முடியாதென நினைக்காதீர்கள் —நேரமில்லை என்று தவிக்கும்போது...
1. சிலர் பைபிள் படிப்பு நடத்த தயங்குவதற்குக் காரணம் என்ன?
1 ‘பைபிள் படிப்பு நடத்த எனக்கு நேரமே இல்லை’ என்று நினைத்து சிலர் பைபிள் படிப்பு எடுக்க தயங்குகிறார்கள். பைபிள் மாணாக்கருக்கு உதவ வேண்டும் என்றால் நேரம் செலவிட வேண்டும். ஆம், பைபிள் படிப்புக்காகத் தயாரிப்பதற்கு, அதை நடத்துவதற்கு, தடைகளைத் தாண்ட மாணாக்கருக்கு உதவுவதற்கு நேரம் செலவிட வேண்டும். அப்போஸ்தலன் பவுலை எடுத்துக்கொள்ளுங்கள். தெசலோனிக்கேயிலிருந்த மக்களுக்கு யெகோவாவைப் பற்றிக் கற்றுக்கொடுப்பதற்காகத் தன் உயிரைத் தரவும் தயாராக இருந்தார். (1 தெ. 2:7, 8) இன்று, பிஸியாக இருப்பவர்கள்கூட பைபிள் படிப்பு நடத்த எப்படி நேரம் ஒதுக்கலாம்?
2. யெகோவாமேல் நமக்கு அன்பிருந்தால் நேரத்தை எப்படிப் பயன்படுத்துவோம்?
2 வழிபாட்டிற்கு நேரம் ஒதுக்குவது அவசியம்: யெகோவாவை சேவிக்க நாம் நேரம் ஒதுக்கியே ஆக வேண்டும். உதாரணமாக, கூட்டங்களில் கலந்துகொள்ள, ஊழியத்திற்குச் செல்ல, பைபிள் படிக்க, ஜெபம் செய்ய நாம் தவறாமல் நேரம் ஒதுக்குகிறோம். திருமணமான ஒருவர், எவ்வளவுதான் பிஸியாக இருந்தாலும் தன் துணையோடு நேரம் செலவிடாமல் இருப்பாரா? சந்தோஷமாகச் செலவிடுவார். அதேபோல், யெகோவாமீது நமக்கு அன்பிருந்தால் அவரை வழிபடுவதற்காக ‘நேரத்தை வாங்குவதில்’ சந்தோஷப்படுவோம், அல்லவா? (எபே. 5:15-17, அடிக்குறிப்பு; 1 யோ. 5:3) சீடராக்கும் வேலை, வழிபாட்டின் மிக முக்கியமான அம்சம் என்பது இயேசுவின் வார்த்தைகளிலிருந்து தெரிகிறது. (மத். 28:19, 20) இதை நாம் மனதில் வைத்தால், பைபிள் படிப்பு எடுப்பது நம் பொறுப்பு என்பதை உணர்ந்துகொள்வோம்.
3. சூழ்நிலை அனுமதிக்காவிட்டாலும் பைபிள் படிப்பைத் தொடர்ந்து நடத்த என்ன செய்யலாம்?
3 ஒருவேளை, நாம் அதிக நேரம் வேலை செய்ய வேண்டியிருந்தால், தீராத வியாதியால் அவதிப்பட்டால், சபையில் அதிக பொறுப்புகள் இருந்தால் என்ன செய்வது? சில பிரஸ்தாபிகள், பைபிள் படிப்புக்குப் போக முடியாத நேரங்களில் தொலைபேசி மூலமாக அல்லது இன்டர்நெட் மூலமாக படிப்பு நடத்துகிறார்கள். தீராத வியாதி இருக்கும் சிலர் பைபிள் மாணாக்கரை வீட்டிற்கே வரச் சொல்கிறார்கள். சிலர், தங்களால் போக முடியாத வாரங்களில் வேறு யாரையாவது நடத்த முன்கூட்டியே ஏற்பாடு செய்கிறார்கள்.
4. பைபிள் படிப்பு நடத்துவதால் என்ன ஆசீர்வாதங்கள் கிடைக்கும்?
4 சத்தியத்தைப் பற்றி மற்றவர்களுக்குக் கற்றுக்கொடுப்பதற்காக தன் நேரத்தையும் சக்தியையும் செலவழிப்பதில் பவுல் சந்தோஷம் கண்டார். (அப். 20:35) தெசலோனிக்கேயில் இருந்தவர்களுக்கு உதவியதால் கிடைத்த பலன்களை நினைத்து சந்தோஷப்பட்டார், கடவுளுக்கு நன்றி சொன்னார். (1 தெ. 1:2) நம்முடைய பிஸியான வாழ்க்கை பைபிள் படிப்பு எடுப்பதற்கு முட்டுக்கட்டையாக இல்லாதபடி பார்த்துக்கொண்டால், ஊழியத்தில் நம் திருப்தியும் சந்தோஷமும் அதிகரிக்கும்.