கிளை அலுவலகத்திலிருந்து கடிதம்
அன்புள்ள ராஜ்ய பிரஸ்தாபிகளே:
கடந்த ஊழிய ஆண்டில் நம்முடைய சிறந்த சேவையை யெகோவா உண்மையிலேயே ஆசீர்வதித்திருக்கிறார். மார்ச் மாதத்தில் கிறிஸ்துவின் மரண நினைவுநாள் ஆசரிப்புக்கு 74,326 பேர் வந்திருந்தார்கள். அந்த மாதத்தில் உச்சநிலை எண்ணிக்கையாக 29,050 பைபிள் படிப்புகள் அறிக்கை செய்யப்பட்டது சந்தோஷத்தை அளித்தது. மே மாதத்தில் புதிய உச்சநிலையாக 29,065 பிரஸ்தாபிகள் ஊழிய அறிக்கை செய்திருப்பது ஆனந்தத்தை அளிக்கிறது. இதே மாதத்தில் இதுவரை இல்லாத உச்சநிலையாக 2,342 ஒழுங்கான பயனியர்கள் அறிக்கை செய்திருக்கிறார்கள்.
பைபிள் செய்தியிடம் ஆர்வம் காட்டுகிற அநேகர் ஓரளவு கல்வி கற்றவர்களாக அல்லது படிப்பறிவே இல்லாதவர்களாக இருக்கிறார்கள். மேலும், பைபிளைப் பற்றி எதுவுமே தெரியாதவர்கள்கூட நம்முடைய பிரசுரங்களைப் படிக்கிறார்கள் என்பதை நாம் நினைவில் வைக்க வேண்டும். இப்படி எல்லா தரப்பினரும் புரிந்துகொள்ளும் விதத்திலும் அவர்களுடைய நெஞ்சைத் தொடும் விதத்திலும் நம்முடைய பிரசுரங்களை மொழிபெயர்க்க வேண்டியிருக்கிறது. (1 தீ. 2:4) எனவே, எளிய நடையில் மொழிபெயர்க்க மொழிபெயர்ப்பவர்களுக்கு விசேஷ பயிற்சி அளிக்கப்பட்டிருக்கிறது. இதனால், படித்தவர்கள் மட்டுமல்ல, பாமரர்களும் சிறுவர்களும்கூட பிரசுரங்களைத் தெளிவாகப் புரிந்துகொள்ள முடிகிறது. (மத். 11:25) நம்முடைய பிரசுரங்கள் இயல்பான நடையிலும் எளிதில் புரிந்துகொள்ளும் விதத்திலும் இருப்பதற்காகப் பலரும் பாராட்டு தெரிவித்திருக்கிறார்கள்.—1 கொ. 14:9-11.
கடவுளுடைய அமைப்புக்குள் திரண்டு வரும் ஜனங்கள் கூடிவருவதற்கு ஏற்ற இடங்களை உருவாக்கிக் கொடுக்க, கடந்த வருடம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் 15 ராஜ்ய மன்றங்கள் கட்டப்பட்டன. இந்த மாபெரும் பணியில், சுமார் 70 கைதேர்ந்த சகோதரர்கள் சேவை செய்ய முன்வந்திருக்கிறார்கள். இந்த ஊழிய ஆண்டில் யெகோவாவின் ஆசீர்வாதத்துடன் புதிதாக 25 ராஜ்ய மன்றங்களைக் கட்ட நாங்கள் திட்டமிட்டிருக்கிறோம். மதிப்புமிக்க நன்கொடைகளாலும் இதயப்பூர்வமான ஜெபங்களாலும் நீங்கள் அளிக்கிற ஆதரவுக்கு நாங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.—நீதி. 3:9, 10.
உங்கள் சகோதரர்கள்,
இந்திய கிளை அலுவலகம்