நீங்கள் முன்பு ஒழுங்கான பயனியராக இருந்தவரா?
1. அநேகர் என்ன பாக்கியத்தைப் பெற்றிருக்கிறார்கள், ஆனால் சிலர் என்ன செய்ய வேண்டியிருந்திருக்கிறது?
1 ஆயிரக்கணக்கான முழுநேர ஊழியர்கள், பல வருடங்களாக ‘நற்செய்தியை அறிவிக்கிற, கற்பிக்கிற’ பாக்கியத்தைப் பெற்றிருக்கிறார்கள். (அப். 5:42) என்றாலும், சிலர் இந்த பயனியர் ஊழியத்தை வெவ்வேறு காரணங்களுக்காக நிறுத்த வேண்டியிருந்திருக்கிறது. நீங்கள் முன்பு ஒழுங்கான பயனியராக இருந்திருந்தால், மறுபடியும் ஒரு பயனியராய் ஆவதற்காக உங்களுடைய தற்போதைய சூழ்நிலையைச் சீர்தூக்கிப் பார்க்கலாம், அல்லவா?
2. முன்பு பயனியராக இருந்தவர்கள் மீண்டும் தங்களுடைய சூழ்நிலைகளை ஏன் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும்?
2 சூழ்நிலை மாறுகையில்: ஏதோவொரு சூழ்நிலை காரணமாக நீங்கள் பயனியர் ஊழியத்தை நிறுத்தியிருக்கலாம்; அந்தச் சூழ்நிலை இப்போது மாறியிருக்கலாம். உதாரணமாக, மாதத்திற்கு 90 மணிநேரம் என்ற இலக்கை எட்ட முடியாமற்போனதால் நீங்கள் பயனியர் ஊழியத்தை நிறுத்தியிருக்கலாம்; இப்போது 70 மணிநேரம் எடுத்தாலே போதும் என்பதால், பயனியர் ஊழியத்தை மீண்டும் ஆரம்பிக்கலாம், அல்லவா? வேலை பார்க்குமிடத்தில் முன்பு உங்களுக்கிருந்த பளுவோ குடும்பத்தில் முன்பு உங்களுக்கிருந்த பொறுப்புகளோ இப்போது குறைந்திருக்கிறதா? சமீபத்தில் உங்களுடைய வேலையிலிருந்து நீங்கள் ஓய்வு பெற்றிருக்கிறீர்களா? ஒரு சகோதரி உடல்நலக் குறைவால் பயனியர் ஊழியத்தை நிறுத்தியிருந்தார்; ஆனால், தனது 89-ஆவது வயதில் அதை மீண்டும் ஆரம்பித்தார். ஒரு வருடத்திற்கும் மேலாக மருத்துவமனையில் சேர்க்க வேண்டிய நிலை அவருக்கு ஏற்படாததாலும், பயனியர் ஊழியம் செய்யத் தனது உடல்நிலை இடங்கொடுக்குமென்று அவர் உணர்ந்ததாலும், மீண்டும் ஒரு பயனியர் ஆனார்!
3. குடும்பத்திலுள்ள ஒருவர் பயனியர் ஊழியம் செய்வதற்கு மற்றவர்கள் எப்படி ஒத்துழைக்கலாம்?
3 முன்பு நீங்கள் பயனியராக இல்லாமல் இருந்திருக்கலாம்; ஆனால், உங்கள் குடும்பத்தில் யாராவது பயனியர் ஊழியம் செய்திருந்து, குடும்ப அங்கத்தினரைக் கவனித்துக்கொள்வதற்காக... ஒருவேளை வயதான பெற்றோரைப் பராமரிப்பதற்காக... அதை நிறுத்தியிருக்கலாம். (1 தீ. 5:4, 8) அப்படியிருந்தால், நீங்களோ அல்லது உங்கள் குடும்பத்திலுள்ள மற்றவர்களோ அவர் மீண்டும் பயனியர் ஆவதற்கு உதவ முடியுமா? இதைப் பற்றி நீங்கள் குடும்பமாகக் கலந்துபேசலாம், அல்லவா? (நீதி. 15:22) குடும்பத்தில் ஒருவர் பயனியர் ஊழியம் செய்வதற்காக எல்லாரும் ஒத்துழைக்கும்போது, குடும்பத்தார் அனைவருமே அந்த ஊழியத்தில் பங்குபெறுவது போல் உணரலாம்.
4. தற்போது பயனியர் ஊழியத்தை நீங்கள் மீண்டும் ஆரம்பிக்க முடியாவிட்டாலும், ஏன் சோர்ந்துவிட வேண்டியதில்லை?
4 உங்களுடைய தற்போதைய சூழ்நிலை காரணமாக பயனியர் ஊழியத்தை நீங்கள் மீண்டும் ஆரம்பிக்க முடியாவிட்டாலும், சோர்ந்துவிடாதீர்கள். பயனியர் ஊழியம் செய்ய வேண்டுமென்ற ஆர்வம் உங்களுக்கு இருந்தால்... அதுவே யெகோவாவுக்குப் பிரியமானது. (2 கொ. 8:12) பயனியராக இருந்தபோது பெற்ற திறமைகளையெல்லாம் இப்போது நீங்கள் செய்கிற ஊழியத்தில் பயன்படுத்துங்கள். பயனியர் செய்ய வேண்டுமென்ற உங்கள் ஆசையை ஜெபத்தில் யெகோவாவிடம் தெரிவியுங்கள்; சூழ்நிலைகளில் மாற்றம் செய்வதற்கு வாய்ப்புக் கிடைக்கிறதா எனப் பார்த்துக்கொண்டே இருங்கள். (1 யோ. 5:14) ஒருவேளை காலப்போக்கில், ‘ஊழியம் செய்வதற்கான வாய்ப்பு என்ற பெரிய கதவை’ யெகோவா உங்களுக்குத் திறப்பார்; அதனால், ஒழுங்கான பயனியர் ஊழியத்தில் கிடைக்கிற அளவிலா ஆனந்தத்தை நீங்கள் மீண்டும் பெறலாம்!—1 கொ. 16:9.