கடின உழைப்பின் பலனை அனுபவியுங்கள்
1. ஊழியத்தில் எது நம் உற்சாகத்தைத் தணித்துவிடும்?
1 “கடின உழைப்பின் பலனை அனுபவிக்கும்” ஆசை மனிதர்களிடம் இயல்பாகவே இருக்கிறது. அப்படித்தான் கடவுள் நம்மைப் படைத்திருக்கிறார். (பிர. 2:24, NW) ஆனால், ஊழியத்தில் கிடைக்கும் பலன்களை நாம் கவனிக்க தவறிவிட்டால் நம் சந்தோஷம் பறிபோய்விடும், ஊழியத்தில் உற்சாகம் தணிந்துவிடும். அப்படியென்றால், நம்பிக்கையான மனநிலையைக் காத்துக்கொள்ள எது நமக்கு உதவும்?
2. ஊழியத்தில் நமக்கு ஏன் எதார்த்தமான எதிர்பார்ப்பு இருக்க வேண்டும்?
2 எதார்த்தமான எதிர்பார்ப்புகள்: இயேசு ஊழியம் செய்தபோது எல்லாருமே அவருக்குச் செவிசாய்க்கவில்லை என்பதை மனதில் வையுங்கள். என்றாலும், அவருடைய ஊழியம் வெற்றி அடைந்தது. (யோவா. 17:4) விதை விதைப்பவரைப் பற்றிய உவமையில் ஒரு விஷயத்தை இயேசு தெளிவாகச் சொன்னார்; அதாவது விதைப் போன்ற கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய செய்தியைக் கேட்டும் நிறையப்பேர் கனி தரமாட்டார்கள் என்று சொன்னார். (மத். 13:3-8, 18-22) என்றாலும், நம்முடைய கடின உழைப்பிற்கு நிச்சயம் கைமேல் பலன் உண்டு.
3. நம் செய்திக்கு நிறையப்பேர் செவிசாய்க்காவிட்டாலும் ஊழியத்தில் நமக்கு எப்படி “மிகுந்த பலன்” கிடைக்கும்?
3 பலமடங்கு பலன் கிடைக்க: இயேசு சொன்ன உவமையில், நம் செய்திக்கு செவிசாய்க்கிறவர்கள் “மிகுந்த பலன்” தருவார்கள் என்று சொன்னார். (மத். 13:23) ஒரு கோதுமை தண்டு முளைவிட்டு முதிர்ச்சி அடையும்போது கனி கொடுக்கிறது. ஆனால் அது சிறிய கோதுமைத் தண்டுகளை கனியாக கொடுப்பதில்லை, புதிய விதையைத்தான் கொடுக்கிறது. அதேவிதமாக ஒரு கிறிஸ்தவன் கனி கொடுப்பது என்பது புதிய சீடர்களை உருவாக்குவதை எப்போதுமே குறிப்பதில்லை, நற்செய்தியைத் தொடர்ந்து பிரசங்கிப்பதன் மூலமாக ஏராளமான விதைகளை விதைப்பதைக் குறிக்கிறது. அநேகருக்கு நற்செய்தியைப் பிரசங்கிப்பதைக் குறிக்கிறது. இதனால் நல்ல ‘பலன்களே’ கிடைக்கின்றன. ஆம், நம் செய்தியை மக்கள் கேட்காவிட்டாலும் நமக்குத் திருப்தி கிடைக்கிறது. யெகோவாவின் பெயரை மகிமைப்படுத்துவதில் ஒரு பங்கு கிடைக்கிறது. (ஏசா. 43:10-12; மத். 6:9) கடவுளுடைய சக வேலையாளாக இருக்கும் பாக்கியம் கிடைக்கிறது. (1 கொ. 3:9) இப்படி “உதடுகளின் கனியை” பலியாக செலுத்தும்போது யெகோவாவின் மனம் மகிழ்கிறது.—எபி. 13:15, 16.
4. எப்படி நமக்கே தெரியாமல் ஊழியத்தில் பலன்கள் கிடைக்கலாம்?
4 சில சமயம், நம் கடின உழைப்பிற்கு கிடைக்கும் பலன்களை நம்மால் பார்க்க முடியாமல் போகலாம். உதாரணத்திற்கு, இயேசு பிரசங்கித்த சமயத்தில் அவருடைய செய்தியைக் கேட்ட சிலர் அவர் இறந்த பிறகே அவருடைய சீடரானார்கள். அதேபோல், நாம் விதைக்கும் ராஜ்ய விதை வீட்டுக்காரரின் மனதில் வேர்விடாதது போல் இருந்தாலும் பிற்காலத்தில் நமக்கே தெரியாமல் அவர் சத்தியத்திற்கு வரலாம். ஆக, நாம் செய்யும் ஊழியத்திற்கு நிச்சயம் பலன் உண்டு. எனவே, நாம் “தொடர்ந்து அதிகமாகக் கனிகொடுத்து”கொண்டு இருப்போமாக, இயேசுவின் சீடர்கள் என்று நிரூபிப்போமாக.—யோவா. 15:8.