எளிமையாகக் கற்றுக்கொடுங்கள்
1. தெளிவாகத் திறம்பட கற்பிப்பதற்கு முக்கிய அம்சமாக இருக்கும் ஒன்று என்ன?
1 திறம்பட கற்பிப்பதற்கு முக்கிய அம்சமாக இருக்கும் ஒன்று எளிமையாகப் பேசுவதே. பெரிய போதகராகிய இயேசு கற்பித்த விதத்தைச் சிந்திப்பது ‘கற்பிக்கும் கலையில்’ முன்னேற நமக்கு உதவும்.—2 தீ. 4:2; யோவா. 13:13.
2. எளிமையாகக் கற்பிப்பதற்கு என்ன செய்ய வேண்டும், அவ்வாறு கற்பிப்பதால் என்ன நன்மை?
2 எளிமையாகப் பேசுங்கள்: இயேசு கொடுத்த மலைப்பிரசங்கத்தில், மனிதர் ஒருபோதும் பேசியிராத மிக ஆழமான சத்தியங்கள் சில உள்ளன; அவற்றையெல்லாம் அவர் எளிய வார்த்தைகளில் பேசினார். (மத்., அதிகாரங்கள் 5-7) இயேசு பேசியதைக் கேட்டுக்கொண்டிருந்த திரளான மக்கள் ‘அவர் கற்பித்த விதத்தைக் கண்டு மலைத்துப்போனார்கள்.’ அவரைக் கைதுசெய்வதற்கு அனுப்பப்பட்ட காவல் அதிகாரிகள் அவருடைய பேச்சினால் கவரப்பட்டு, “அந்த மனிதர் பேசுவதுபோல் இதுவரை யாருமே பேசியதில்லை” என்றார்கள். (மத். 7:28, 29; யோவா. 7:46) ஆகவே, சத்தியத்தை மற்றவர்கள் முழுமையாக நம்ப வேண்டும் என்பதற்காக, புரிந்துகொள்வதற்குக் கடினமான பெரிய, பெரிய வார்த்தைகளையோ சிக்கலான சொற்றொடர்களையோ விலாவாரியான உதாரணங்களையோ நாம் பயன்படுத்த வேண்டியதில்லை. எல்லாருக்கும் தெரிந்த வார்த்தைகளைப் பயன்படுத்தி சத்தியத்தைத் தெள்ளத்தெளிவாக விளக்கலாம்.
3. சிலர் கேட்போரிடம் அளவுக்கதிகமான விஷயங்களைச் சொல்வதற்குக் காரணம் என்ன, இதை எப்படித் தவிர்க்கலாம்?
3 அளவோடு பேசுங்கள்: இயேசு, கேட்போரை மனதில் வைத்து எந்தளவு விஷயங்களை ஒரு சமயத்தில் அவர்களுக்கு அளிக்கலாம் என்பதைத் தீர்மானித்தார். (யோவா. 16:12) நாமும் ஆட்களைப் புரிந்துகொண்டு அவர்களுடைய தேவைகளுக்கேற்ப பேச வேண்டும்; முக்கியமாக உறவினரிடம், சமீபத்தில் ஆர்வம் காட்ட ஆரம்பித்தவர்களிடம் அல்லது பிள்ளைகளிடம் சாட்சிகொடுக்கையில் அவ்வாறு செய்ய வேண்டும். அவர்கள் நன்கு கவனிப்பதுபோல் தோன்றினாலும் அளவுக்கதிகமான விஷயங்களைப் பேசாதவாறு கவனமாய் இருக்க வேண்டும். நல்மனமுள்ளவர்கள், உண்மைக் கடவுளாகிய யெகோவாவைப் பற்றி தொடர்ந்து கற்றுக்கொள்வார்கள்.—யோவா. 17:3; 1 கொ. 3:6.
4. அநேக விளக்கங்கள் கொடுப்பதற்குப் பதிலாக முக்கிய குறிப்புகளுக்குக் கவனம் செலுத்துவது ஏன் பயனுள்ளது?
4 முக்கிய குறிப்புகளுக்குக் கவனம் செலுத்துங்கள்: இயேசு கேட்போரின் மனதைக் குழப்பும் விதத்தில் அநேக விளக்கங்களைக் கொடுத்து பேசவில்லை. உதாரணமாக, “கல்லறைகளில் உள்ள அனைவரும் . . . வெளியே வருவார்கள்” என்று அவர் சொன்ன சமயத்தில் இரண்டு விதமான உயிர்த்தெழுதல்களைப் பற்றி விலாவாரியாக விளக்கவில்லை. (யோவா. 5:28, 29) அவ்வாறே நாமும் பைபிள் படிப்புகளை நடத்தும்போது, முக்கிய குறிப்புகளுக்கு கவனம் செலுத்த வேண்டும், புத்தகத்தில் இல்லாத வேறு விஷயங்களை விளக்கும் மனப்பான்மையைத் தவிர்க்க வேண்டும்.
5. எளிமையாகக் கற்றுக்கொடுத்தால் நாம் என்ன ஆசீர்வாதத்தைப் பெறலாம்?
5 யெகோவா, நாம் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்களை மட்டும் எளிமையாக போதித்திருப்பதற்கு நாம் எவ்வளவு நன்றியுள்ளவர்களாய் இருக்கிறோம்! (மத். 11:25) ஆகவே, எளிமையாகக் கற்றுக்கொடுப்பதில் கவனம் செலுத்தி பலன்தரும் விதமாக ஊழியத்தில் ஈடுபட்டு சந்தோஷம் காண்போமாக.