்தால் அதைச் சொல்லலாம். ராஜ்ய மன்றத்தில் சமீபத்தில் கேட்ட பொதுப் பேச்சில் சொல்லப்பட்ட விஷயங்களைக் கலந்துபேசலாம்.
3 ஊழியத்தில் நாம் பேசும்போது வீட்டுக்காரர் ஏதாவது மறுப்பு தெரிவிக்கலாம் அல்லது கேள்வி கேட்டிருக்கலாம். அதற்குச் சரியாக பதில் சொல்ல தெரியாதபோது, நமக்கு வருத்தமாக இருந்திருக்கலாம். அந்த வீட்டிலிருந்து வந்தபிறகு, இனிமேல் இதுபோன்ற சூழ்நிலை எழும்போது எப்படிச் சமாளிக்கலாம், எப்படிப் பதில் சொல்லலாம் என்பதைப்பற்றி நம்முடன் ஊழியம் செய்வோருடன் ஒருசில நிமிடங்கள் பேசுவது நமக்குப் பயனளிக்கும். ஒருவேளை, நியாயங்காட்டி பேசுதல் புத்தகத்தைப் பார்த்து, அதிலுள்ள குறிப்புகளைக் கலந்துபேசலாம். நம்முடன் ஊழியம் செய்பவர் நற்செய்தியைச் சொன்னபோது, அதில் நமக்கு ஏதாவது பிடித்திருந்தால் அதற்காக அவரை மனதாரப் பாராட்டலாம்; இது அவரை உற்சாகப்படுத்தும்.
4 முயற்சி எடுங்கள்: நம்முடைய புத்தகப் படிப்பு மையத்திற்கு வரும் யாருடனாவது சேர்ந்து சமீபத்தில் ஊழியம் செய்யவில்லையா? நம்முடன் சேர்ந்து ஊழியம் செய்யும்படி அவர்களை அழைக்கலாமே. இதன்மூலம் ‘ஒருவருக்கொருவர் ஆறுதல் அளிக்க’ [அதாவது, ஊக்கப்படுத்திக்கொள்ள] முடியும். (ரோ. 1:11) ஒழுங்கான பயனியர்கள், துணைப் பயனியர்கள் ஆகியோர் தங்களுடன் ஊழியம் செய்ய மற்ற பிரஸ்தாபிகள் வருகையில், அதிலும், முக்கியமாக அதிகாலையில் அல்லது பிற்பகலில் வருகையில் சந்தோஷப்படுகிறார்கள். ஏனெனில், அந்தச் சமயங்களில் குறைவான நபர்களே ஊழியத்திற்கு வருவார்கள். பயனியர்களுடன் ஊழியத்திற்குச் செல்வதன்மூலம், நாம் அவர்களுக்கு உதவலாம். சுகவீனத்தின் காரணமாக ஊழியத்திற்குச் செல்ல முடியாத நிலையில் பிரஸ்தாபிகள் யாராவது இருக்கிறார்களா? அப்படிப்பட்டவர்களை நம்முடன் ஊழியத்திற்கு, அல்லது பைபிள் படிப்பிற்கு அழைத்து செல்வது இருவருக்குமே நன்மை அளிக்கும்.—நீதி. 27:17.
5 பாராட்டு எப்போதுமே உற்சாகத்தைத் தருகிறது, சின்ன விஷயங்களிலும்கூட. மற்றவர்களுடன் சேர்ந்து ஊழியம் செய்யும்போது இதை மனதில் வைத்திருக்க வேண்டும். ஏனெனில், ‘ஒருவரையொருவர் பலப்படுத்தவே’ நாம் விரும்புகிறோம்.—1 தெ. 5:11, ஈஸி டு ரீட் வர்ஷன்.