கற்பிக்கும் கலையை வளர்க்க மூன்று டிப்ஸ்
1. கற்பிக்கும் கலையை வளர்த்துக்கொள்ள நாம் ஏன் முயற்சி செய்ய வேண்டும்?
1 பிரஸ்தாபிகள் எல்லாருமே கற்பிப்பவர்கள்தான். முதல் சந்திப்பாக இருந்தாலும் சரி மறுசந்திப்பாக இருந்தாலும் சரி பைபிள் படிப்பாக இருந்தாலும் சரி, பைபிள் விஷயங்களை நாம் கற்பிக்கிறோம். நாம் கற்றுக்கொடுக்கும் விஷயங்கள் சாதாரணமானவை அல்ல. நாம் “பரிசுத்த எழுத்துக்களை” விளக்கிக் காட்டுகிறோம்; அவை மக்களுக்கு ‘ஞானத்தைத் தந்து . . . மீட்புக்கு வழிநடத்தும்.’ (2 தீமோ. 3:15) இது ஒரு மாபெரும் பாக்கியம்! நம் கற்பிக்கும் கலையை வளர்த்துக்கொள்ள உதவும் மூன்று டிப்ஸை இப்போது பார்க்கலாம்.
2. நாம் எப்படி எளிமையாக கற்பிக்கலாம்?
2 எளிமை: நமக்கு நன்கு தெரிந்த ஒரு விஷயத்தை மற்றவர்கள் எளிதில் புரிந்துகொள்வார்களா என்று நாம் பொதுவாக யோசித்துப் பார்ப்பதில்லை. ஆகவே, பைபிள் படிப்பை நடத்தும்போது தேவையில்லாத அதிக தகவல்களைக் கொடுக்காதீர்கள். மாறாக, முக்கியமான குறிப்புகளைச் சொல்லுங்கள். அதிகமான தகவல்களைக் கொடுப்பது சிறந்த கற்பிக்கும் முறை அல்ல. (நீதி. 10:19) முக்கியமான வசனங்களை வாசித்தாலே போதும். ஒரு வசனத்தை வாசித்தபின் படிக்கும் விஷயத்தோடு அது எப்படிப் பொருந்துகிறது என்று விளக்குங்கள். மத்தேயு 5 முதல் 7 அதிகாரங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள இயேசுவின் மலைப் பிரசங்கத்தில் ஆழமான சத்தியங்கள் உள்ளன, ஆனாலும் இயேசு வார்த்தைகளை அளவாகப் பயன்படுத்தி எளிமையாகக் கற்பித்தார்.
3. உதாரணங்களின் பயன்கள் என்ன, எப்படிப்பட்ட உதாரணங்களைப் பயன்படுத்துவது சிறந்தது?
3 உதாரணங்கள்: உதாரணங்கள் சிந்தையையும் உணர்ச்சிகளையும் தூண்டும், நினைவில் வைக்க உதவும். நல்ல உதாரணங்களைக் கொடுக்க நீங்கள் கதை சொல்லத் தெரிந்தவராக இருக்கத் தேவையில்லை. இயேசு சிறிய, எளிமையான உதாரணங்களையே பயன்படுத்தினார். (மத். 7:3-5; 18:2-4) ஒரு சிறிய பேப்பரில் படங்களை வரைந்து காட்டுவதுகூட பயனுள்ளதாக இருக்கும். கொஞ்சம் யோசித்து பார்த்தால், நல்ல நல்ல உதாரணங்கள் உங்கள் மனதிற்கு வரும்.
4. கேள்விகளை எப்படித் திறம்பட பயன்படுத்தலாம்?
4 கேள்விகள்: உங்கள் மாணவர் சிந்தித்துப் பார்க்க கேள்விகள் கேட்பது அவசியம். அவரிடம் ஒரு கேள்வி கேட்ட பிறகு பொறுமையாக இருங்கள். நீங்களே சட்டென பதிலைச் சொல்லிவிட்டால், மாணவர் என்ன புரிந்துகொண்டார் என்பதை உங்களால் தெரிந்துகொள்ள முடியாது. ஒருவேளை, அவர் தவறாக பதில் சொன்னால் அதைச் சரிசெய்வதற்கு, கூடுதல் கேள்விகள் கேட்டு சரியான பதிலை அவரே சொல்ல உதவுங்கள். (மத். 17:24-27) உண்மைதான், நாம் யாருமே கற்பிப்பதில் நிபுணர்கள் அல்ல. அதனால்தான் நம் கற்பிக்கும் விதத்திற்கு அதிக கவனம் செலுத்தும்படி பைபிள் சொல்கிறது. அப்படிச் செய்தால் நமக்கும் நம் செய்தியை கேட்போருக்கும் முடிவில்லா பலன்கள் கிடைக்கும்.—1 தீ. 4:16.