உங்கள் கண்களை தெளிவாக வையுங்கள்
1 இயேசு தம் மலைப்பிரசங்கத்தில், நம்முடைய முழு வாழ்க்கையின் மீதும் பலத்த செல்வாக்கு செலுத்தும் அடையாளப்பூர்வ அல்லது ஆவிக்குரிய கண்கள் மீது கவனத்தைத் திருப்பினார். அவர் சொன்னதாவது: “உன் கண் தெளிவாயிருந்தால், உன் சரீரம் முழுவதும் வெளிச்சமாயிருக்கும். உன் கண் கெட்டதாயிருந்தால், உன் சரீரம் முழுவதும் இருளாயிருக்கும்.” (மத். 6:22, 23) கண்களை தெளிவாக வைத்திருத்தல் என்பது ஒரே நோக்கத்திடமாக கவனத்தை ஒருமுகப்படுத்துவதாகும்; அதாவது பொருள் சம்பந்தமான காரியங்களுக்கென அநாவசியமாக கவலைப்படுவதை தவிர்த்து கவனம் சிதறாமல் கடவுளுடைய சித்தத்தை செய்வதாகும். (மத். 6:19-21, 24-33) கண்களை தெளிவாக வைத்திருக்க எது நமக்கு உதவும்?
2 போதுமென்ற மனப்பான்மையை வளர்த்தல்: குடும்பத்திற்கு தேவையான அடிப்படை காரியங்களை அளிப்பது ஒரு வேதப்பூர்வ கடமையாகும். (1 தீ. 5:8) அதற்கென்று, மிகச் சிறந்த லேட்டஸ்ட் பொருட்களை வாங்குவதிலேயே நாம் மூழ்கிவிடத் தேவையில்லை. (நீதி. 27:20; 30:8, 9) அதற்கு மாறாக, “உண்ணவும் உடுக்கவும்” இருந்தால், அதாவது வாழ்க்கையின் அடிப்படை தேவைகள் இருந்தால் போதுமென்று திருப்தியாக இருக்குமாறு வேதாகமம் அறிவுறுத்துகிறது. (1 தீ. 6:8; எபி. 13:5, 6) இந்தப் புத்திமதிக்கு இசைய நடப்பது நம் கண்களை சரியாக ஒருமுகப்படுத்துவதற்கு உதவும்.
3 அநாவசிய கடன்கள், நம் நேரத்தையும் கவனத்தையும் அதிகளவில் எடுத்துக்கொள்கிற பொருட்கள் அல்லது நாட்டங்கள் ஆகியவற்றால் நமக்கு நாமே சுமையை ஏற்றிக்கொள்வதை தவிர்ப்பது ஞானமான காரியமாகும். (1 தீ. 6:9, 10) இதை நாம் எப்படி செய்யலாம்? ஏதாவது ஒரு காரியத்தைச் செய்வதற்கு முன், அதைக் குறித்து ஜெபத்துடன் சீர்தூக்கிப் பாருங்கள்; ஆவிக்குரிய நடவடிக்கைகளில் அந்தக் காரியம் குறுக்கிட்டு விடுமா என்பதை நேர்மையுடன் பரிசீலித்துப் பாருங்கள். உங்கள் வாழ்க்கையில் ஆவிக்குரிய காரியங்களுக்கு முதலிடம் கொடுப்பதற்கு தீர்மானமாய் இருங்கள்.—பிலி. 1:10, NW; 4:6, 7.
4 உங்கள் வாழ்க்கையை எளிமையாக்குங்கள்: பொருள் சம்பந்தப்பட்ட கவர்ச்சியை எதிர்ப்பதற்கு உதவும் இன்னொரு வழி நம் வாழ்க்கையை எளிமையாக்குவதாகும். ஒரு சகோதரர் அதிகப்படியான பொருட்கள் இல்லாமலேயே தன் குடும்பத்தார் நன்கு சமாளிக்க முடிவதை கண்டறிந்தார்; அவர் சொன்னதாவது: “இப்போதெல்லாம் என் சகோதரர்களுக்கு உதவியாக சபையில் நிறைய காரியங்களை என்னால் செய்ய முடிகிறது. தம் ஊழியர்கள் சொந்த நாட்டங்களைக் காட்டிலும் உண்மை வணக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கையில் அவர்கள் அனைவரையும் யெகோவா ஆசீர்வதிக்கிறார் என்பதில் எனக்கு சந்தேகமேயில்லை.” உங்கள் வாழ்க்கையை எளிமையாக்குவதன் மூலம் அதிகப்படியான ஆசீர்வாதங்களைப் பெற விருப்பமா?
5 சாத்தான், அவனது பொருளாசை மிக்க உலகம், நம் சொந்த அபூரணம் ஆகியவற்றின் செல்வாக்குகளை எதிர்ப்பதற்கு விடாமுயற்சி தேவை. நம் கண்களை அலைபாய விடாமல், கடவுளுடைய சித்தத்தை செய்வதின் மீதும் நித்திய ஜீவன் என்னும் அருமையான நம்பிக்கையின் மீதும் அவற்றை ஒருமுகப்படுத்துவோமாக.—நீதி. 4:25; 2 கொ. 4:17, 18.
[கேள்விகள்]
1. கண்களை தெளிவாக வைத்திருப்பது என்றால் என்ன, இது ஏன் முக்கியம்?
2. பொருள் சம்பந்தமாக எப்படிப்பட்ட கண்ணோட்டத்தை கடவுளுடைய வார்த்தை உற்சாகப்படுத்துகிறது?
3. நமக்கு நாமே சுமைகளை ஏற்றிக்கொள்வதை தவிர்க்க எது நமக்கு உதவும்?
4. நம் வாழ்க்கையை எளிமையாக்குவதற்கான வழிவகைகளை ஏன் தேட வேண்டும்?
5. நம் கண்களை தெளிவாக வைப்பதற்கு விடாமுயற்சி ஏன் தேவை?