கடவுள் சொல்வதைக் கேட்க மக்களுக்கு உதவுங்கள்
1. “கடவுளது அரசாங்கம் வருக!” மாவட்ட மாநாட்டில் வெளியிடப்பட்ட இரண்டு சிற்றேடுகள் யாவை? அவை பயனுள்ளதாயிருப்பது எப்படிப் பயனுள்ளதாயிருக்கின்றன?
1 “கடவுளது அரசாங்கம் வருக!” மாவட்ட மாநாட்டில் இரண்டு சிற்றேடுகள் வெளியிடப்பட்டன. கடவுள் சொல்வதைக் கேளுங்கள் காலமெல்லாம் வாழுங்கள், அதன் எளிதாக்கப்பட்ட பதிப்பு கடவுள் சொல்வதைக் கேளுங்கள். இவற்றில் வாக்கியங்கள் குறைவாக இருப்பதால் மொழிபெயர்ப்பது சுலபம். அதனால்தான், கடவுள் சொல்வதைக் கேளுங்கள் காலமெல்லாம் வாழுங்கள் சிற்றேடு வெளியிடப்பட்டபோதே 431 மொழிகளில் மொழிபெயர்க்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.
2. இந்தச் சிற்றேடுகளிலிருந்து யார் நன்மையடைவர்?
2 இந்தச் சிற்றேடுகளிலிருந்து முக்கியமாக யார் நன்மையடைவர்? பின்வரும் சூழ்நிலைகளைக் கவனியுங்கள்:
• வீட்டுக்காரர் வாசிக்கத் தெரியாதவர் அல்லது எழுத்துக்கூட்டி வாசிப்பவர் என்று முதல் சந்திப்பிலோ மறுசந்திப்பிலோ தெரிய வரும்போது...
• நாம் சந்திக்கும் மக்கள் பேசுகிற மொழியில் பிரசுரங்கள் இல்லாதபோது அல்லது குறைவான பிரசுரங்களே இருக்கும்போது... அல்லது பிராந்தியத்திலுள்ள பெரும்பாலோருக்கு நன்கு பழக்கமான மொழியில் படிக்கத் தெரியாதபோது...
• காது கேளாதவர்களிடம் சைகை மொழியில் பிரசங்கிக்கும்போது...
• படிக்க ஆரம்பிக்காத சிறு பிள்ளைக்குப் பெற்றோர் கற்றுக்கொடுக்கும்போது...
3. கடவுள் சொல்வதைக் கேளுங்கள் சிற்றேடு எப்படித் தயாரிக்கப்பட்டிருக்கிறது?
3 எப்படித் தயாரிக்கப்பட்டிருக்கின்றன? கடவுள் சொல்வதைக் கேளுங்கள் சிற்றேட்டில் வாக்கியங்கள் குறைவாகவே இருக்கின்றன. ஒவ்வொரு பக்கத்தின் கீழும் முக்கிய குறிப்பை விவரிக்கிற ஒரு வாக்கியமும் ஒரு வசனமும் இருக்கும். எதற்காக? உங்களுக்குப் படிக்கத் தெரியாத மொழியில் ஒரு சிற்றேட்டைக் கையில் கொடுத்தால், என்னதான் அழகான படங்கள் இருந்தாலும் அதன்மேல் அவ்வளவாக ஆர்வம் வராது. அதுபோலத்தான், படிக்கத் தெரியாதவரிடம் நிறைய வாக்கியங்கள் உள்ள பிரசுரங்களைக் கொடுத்தால் ஆர்வம் காட்ட மாட்டார். அதனால்தான், இந்தச் சிற்றேட்டில் வாக்கியங்களுக்குப் பதிலாக, சிந்திக்க வைக்கும் படங்கள் உள்ளன. ஒவ்வொரு படத்தையும் வரிசையாக விளக்குவதற்கு உதவியாக அம்பு குறி போடப்பட்டிருக்கிறது.
