ஊழியத்தில் ஜாக்கிரதையாய் இருங்கள்
1. ஊழியத்தில் நாம் ஏன் ஜாக்கிரதையாக நடந்துகொள்ள வேண்டும்?
1 ‘ஓநாய்கள் மத்தியில் அனுப்பப்பட்ட ஆடுகளை’ போல் கடவுளுடைய ஊழியர்கள் “சீர்கெட்டு நெறிகெட்டுப்போன தலைமுறையின் நடுவே” சென்று நற்செய்தியை அறிவிக்கிறார்கள். (மத். 10:16; பிலி. 2:15) உள்நாட்டுக் கலவரங்கள், வன்முறைத் தாக்குதல்கள், ஆள் கடத்தல்கள் இன்று சர்வசாதாரணமாகிவிட்டன. கெட்டவர்கள் ‘மேன்மேலும் மோசமானவர்களாக’ ஆகிறார்கள் என்பதற்கு இவை அத்தாட்சிகள். (2 தீ. 3:13) அப்படியென்றால், பைபிளிலுள்ள என்ன நியமங்களைக் கடைப்பிடித்தால் ஊழியத்தில் நாம் “ஜாக்கிரதையானவர்களாக” இருக்க முடியும்?—மத். 10:16.
2. எப்படிப்பட்ட சமயங்களில் பிராந்தியத்தைவிட்டு வெளியேறி வேறு இடத்தில் ஊழியம் செய்வது ஞானமானது?
2 விவேகமாக நடங்கள்: ‘ஆபத்தைக் கண்டு மறைந்துகொள்வது’ ஞானமான செயல் என்று நீதிமொழிகள் 22:3 சொல்கிறது. எனவே, விழிப்பாய் இருங்கள்! அமைதியாக இருக்கும் பிராந்தியங்களில்கூட திடீரென்று பிரச்சினை வெடிக்கலாம். தெருவில் சட்டென்று கும்பல் சேரலாம், போலீஸார் கூட்டமாக வந்து இறங்கலாம். சில சமயங்களில் அன்பான ஒரு வீட்டுக்காரர் நம்மை உஷார்படுத்தலாம். அப்போது, என்ன ஏது என்று போய்ப் பார்ப்பதற்குப் பதிலாக, உடனே அந்த இடத்தை விட்டுவிட்டு வேறு எங்காவது ஊழியம் செய்வது விவேகமான செயலாகும்.—நீதி. 17:14; யோவா. 8:59; 1 தெ. 4:11.
3. பிரசங்கி 4:9-ல் உள்ள நியமம் நம் ஊழியத்திற்கு எப்படிப் பொருந்துகிறது?
3 சேர்ந்து ஊழியம் செய்யுங்கள்: “ஒண்டியாயிருப்பதிலும் இருவர் கூடியிருப்பது நலம்” என்று பிரசங்கி 4:9 சொல்கிறது. ஒருவேளை நீங்கள் தனியாக ஊழியம் செய்து பழகியிருக்கலாம். அப்போது, எந்தப் பிரச்சினையும் வராமல் இருந்திருக்கலாம். ஆனால், இப்போது இப்படிச் செய்வது ஞானமாக இருக்குமா? சில இடங்களில் இருக்கலாம், ஆனால் அநேக இடங்களில் ஒரு சகோதரியோ இளைஞரோ தனியாக வீட்டுக்கு வீடு ஊழியம் செய்வது, அதுவும் சூரிய மறைவுக்குப் பின்பு செய்வது, பாதுகாப்பாக இருக்காது. விழிப்பான ஒருவர் கூடவே இருப்பது பாதுகாப்பை அளித்திருக்கிறது என அனுபவங்கள் காட்டுகின்றன. (பிர. 4:10, 12) உங்களோடு ஊழியத்திற்கு வருகிற மற்ற சகோதர சகோதரிகள் பாதுகாப்பாக இருக்கிறார்களா என்று கவனிப்பது நல்லது. பிராந்தியத்தைவிட்டுச் செல்கிறீர்கள் என்றால் அவர்களுக்குத் தெரிவிப்பதைப் பழக்கமாக்கிக்கொள்ளுங்கள்.
4. சபையார் எல்லாருடைய பாதுகாப்பையும் மனதில் வைத்து நாம் எப்படிச் செயல்படலாம்?
4 பிராந்தியத்திற்கு ஏற்றாற்போல் நடைமுறையான ஆலோசனைகளைக் கொடுக்க வேண்டிய பொறுப்பு மூப்பர்களுக்கு இருக்கிறது. ஏனென்றால், அவர்களே ‘நம்மைக் காத்து வருகிறார்கள்.’ (எபி. 13:17) நாம் மனத்தாழ்மையைக் காட்டி அவர்களோடு ஒத்துழைத்தால் யெகோவாவின் ஆசீர்வாதம் நிச்சயம் இருக்கும். (மீ. 6:8; 1 கொ. 10:12) கடவுளுடைய ஊழியர்களான நாம் ஒவ்வொருவரும் நம் பிராந்தியத்தில் திறம்பட்ட விதத்தில் சாட்சி கொடுப்போமாக, அதேசமயம் ஜாக்கிரதையாக இருப்போமாக.