உங்கள் கண் தெளிவாக இருக்கிறதா?
1. கண் “தெளிவாக” இருப்பது எதை அர்த்தப்படுத்துகிறது?
1 நம்முடைய கண்களை எதன்மீது ஒருமுகப்படுத்துகிறோமோ அதுவே நம் செயல்களைக் கட்டுப்படுத்துகிறது. “கண்தான் உடலுக்கு விளக்கு. உங்கள் கண் தெளிவாக இருந்தால், உங்கள் முழு உடலும் பிரகாசமாக இருக்கும்” என்று இயேசு சொன்னது எவ்வளவு பொருத்தமானது! (மத். 6:22) ஆன்மீக அர்த்தத்தில் நம்முடைய கண் “தெளிவாக” இருந்தால், ஒரே காரியத்தைச் செய்வதில் ஒருமுகப்படுத்தப்பட்டிருக்கும்; அதாவது, கடவுளுடைய சித்தத்தைச் செய்வதில் ஒருமுகப்படுத்தப்பட்டிருக்கும். நாம் கடவுளுடைய அரசாங்கத்திற்கு முதலிடம் கொடுப்போம்; அநாவசியமான பொருள் உடமைகளாலோ ஊழியத்திற்கு இடைஞ்சலாய் இருக்கும் காரியங்களாலோ திசைதிருப்பப்பட மாட்டோம்.
2. எவை நம்முடைய கண்ணோட்டத்தை மாற்றலாம், ஆனால் எவை நமக்கு உதவும்?
2 சுயபரிசோதனை தேவை: நமக்குத் தேவையானவை என மீடியாக்களில் வரும் விளம்பரங்களைப் பார்த்து அல்லது மற்றவர்கள் வைத்திருப்பவற்றைப் பார்த்து, பொருள்களைக் குறித்த நம்முடைய கண்ணோட்டம் மாறலாம். ஒரு காரியத்தில் இறங்குவதற்கு முன்பு அல்லது நம்முடைய நேரத்தை, பணத்தை, அல்லது சக்தியைப் பெருமளவு உறிஞ்சுகிற ஒரு பொருளை வாங்குவதற்கு முன்பு, ‘யெகோவாவுக்குச் செய்யும் ஊழியத்திற்கு அது உதவியாய் இருக்குமா, முட்டுக்கட்டையாய் இருக்குமா?’ என்று நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டும். இவ்வாறு, ‘செலவைக் கணக்கிட்டுப் பார்ப்பது’ நல்லது. (லூக். 14:28; பிலி. 1:9-11) ஊழியத்தில் அதிகம் ஈடுபடுவதற்காக, நம் வாழ்க்கையை இன்னும் எப்படி எளிமையாக்கிக் கொள்ளலாமென அவ்வப்போது ஆராய்ந்து பார்ப்பதும் ஞானமானது.—2 கொ. 13:5; எபே. 5:10.
3. தன் வாழ்க்கையை எளிமையாக்கிக் கொள்வதற்காக மாற்றங்களைச் செய்த ஒரு சகோதரியிடமிருந்து என்ன கற்றுக்கொள்கிறோம்?
3 ஒரு சகோதரி ஒழுங்கான பயனியர் ஊழியம் செய்ய ஆரம்பித்தபோது, தன் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்வதற்கு உதவும் பகுதி நேர வேலை கிடைத்தபோதிலும், தான் செய்துவந்த முழுநேர வேலையை விடவில்லை. அவர் பெற்ற அனுபவப் பாடம்? “யாருமே இரண்டு எஜமான்களுக்கு அடிமையாக இருக்க முடியாது. என் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்வதற்காக என் விருப்பங்களைத் தியாகம் செய்ய வேண்டியிருந்தது. வாங்குகிற பொருள்கள் பழையதாகிவிடுகின்றன என்பதையும், அவற்றைப் பெறுவதற்காக ஓடிஓடி களைத்துப் போனதுதான் மிச்சம் என்பதையும் உணர்ந்தேன்” என்கிறார் அவர். சூழ்நிலைகள் மாறியதால், வாழ்க்கையை எளிமையாக்கிக்கொண்டு, வேலையை மாற்றிக்கொண்டார்; இப்படி மாற்றிக்கொண்டது பயனியர் ஊழியத்தைத் தொடர அவருக்கு உதவியது.
4. நம் கண்ணைத் தெளிவாக வைத்துக்கொள்வது ஏன் இப்போது மிக முக்கியம்?
4 நம் காலத்தின் அவசரத்தன்மையும்கூட, எப்போதும் நம் கண்ணைத் தெளிவாக வைத்துக்கொள்வதை இன்னும் முக்கியமானதாய் ஆக்குகிறது. ஒவ்வொரு நாளும் கடந்து செல்லச் செல்ல, இந்த உலகம் முடிவடைவதற்கும் கடவுளுடைய புதிய உலகம் ஆரம்பமாவதற்கும் ஒரு நாள் நெருங்கி வருகிறோம். (1 கொ. 7:29, 31) ஊழியத்திடம் கவனத்தை ஒருமுகப்படுத்தினால், நாமும் மீட்படைவோம், நமக்குச் செவிசாய்ப்பவர்களும் மீட்படைவார்கள்.—1 தீ. 4:16.