புதிய விசேஷ மாநாட்டு தின நிகழ்ச்சி
கண்கள் அற்புத வடிவமைப்புக்கு எடுத்துக்காட்டாக விளங்குகின்றன. (சங். 139:14) ஆனாலும், ஒரு சமயத்தில் ஒரு காரியத்தை மட்டுமே அவற்றால் உன்னிப்பாகப் பார்க்க முடியும். சொல்லர்த்தமாகவும் சரி, அடையாளப்பூர்வமாகவும் சரி, இதுவே உண்மையாக இருக்கிறது. நம் ஆவிக்குரிய பார்வை எப்போதும் பளிச்சென்றும் ஒருமுகப்படுத்தப்பட்டும் இருப்பதற்கு, கடவுளுடைய சித்தத்தைச் செய்வதில் நம் கவனத்தை ஊன்ற வைக்க வேண்டும். சாத்தானுடைய உலகில் கவனத்தைச் சிதறடிக்கும் காரியங்கள் பெருகிக்கொண்டே வருவதைப் பார்க்கும்போது, “உங்கள் கண்களை எளிமையாக வையுங்கள்” என்ற பொருளை நம்முடைய 2006-ம் ஊழிய ஆண்டுக்கான விசேஷ மாநாட்டு தின நிகழ்ச்சி விளக்கப்போவது எவ்வளவு பொருத்தமாக இருக்கும்!—மத். 6:22.
யெகோவாவிடமிருந்து ஆசீர்வாதங்களைப் பெறுவதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்? (நீதி. 10:22) இக்கேள்விக்கான பதில், “கண்களை எளிமையாக வைத்திருப்பதனால் வரும் ஆசீர்வாதங்கள்” என்ற பேச்சில் கொடுக்கப்படும். பைபிள் நியமங்களைப் பொருத்திப் பிரயோகிப்பதன் பயனைப் பேட்டிகள் சிறப்பித்துக் காட்டும். “பொல்லாத உலகில் கண்களை எளிமையாக வைத்திருத்தல்” என்ற பொருளில் சிறப்புப் பேச்சாளர் கொடுக்கும் முதல் பேச்சு, நம் வாழ்க்கையைச் சிக்கல் நிறைந்ததாக்கி, நம் ஆவிக்குரிய வளர்ச்சியைப் படிப்படியாக குலைத்துப்போடும் காரியங்களைக் குறித்து நம்மை எச்சரிக்கும். “நல்ல பங்கைத்” தேர்ந்தெடுப்பது எதைக் குறிக்கிறது என்பதையும் நாம் கற்றுக்கொள்வோம்.—லூக். 10:42.
இளைஞர்கள் ஆவிக்குரிய இலக்குகளை நாடுவதற்கு பெற்றோர்களும் மற்றவர்களும் எவ்வாறு உற்சாகப்படுத்தலாம்? இந்த முக்கியமான கேள்விக்கு, “குறிபார்த்து அம்பு எய்யும் பெற்றோர்கள்,” “ஆவிக்குரிய இலக்குகளை நாடும் இளைஞர்கள்” என்ற பேச்சுகளில் பெற்றோர்களும் இளைஞர்களும் தங்கள் கருத்துகளைச் சொல்வார்கள். (சங். 127:5) கடைசி பேச்சில் சிறப்புப் பேச்சாளர், யெகோவாவின் அமைப்போடு சேர்ந்து நாம் எவ்வாறு தனிப்பட்டவர்களாகவும் குடும்பமாகவும் சபையாகவும் முன்னேறலாம் என்பதை விளக்குவார்.
நாம் புதிதாகச் சத்தியத்திற்கு வந்தவர்களாக இருந்தாலும் சரி, பல காலமாக யெகோவாவுக்குச் சேவை செய்பவர்களாக இருந்தாலும் சரி, ‘நம் கண்களை எளிமையாக வைப்பது’ மிகமிக அவசியம். அதைச் செய்வதற்கே இந்த விசேஷ மாநாட்டு தின நிகழ்ச்சி உதவும்.