4. கடவுள் சொல்வதைக் கேளுங்கள் காலமெல்லாம் வாழுங்கள் சிற்றேடு எப்படித் தயாரிக்கப்பட்டிருக்கிறது?
4 இந்தச் சிற்றேட்டில் உள்ள அதே படங்கள்தான் கடவுள் சொல்வதைக் கேளுங்கள் காலமெல்லாம் வாழுங்கள் சிற்றேட்டிலும் இருக்கின்றன. கொஞ்சம் படிக்கத் தெரிந்தவருக்கு அல்லது படிக்கக் கற்றுக்கொள்பவருக்கு பைபிள் படிப்பு நடத்துவதற்காக இது தயாரிக்கப்பட்டிருக்கிறது. கடவுள் சொல்வதைக் கேளுங்கள் சிற்றேட்டிலிருந்து ஒருவருக்கு பைபிள் படிப்பு நடத்தும்போது கடவுள் சொல்வதைக் கேளுங்கள் காலமெல்லாம் வாழுங்கள் சிற்றேட்டை பிரஸ்தாபி கையில் வைத்துக்கொள்ளலாம். இடது பக்கத்தின் மேல் ஓரத்தில் ஒரு கேள்வி இருக்கும், அதற்கான பதில் அந்த இரண்டு பக்கங்களிலும் இருக்கும். அதோடு படங்களும், மேற்கோள் காட்டப்படாத வசனங்களும் கொடுக்கப்பட்டிருக்கும். நிறைய பக்கங்களில் கீழ் ஓரத்தில் ஒரு பெட்டி கொடுக்கப்பட்டிருக்கிறது. மாணாக்கரின் திறமையைப் பொறுத்து, அதில் இருக்கும் குறிப்புகளையும் வசனங்களையும் அவரோடு கலந்தாலோசிக்கலாம்.
5. இந்தச் சிற்றேடுகளை எப்போது, எப்படி அளிக்கலாம்?
5 எப்படிப் பயன்படுத்துவது? பிரசுர அளிப்பில் குறிப்பிடப்படவில்லை என்றாலும், பொருத்தமான சமயத்தில் வீட்டுக்கு வீடு ஊழியத்தில் இவற்றைக் கொடுக்கலாம். (“எப்படி அளிக்கலாம்?” என்ற பெட்டியைக் காண்க.) அல்லது மறு சந்திப்பில், ஆர்வம் காட்டுபவரிடம் “உங்களுக்காக ஒன்று எடுத்து வந்திருக்கிறேன்” என்று சொல்லி இதைக் கொடுக்கலாம்.
6. இந்தச் சிற்றேடுகளைப் பயன்படுத்தி எப்படி பைபிள் படிப்பு நடத்தலாம்?
6 கடவுள் சொல்வதைக் கேளுங்கள் சிற்றேட்டில் கேள்விகள் இல்லாததால் பைபிள் கற்பிக்கிறது புத்தகத்தைப் போல் கேள்வி-பதில் முறையில் படிப்பு நடத்த முடியாது. பொதுவாக, கதை கேட்பதென்றால் எல்லாருக்கும் பிடிக்கும். எனவே, படத்தைப் பயன்படுத்தி பைபிளிலுள்ள நிஜ சம்பவங்களைக் கதையாகச் சொல்லுங்கள். படம் சொல்லும் பாடத்தைத் தத்ரூபமாக விளக்குங்கள். மாணாக்கரின் கருத்தைக் கேளுங்கள். ஒவ்வொரு பக்கத்தின் கீழேயும் உள்ள வசனங்களை வாசித்து விளக்குங்கள். கேள்விகளைக் கேட்டு மாணாக்கரையும் உரையாடலில் ஈடுபடுத்துங்கள். அவர் புரிந்துகொண்டாரா என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள். ஒருவேளை அவர் கடவுள் சொல்வதைக் கேளுங்கள் காலமெல்லாம் வாழுங்கள் சிற்றேட்டைப் பயன்படுத்தினால் படங்களை விளக்குவதோடு, குறிப்புகளையும் வசனங்களையும் வாசித்து கலந்தாலோசியுங்கள்.
