நம் பத்திரிகைகள்—பலதரப்பட்ட மக்களுக்காக
1. உண்மையும் விவேகமும் உள்ள அடிமை வகுப்பார் எப்படி அப்போஸ்தலன் பவுலின் மாதிரியைப் பின்பற்றுகிறார்கள்?
1 “எல்லா” மக்களும் நற்செய்தியை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக அப்போஸ்தலன் பவுல் தன் அணுகுமுறையை மாற்றிக்கொண்டார். அதேபோல், உண்மையும் விவேகமும் உள்ள அடிமை வகுப்பாரும் வித்தியாசப்பட்ட பின்னணியை... நம்பிக்கையை... உடைய மக்களுக்காகப் பத்திரிகைகளைத் தயாரிக்கிறார்கள். (1 கொ. 9:22, 23) எனவே, காவற்கோபுரம் மற்றும் விழித்தெழு! பத்திரிகைகள் யாருக்காகத் தயாரிக்கப்படுகின்றன என்பதை மனதில் வைத்திருந்தால்தான் அவற்றை நம்மால் சிறந்த முறையில் பயன்படுத்த முடியும்.
2. யாரை மனதில் வைத்து விழித்தெழு! பத்திரிகை தயாரிக்கப்படுகிறது?
2 விழித்தெழு!: அன்று அப்போஸ்தலன் பவுல், “அத்தேனே நகர” மக்களிடம் பிரசங்கித்தார். இன்று, அப்படிப்பட்ட மக்களை மனதில் வைத்தே விழித்தெழு! பத்திரிகை தயாரிக்கப்படுகிறது. (அப். 17:22) கிறிஸ்தவ போதனைகளைப் பற்றி அத்தேனே மக்களுக்குச் சுத்தமாகத் தெரிந்திருக்கவில்லை, வேதவசனங்கள் என்ன கற்பிக்கின்றன என்றும் தெரிந்திருக்கவில்லை. அதேபோல், பைபிளைப் பற்றிச் சுத்தமாகத் தெரியாத அல்லது கொஞ்சநஞ்சம் தெரிந்த மக்களுக்காகவே இன்று விழித்தெழு! பத்திரிகை தயாரிக்கப்படுகிறது. இவர்களுக்குக் கிறிஸ்தவ போதனைகளைப் பற்றித் தெரியாதிருக்கலாம்... மதத்தின் மேல் நம்பிக்கை இல்லாதிருக்கலாம்... பைபிள் இந்தக் காலத்திற்கு ஒத்துவராதென இவர்கள் நினைக்கலாம். எனவே, கடவுள் இருக்கிறார் என வாசகர்களை நம்ப வைப்பதே விழித்தெழு! பத்திரிகையின் முக்கிய நோக்கம். அதோடு, பைபிள் மீது நம்பிக்கையை வளர்த்துக்கொள்ளவும், யெகோவாவின் சாட்சிகள் மற்ற மதங்களிலிருந்து வித்தியாசப்பட்டவர்கள் என்பதைப் புரிந்துகொள்ளவும் இந்தப் பத்திரிகை உதவும்.
3. காவற்கோபுர பத்திரிகையின் பொது இதழும், படிப்பு இதழும் யாருக்காகத் தயாரிக்கப்படுகிறது?
3 காவற்கோபுரம்: காவற்கோபுரத்தின் பொது இதழ், கடவுள் மீதும் பைபிள் மீதும் ஓரளவு நம்பிக்கை வைத்திருப்பவர்களுக்காகத் தயாரிக்கப்படுகிறது. இவர்களுக்கு பைபிளைப் பற்றிக் கொஞ்சம் தெரிந்திருந்தாலும் அதைப் பற்றித் திருத்தமான அறிவு இருக்காது. ‘தேவபயமுள்ளவர்கள்’ என பவுல் குறிப்பிட்ட ஆட்களைப் போல இவர்கள் இருக்கிறார்கள். (அப். 13:14-16) காவற்கோபுரத்தின் படிப்பு இதழ், முக்கியமாக யெகோவாவின் சாட்சிகளுக்காகத் தயாரிக்கப்படுகிறது. அன்று, வேதவசனங்களை நன்கு தெரிந்து வைத்திருந்தவர்களையும் சத்தியத்தைப் பற்றித் திருத்தமான அறிவைப் பெற்றிருந்தவர்களையும் மனதில் வைத்தே பவுல் தன் கடிதங்களை எழுதினார். (1 கொ. 1:1, 2) அதேபோல், இன்று கூட்டங்களுக்குத் தொடர்ந்து வந்து, சாட்சிகள் பயன்படுத்துகிற பதங்களையும் அவர்களுடைய நம்பிக்கைகளையும் தெரிந்து வைத்திருப்பவர்களை மனதில் வைத்தே படிப்பு இதழ் தயாரிக்கப்படுகிறது.
4. ஒவ்வொரு பத்திரிகையைப் பற்றியும் நன்கு தெரிந்து வைத்திருப்பது ஊழியத்தில் எப்படி உதவும்?
4 இரண்டு பத்திரிகைகளையும் சேர்த்தே வீட்டுக்காரரிடம் கொடுத்தாலும், அவற்றில் ஒன்றைப் பற்றி மட்டுமே நாம் விளக்குகிறோம். எனவே, ஒவ்வொரு பத்திரிகையையும் பக்கத்திற்கு பக்கம் படிக்க இலக்கு வையுங்கள். அப்படிச் செய்தால், நீங்கள் சந்திக்கும் ஆட்களுக்கு ஏற்ற பத்திரிகையைக் கொடுக்கத் தயாராய் இருப்பீர்கள்.