நியாயங்காட்டிப் பேசுங்கள்
1. வீட்டுக்காரரிடம் எப்படிப் பேசுவது சிறந்தது?
1 வீட்டுக்காரரிடம் எப்படிப் பேசுவது சிறந்தது என்று நினைக்கிறீர்கள்? நாம் சொல்வதுதான் சரி என்ற விதத்தில் பேசுவதா, அல்லது நியாயங்காட்டிப் பேசுவதா? நியாயங்காட்டிப் பேசுவதுதான் சரியான முடிவுக்கு வர வீட்டுக்காரருக்கு உதவும். தெசலோனிக்கேயாவில் இருந்த யூதர்களிடம் பவுல் பேசியபோது நியாயங்காட்டிப் பேசினார். அதன் விளைவாக, அவர்களில் ‘சிலர் விசுவாசிகளானார்கள்.’ (அப். 17:2-4) மற்றவர்களிடம் நியாயங்காட்டிப் பேச எது நமக்கு உதவும்?
2. நாம் எப்படி பவுலின் முன்மாதிரியைப் பின்பற்றலாம்?
2 பின்னணியையும் உணர்ச்சிகளையும் கருத்தில் கொள்ளுங்கள்: நியாயங்காட்டிப் பேசுவதற்கு நம்முடைய பிராந்தியத்தில் உள்ளவர்களின் உணர்ச்சிகளை நாம் புரிந்துகொள்ள வேண்டும். விசுவாசிகளாய் இல்லாத கிரேக்கர்களிடம் அரியோபாகுவில் பவுல் பேசியபோது அவர்கள் தெரிந்து வைத்திருந்த, அவர்கள் நம்பி வந்த விஷயங்களை வைத்தே தன்னுடைய பேச்சைத் தொடங்கினார். (அப். 17:22-31) எனவே, ஊழியத்திற்காக நாம் தயாரிக்கும்போது, நம்முடைய பிராந்தியத்திலுள்ள மக்களுடைய பொதுவான நம்பிக்கைகளையும் விருப்புவெறுப்புகளையும் மனதில்வைக்க வேண்டும். (1 கொ. 9:19-22) வீட்டுக்காரர் ஏதாவது ஆட்சேபணை தெரிவித்தால், இருவருக்கும் பொதுவான ஒரு விஷயத்தைப் பற்றிப் பேசலாம்.
3. கேள்விகளைத் திறமையாகப் பயன்படுத்துவது நியாயங்காட்டிப் பேச எப்படி உதவும்?
3 கேள்விகளைத் திறம்பட பயன்படுத்துங்கள்: ஒரு ஊருக்குச் செல்ல ஒருவர் நம்மிடம் வழி கேட்கிறார் என வைத்துக்கொள்ளுங்கள். இப்போது அவர் எங்கே இருக்கிறார் என்று தெரிந்தால்தான் நாம் சரியாக வழி சொல்ல முடியும். அதைப்போலவே, வீட்டுக்காரருடைய மனதில் இப்போது என்ன இருக்கிறது என்று நமக்குத் தெரிந்தால்தான், அவர் சரியான முடிவுக்கு வர நம்மால் உதவ முடியும். இயேசு ஒருவரிடம் நியாயங்காட்டிப் பேசுவதற்கு முன்பு, அந்த நபரின் மனதில் என்ன இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள கேள்விகளைக் கேட்டார். உதாரணத்திற்கு, “முடிவில்லா வாழ்வைப் பெறுவதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?” என்று இயேசுவிடம் ஒருவர் கேட்டார். அவருக்கு பதில் சொல்வதற்குமுன் அவருடைய மனதில் இருப்பதை வெளியே கொண்டுவர இயேசு கேள்வி கேட்டார். (லூக். 10:25-28) மற்றொரு சந்தர்ப்பத்தில், பேதுரு தவறான ஒரு பதிலைச் சொன்னபோது அவருடைய எண்ணத்தைச் சரிசெய்வதற்காக இயேசு கேள்விகளைத் திறமையாகப் பயன்படுத்தினார். (மத். 17:24-26) எனவே, வீட்டுக்காரர் ஒரு கேள்வியைக் கேட்கும்போதோ தவறான ஒரு கருத்தைச் சொல்லும்போதோ கேள்விகளைப் பயன்படுத்தி அவர் சரியாக யோசித்துப் பார்க்க நாம் உதவலாம்.
4. நாம் ஏன் நியாயங்காட்டிப் பேச வேண்டும்?
4 நன்கு சிந்தித்துப் பார்த்து ஒரு முடிவுக்கு வர நாம் வீட்டுக்காரருக்கு உதவும்போது, பெரிய போதகராகிய இயேசுவையும் முதல் நூற்றாண்டில் இருந்த திறமையான ஊழியர்களையும் பின்பற்றுகிறோம். அதோடு, வீட்டுக்காரருக்கும் மதிப்பு மரியாதை காட்டுகிறோம். (1 பே. 3:15) இதனால், நம்மை மீண்டும் சந்திக்க அவரும் ஆவலாக இருப்பார்.