புதிய சிற்றேட்டின் விநியோகம்!
1. நவம்பர் மாதம் எந்தப் பிரசுரத்தை விநியோகிப்போம், அந்தப் பிரசுரத்தின் நோக்கம் என்ன?
1 2009-ஆம் ஆண்டு, “விழிப்புடன் இருங்கள்!” என்ற தலைப்பில் நடந்த மாவட்ட மாநாட்டில் பைபிள்—ஒரு கண்ணோட்டம் என்ற சிற்றேடு வெளியிடப்பட்டது. வருகிற நவம்பர் மாதம் உலகெங்குமுள்ள யெகோவாவின் சாட்சிகள் முதன்முறையாக இந்தச் சிற்றேட்டை விநியோகிப்பார்கள். இந்தச் சிற்றேடு நம் பிராந்தியத்திலுள்ள மக்களுக்கு எப்படிப் பயன் தரும்? அநேகருக்கு, குறிப்பாக வேறு மதத்தினருக்கு, பைபிளைப் பற்றி அதிகம் தெரிவதில்லை. எனவே, ‘பைபிளிலுள்ள விஷயங்களைச் சுருக்கமாகத் தொகுத்து’ வழங்குவதற்கென்றே இந்தச் சிற்றேடு தயாரிக்கப்பட்டிருக்கிறது; இது அந்தச் சிற்றேட்டின் 3-ஆம் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2. இந்தச் சிற்றேட்டை நாம் எப்படி அளிக்கலாம்?
2 எப்படி அளிப்பது: நாம் சந்திக்கிற நபர் கிறிஸ்தவமண்டலத்தைச் சேர்ந்தவராக இருந்தால் அவரிடம் இப்படிச் சொல்லலாம்: “இந்த வசனத்தைக் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் எனத் தெரிந்துகொள்ளலாமா? [2 தீமோத்தேயு 3:16-ஐ வாசியுங்கள்.] நிறையப் பேர் இதை ஒத்துக்கொள்கிறார்கள்; ஆனால் சிலர், ‘பைபிள் ஒரு நல்ல புத்தகம், அவ்வளவுதான்’ என்று சொல்கிறார்கள். பைபிளைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? [பதில் சொல்ல அனுமதியுங்கள்.] நாம் எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் சரி, பைபிளைப் படித்துப் பார்ப்பது நல்லதுதான். [பக்கம் 3-ல் உள்ள அறிமுகப் பாராவை வாசியுங்கள்.] பைபிள் பதிவுகளைப் பற்றி இந்தச் சிற்றேட்டில் இரத்தினச் சுருக்கமாக எழுதப்பட்டிருப்பதை வாசிக்கும்போது, ஒரு முக்கியமான விஷயத்தை நீங்கள் புரிந்துகொள்வீர்கள். அதாவது, ஒரேவொரு கருப்பொருள் பைபிள் முழுக்க இழையோடுவதைக் கவனிப்பீர்கள்.”
3. வேறு மதத்தவர் அதிகமாய் வசிக்கும் பிராந்தியத்தில் எப்படிப் பேசலாம்?
3 ஒருவேளை வீட்டுக்காரர் வேறு மதத்தைச் சேர்ந்தவராய் இருந்து, பைபிள்மீது மதிப்பு வைத்திருப்பவராகத் தெரிந்தால் நீங்கள் இப்படிப் பேசலாம்: “அநீதிக்கும் அக்கிரமத்திற்கும் பலியாகிறவர்கள்மீது கடவுளுக்கு அக்கறை இருக்கிறதா, நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? [பதில் சொல்ல அனுமதியுங்கள்.] அவர்களுடைய பிரச்சினைகளெல்லாம் எப்படி தீருமென்று பைபிளில் கடவுள் சொல்லியிருக்கிறார். அதை உங்களுக்கு வாசித்துக் காட்டட்டுமா? [வீட்டுக்காரர் ஒத்துக்கொண்டால் சங்கீதம் 37:11-ஐ வாசியுங்கள்.] இந்த வாக்கு நிஜமானால் நம் பூமி எப்படி இருக்குமென நினைக்கிறீர்கள்? [பதில் சொல்ல அனுமதியுங்கள்.] எல்லாக் கலாச்சாரத்தினருக்கும் மதத்தினருக்கும் பைபிள் அளிக்கும் நம்பிக்கைக்கு இந்த வசனம் ஒரேவொரு எடுத்துக்காட்டுதான்.” பக்கம் 3-ல் உள்ள தலைப்புப் பாராவை வாசித்த பின் சிற்றேட்டை அளியுங்கள்.
4. இந்தச் சிற்றேட்டைப் பயன்படுத்தி நாம் எப்படி பைபிள் படிப்பை ஆரம்பிக்கலாம்?
4 பைபிள் படிப்பை ஆரம்பியுங்கள்: மறுசந்திப்பின்போது முதல் சந்திப்பில் நாம் எதைப் பற்றிப் பேசினோம் என்பதை வீட்டுக்காரருக்கு ஞாபகப்படுத்தலாம்; பின்பு அந்த விஷயம் சம்பந்தமாகச் சிற்றேட்டிலிருந்து ஓரிரு பாராக்களைக் கலந்துரையாடலாம்; அந்தப் பகுதியின் முடிவிலுள்ள கேள்விகளையே பயன்படுத்திக்கொள்ளலாம். அல்லது இரண்டாவது சந்திப்பிலேயே பைபிள் கற்பிக்கிறது புத்தகத்தை அறிமுகப்படுத்துவது சரியாகப் பட்டால், சிற்றேட்டின் பின்பக்க அட்டையிலிருந்து அவருக்கு வாசித்துக்காட்டி புத்தகத்தை அவர் கையில் கொடுக்கலாம். பின்பு அந்தப் புத்தகத்தில் அவருக்குப் பிடித்த அதிகாரம் எதுவெனக் கேட்டு அதிலிருந்து ஓரிரு பாராக்களை அவரோடு சேர்ந்து படிக்கலாம். நவம்பர் மாதம் இந்தச் சிற்றேட்டை விநியோகிப்பதில் நாம் எல்லாரும் மும்முரமாக ஈடுபடுவோமாக!