7. மாணாக்கர் முன்னேற எப்படி உதவலாம்?
7 மாணாக்கர் முன்னேற உதவுங்கள்: கடவுள் சொல்வதைக் கேளுங்கள் சிற்றேட்டிலிருந்து படிக்க படிக்க, யெகோவாவைப் பற்றி இன்னும் தெரிந்துகொள்ள மாணாக்கர் ஆசைப்படலாம். அதற்காக எப்படியாவது வாசிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும் என நினைக்கலாம். (மத். 5:3; யோவா. 17:3) அப்போது மாணாக்கருக்கு நீங்களே வாசிக்கக் கற்றுக்கொடுக்கலாம். பிறகு, கடவுள் சொல்வதைக் கேளுங்கள் காலமெல்லாம் வாழுங்கள் சிற்றேட்டிலிருந்து படிப்பு நடத்தலாம். எந்தச் சிற்றேட்டிலிருந்து படித்தாலும் ஞானஸ்நானம் எடுப்பதற்கு அது போதாது. பைபிளை முழுமையாகப் புரிந்துகொள்வதற்கு பைபிள் கற்பிக்கிறது புத்தகத்தில் இருந்தோ அல்லது வேறு பொருத்தமான புத்தகத்திலிருந்தோ படிப்பைத் தொடர வேண்டும்.
8. இந்தச் சிற்றேடுகளுக்காக நாம் ஏன் நன்றியுள்ளவர்களாக இருக்கலாம்?
8 என்றென்றும் வாழ ஆசைப்பட்டால் சர்வலோகப் பேரரசர் யெகோவா சொல்வதைக் கண்டிப்பாகக் கேட்க வேண்டும். (ஏசா. 55:3) படிக்கத் தெரியாதவர்கள் உட்பட “பலதரப்பட்ட ஆட்களும்” தாம் சொல்வதைக் கேட்க வேண்டும் என்று அவர் ஆசைப்படுகிறார். (1 தீ. 2:3, 4) அதற்கு உதவும் இந்தச் சிற்றேடுகளுக்காக நாம் எவ்வளவு நன்றி சொல்ல வேண்டும்!
[பக்கம் 3-ன் சிறு குறிப்பு]
எப்படி அளிக்கலாம்?
வீட்டுக்காரரிடம் 2-3 பக்கங்களைக் காட்டி இப்படிக் கேளுங்கள்: “இதைப் போன்ற ஓர் உலகத்தில் வாழ ஆசைப்படுகிறீர்களா? [பதில் சொல்ல அனுமதியுங்கள்.] சீக்கிரத்தில் வறுமையையும் வியாதியையும் கடவுள் விரட்ட போகிறார், சமாதானமான, அழகான ஓர் இடமாக இந்த உலகத்தை மாற்றப்போகிறார் என்று பைபிள் [அல்லது, பரிசுத்த புத்தகம்] வாக்குக் கொடுக்கிறது. நாம் அதில் வாழ என்ன செய்ய வேண்டும் என்பதை வாசித்து காட்டட்டுமா? [சிற்றேட்டில் பக்கம் 3-லுள்ள ஏசாயா 55:3-ஐ வாசித்துக் காட்டுங்கள்.] கடவுளிடத்தில் ‘வந்து’ அவர் சொல்வதை ‘கேட்கும்படி’ இந்த வசனம் சொல்கிறது. ஆனால், கடவுள் சொல்வதை எப்படிக் கேட்க முடியும்?” பக்கம் 4-5-ற்கு திருப்பி பதில்களைக் கலந்தாலோசியுங்கள். அவருக்கு நேரம் இல்லையென்றால், சிற்றேட்டைக் கொடுத்துவிட்டு அடுத்தமுறை கலந்துபேசுவதற்கு ஏற்பாடு செய்யுங்கள்.