‘கடவுளுடைய சித்தம் செய்யப்படுவதாக’
1. 2012-ஆம் ஊழிய ஆண்டில் நடைபெறுகிற விசேஷ மாநாட்டின் பொருள் என்ன, இதைப் பற்றிச் சிந்திப்பது ஏன் பொருத்தமாக இருக்கிறது?
1 யெகோவாவின் சித்தத்தினால்தான், அதாவது விருப்பத்தினால்தான், நாம் படைக்கப்பட்டோம். (வெளி. 4:11) அப்படியென்றால், நம்முடைய வாழ்க்கையின் நோக்கத்தை நிறைவேற்ற, கடவுளுடைய சித்தத்தைத் தெரிந்துகொண்டு அதைச் செய்தாக வேண்டும். இது நாம் நினைக்கும் அளவுக்குச் சுலபமல்ல. ஏனென்றால், நம்முடைய ‘உடலும் உள்ளமும் விரும்பியவற்றைச் செய்வதற்கான’ ஆசையை எதிர்த்து, அல்லது இந்த “உலக மக்களுடைய விருப்பத்தின்படி” நடப்பதற்கான ஆசையை எதிர்த்து தினந்தினம் நாம் போராட வேண்டியிருக்கிறது. (எபே. 2:3; 1 பே. 4:3; 2 பே. 2:10) கடவுளுடைய உதவியில்லை என்றால் நாம் ‘பிசாசின் விருப்பத்திற்கேற்ப நடக்க அவனால் பிடித்து வைக்கப்படுவோம்.’ (2 தீ. 2:26) 2012-ஆம் ஊழிய ஆண்டில் நடைபெற போகிற விசேஷ மாநாட்டின் நிகழ்ச்சிகள் இயேசு தம்முடைய மாதிரி ஜெபத்தில் சொன்ன மூன்றாவது முக்கிய விண்ணப்பத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது. (மத். 6:9, 10) 2012-ஆம் ஊழிய ஆண்டில் நடைபெறுகிற மாநாட்டின் பொருள், “கடவுளுடைய சித்தம் செய்யப்படுவதாக.”
2. நிகழ்ச்சியின்போது என்னென்ன கேள்விகளுக்குப் பதில் கிடைக்கும்?
2 பதில் கிடைக்கப்போகும் கேள்விகள்: இந்த விசேஷ மாநாட்டு நிகழ்ச்சியை நீங்கள் கூர்ந்து கவனிக்கையில் பின்வரும் கேள்விகளுக்குப் பதிலைக் கண்டுபிடியுங்கள்: கடவுளுடைய வார்த்தையைக் கவனமாக கேட்பதோடு வேறு என்ன முக்கியமான விஷயத்தையும் நாம் செய்ய வேண்டும்? நமக்கான யெகோவாவின் சித்தம் என்னவென்று நாம் எப்படிப் பகுத்துணர்ந்துகொண்டே இருக்கலாம்? பலதரப்பட்ட ஆட்களுக்கு உதவி செய்ய நாம் ஏன் ஆவலாய் இருக்க வேண்டும்? நாம் எப்படிச் சந்தோஷமான, திருப்தியான வாழ்க்கையைக் கண்டடையலாம்? இளைஞர்களே, யெகோவா எதிர்பார்க்கிறவற்றைச் செய்கிறீர்களா? கடவுளுடைய சித்தத்தைச் செய்தால் நமக்கு என்ன ஆசீர்வாதங்கள் கிடைக்கும்? சத்தியத்தில் நாம் பலப்படுவதும் மற்றவர்களைப் பலப்படுத்துவதும் ஏன் அவசரம்?
3. விசேஷ மாநாட்டு நிகழ்ச்சியிலிருந்து நாம் எப்படி முழுமையாகப் பயனடையலாம்?
3 மாநாட்டில் கலந்துகொள்ளவும் பேச்சுகளைக் கூர்ந்து கவனிக்கவும் முழு முயற்சி எடுங்கள். பெத்தேலிலுள்ள ஒரு சகோதரரோ பயணக் கண்காணியோ சிறப்புப் பேச்சாளராக வரலாம். நிகழ்ச்சிக்கு முன்பும் பின்பும் அவருடனும், அவருக்குத் திருமணமாகியிருந்தால் அவருடைய மனைவியுடனும் தாராளமாகப் போய் பேசலாம். நீங்கள் வீடு திரும்பிய பிறகு நிகழ்ச்சியில் “கேட்ட விஷயங்களை மறந்துவிடாமல்” இருக்க, குடும்பமாகச் சேர்ந்து அதைக் குறித்து கலந்துபேசுங்கள். அதோடு, கடவுளுடைய சித்தத்துக்கு இசைவாக நடக்க இன்னும் என்னவெல்லாம் செய்யலாம் என்று கலந்துபேசுங்கள்.—யாக். 1:25.
4. கடவுளுடைய சித்தத்தை நிறைவேற்றுவதையே நம்முடைய வாழ்க்கையின் முக்கிய குறிக்கோளாக ஆக்கிக்கொள்வது ஏன் அவசியம்?
4 சொந்த விருப்பங்களை நாடுகிறவர்களையும் யெகோவாவுடைய சித்தத்திற்கு இசைய வாழ மறுப்பவர்களையும் சீக்கிரத்தில் யெகோவா அழிக்க போகிறார். (1 யோ. 2:17) எனவே, யெகோவாவுடைய சித்தத்தை நிறைவேற்றுவதையே நம்முடைய வாழ்க்கையின் முக்கிய குறிக்கோளாக ஆக்கிக்கொள்வதற்கு உதவும், காலத்துக்கு ஏற்ற தகவல்களை அளிப்பதற்காக நாம் கடவுளுக்கு நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்.