வியாபார பிராந்தியத்தில் ஊழியம் செய்ய பயப்படாதீர்கள்
1. வியாபார பிராந்தியத்தில் ஊழியம் செய்ய உங்களுக்குப் பயமாக இருந்தால் அதை நினைத்து ஏன் கவலைப்பட தேவையில்லை?
1 வியாபார பிராந்தியத்தில் ஊழியம் செய்வதென்றால் உங்களுக்குப் பயமாக இருக்கிறதா? கவலைப்படாதீர்கள், தைரியமுள்ள ஊழியரான பவுல்கூட பிரசங்கிக்க ‘தைரியத்தை வரவழைத்துக்கொள்ள’ வேண்டியிருந்தது. (1 தெ. 2:2) இப்போது, வியாபார பிராந்தியங்களில் ஊழியம் செய்ய நாம் பயப்படுவதற்குச் சில காரணங்களையும் அதை மேற்கொள்ள உதவும் சில ஆலோசனைகளையும் பார்ப்போம்.
2. வேலையாட்களைத் தொந்தரவு செய்துவிடுவோமோ என்று ஏன் கவலைப்பட வேண்டியதில்லை?
2 வேலையாட்களைத் தொந்தரவு செய்தால் கோபம் வராதா? வாடிக்கையாளர்களுக்கு உதவத்தான் வேலையாட்கள் இருக்கிறார்கள்; அதை அவர்கள் தொந்தரவாக நினைக்க மாட்டார்கள். எனவே, உங்களையும் வாடிக்கையாளராக நினைத்து உங்களிடம் பண்பாக நடந்துகொள்வார்கள். அதோடு, நீங்கள் கண்ணியமாக உடை உடுத்தினால், அன்பாக, நட்பாகப் பேசினால் நிச்சயம் உங்களை மதிப்பார்கள்.
3. வாடிக்கையாளர்கள் எரிச்சலடையாமல் இருக்க என்ன செய்யலாம்?
3 நிறைய வாடிக்கையாளர்கள் இருந்தால்? முடிந்தவரை கூட்டம் அதிகமாக இல்லாத நேரத்தில் செல்வது நல்லது. ஒருவேளை கடை திறந்ததும் செல்லலாம். மேனேஜரோ பணியாளரோ தனியாக இருக்கும்போது போய்ப் பேசுங்கள், சுருக்கமாகப் பேசுங்கள்.
4. வியாபார பிராந்தியங்களில் ஊழியம் செய்யும்போது என்ன பேசலாம்?
4 என்ன பேசுவது? நிறைய வேலையாட்கள் இருந்தால் மேற்பார்வையாளரிடம் பேசுங்கள். அவரிடம் இப்படிச் சொல்லலாம்: “வேலைக்குப் போறவங்கள வீட்டுல பார்க்குறது ரொம்ப கஷ்டம், அதனாலதான் வேலை செய்ற இடத்துக்கே நாங்க வந்திருக்கோம். நீங்க ரொம்ப வேலையா இருப்பீங்கன்னு தெரியும். அதனால நான் வந்த விஷயத்தை சுருக்கமா சொல்லிடுறேன்.” அவர்களே கேட்டால் தவிர நன்கொடையைப் பற்றிச் சொல்வதைத் தவிர்க்கலாம். இல்லாவிட்டால் நாமும் ஏதோ விற்க வந்திருக்கிறோம் என்று நினைத்துக்கொள்வார்கள். சூழ்நிலையைப் பொறுத்து, வேலையாட்களிடம் சுருக்கமாகப் பேச மேற்பார்வையாளரிடம் அனுமதி கேட்கலாம். வேலையாட்களிடமும் மேலே குறிப்பிட்டபடி பேசலாம். அவர்கள் பிஸியாக இருந்தால் இன்னும் சுருக்கமாகப் பேசி, ஒரு துண்டுப்பிரதியைக் கொடுத்துவிட்டு வரலாம். ஒருவேளை அவர்களிடம் பேச முடியவில்லை என்றால் அனுமதி கேட்டு, அவர்கள் ஓய்வெடுக்கும் அறையிலோ பொதுவான இடத்திலோ பத்திரிகைகளை வைத்துவிட்டு வரலாம்.
5. வியாபார பிராந்தியத்தில் தைரியமாகப் பிரசங்கிக்க என்ன காரணங்கள் இருக்கின்றன?
5 இயேசுவும் பவுலும் வியாபார பிராந்தியங்களில் தைரியமாகப் பிரசங்கித்தார்கள், உங்களாலும் முடியும். (மத். 4:18-21; 9:9; அப். 17:17) பதட்டப்படாமல் தைரியமாகப் பேசுவதற்கு யெகோவாவிடம் உதவி கேளுங்கள். (அப். 4:29) வியாபார பிராந்தியத்தில் பொதுவாக பூட்டப்பட்ட கடைகளையோ நிறுவனங்களையோ பார்ப்பது அரிது. எனவே, பலன் தரும் இந்தப் பிராந்தியத்தில் ஊழியம் செய்து பாருங்களேன்!