‘கடவுளுடைய பெயர் பரிசுத்தப்படுவதாக’
1. 2012-ஆம் ஊழிய ஆண்டில் நடைபெறப் போகும் வட்டார மாநாட்டின் பொருள் என்ன, அது எதன் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது?
1 1931-ஆம் ஆண்டிலிருந்து நமக்கு ஒரு அரும்பெரும் பாக்கியம் கிடைத்திருக்கிறது. கடவுளின் ஒப்பற்ற பெயரால், ஆம் யெகோவாவின் சாட்சிகள் என்ற பெயரால், நாம் அழைக்கப்படுகிறோம். சர்வலோகத்தின் உன்னத பேரரசரான யெகோவாவின் பெயரைத் தாங்கியிருப்பது என்னே ஒரு பாக்கியம்! சொல்லப்போனால், தம்முடைய பெயரால் அழைக்கப்படும்படி யெகோவாதாமே சொல்லியிருக்கிறார். (ஏசா. 43:10) கடவுளுடைய ஒரே மகனான இயேசு அவருடைய பெயரை மிக உயர்வாய் மதித்தார்; மாதிரி ஜெபத்தில் அவருடைய பெயருக்கே முதல் இடம் கொடுத்தார். (மத். 6:9) அதில் இயேசு சொன்ன வார்த்தைகளை அடிப்படையாக வைத்தே 2012-ஆம் ஊழிய ஆண்டில் நடைபெறப் போகும் வட்டார மாநாட்டின் பொருள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. “கடவுளுடைய பெயர் பரிசுத்தப்படுவதாக” என்பதே அதன் பொருள்.
2. மாநாட்டில் நாம் எதைப் பற்றியெல்லாம் கேட்க போகிறோம்?
2 மாநாட்டில் என்ன கேட்கப் போகிறோம்? சனிக்கிழமை அன்று “முழுநேர ஊழியர்களாக கடவுளுடைய பெயரை அறிவியுங்கள்” என்ற பேச்சு கொடுக்கப்படும். அதில் முழுநேர ஊழியம் ஏன் அதிக திருப்தி அளிக்கும் சேவை எனக் கலந்துபேசப்படும். அதன்பின், “யெகோவாவின் பெயருக்குக் களங்கம் ஏற்படுத்துவதைக் குறித்து ஜாக்கிரதை” என்ற தொடர் பேச்சையும் நாம் கேட்போம். நம்மைப் பாதிக்கும் நான்கு ஆபத்தான கண்ணிகளில் சிக்காமல் நம்மைப் பாதுகாத்துக்கொள்ள இந்தத் தொடர் பேச்சு உதவும். பின்பு, “கடவுளுடைய பெயரை ஏன் பரிசுத்தப்படுத்த வேண்டும்” என்ற பேச்சு கொடுக்கப்படும். அதில் பின்வரும் கேள்விகள் பதிலளிக்கப்படும்: ஆர்வம் காட்டாத மக்களிடம் உற்சாகமாய் ஊழியம் செய்ய எது நமக்கு உதவும்? பலன் தரும் விதத்தில் ஊழியம் செய்ய எது உதவும்? ஞாயிறு அன்று கொடுக்கப்படும் தொடர் பேச்சில் நான்கு அம்சங்களைப் பற்றி சிந்திப்போம். நாம் எப்படி நம்முடைய சிந்தையில், பேச்சில், தீர்மானங்களில், நடத்தையில் கடவுளுடைய பெயரைப் பரிசுத்தப்படுத்தலாம் எனப் பார்ப்போம். “அர்மகெதோனில் யெகோவா தம்முடைய மகத்தான பெயரைப் பரிசுத்தப்படுத்துவார்” என்ற பொதுப் பேச்சை மாநாட்டுக்குப் புதிதாக வருபவர்கள் அதிக ஆர்வத்தோடு கேட்பார்கள்.
3. நமக்கு என்ன பாக்கியம் உள்ளது, இந்த மாநாடு நமக்கு எப்படி உதவும்?
3 சீக்கிரத்தில், தம்முடைய பெயரைப் பரிசுத்தப்படுத்துவதற்காக யெகோவா நடவடிக்கை எடுக்கப் போகிறார். (எசே. 36:23) அதுவரை, யெகோவாவின் பெயரைப் பிரதிநிதித்துவம் செய்யும் எல்லா அம்சங்களிலும் நாம் சிறப்பாகச் செயல்படும் வாய்ப்பும் அரிய பாக்கியமும் நமக்கு உள்ளது. கடவுளுடைய பெயரைத் தாங்கியிருப்பதால் வரும் மிக முக்கியமான பொறுப்புகளை நிறைவேற்ற இந்த மாநாடு நம் எல்லாருக்கும் உதவும் என்று நாங்கள் நம்புகிறோம்.