விவேகத்துடன் நற்செய்தியை அறிவியுங்கள்
1 வித்தியாசப்பட்ட நம்பிக்கையையும் பின்னணியையும் சேர்ந்த ஆட்களுக்கு நற்செய்தியை விவேகத்துடன் அறிவிப்பதன் முக்கியத்துவத்தை அப்போஸ்தலன் பவுல் சிறப்பித்துக் காட்டினார். இன்று சிலர் தங்களுக்கு மத நம்பிக்கை இருப்பதாகச் சொல்லிக்கொள்கிறார்கள், சிலரோ ஆன்மீக விஷயங்களில் அக்கறை காட்டுவதில்லை. நற்செய்தி அறிவிப்பாளர்களாக ஊழியத்தில் நாம் விவேகமாக ஈடுபடுவதன்மூலம், கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய செய்தியை மனதைத் தொடும் விதத்தில் “எல்லாருக்கும்” சொல்ல முடியும்.—1 கொ. 9:19-23.
2 வீட்டுக்காரரைப் புரிந்துகொள்ளுங்கள்: வீட்டுக்காரரின் ஆர்வத்தைத் தூண்டும் விதத்தில் நம் அணுகுமுறையை மாற்றிக்கொள்வதன் மூலம் விவேகத்தைக் காட்டலாம். இதற்கு நன்கு தயாரிக்க வேண்டும். நம் பிரசுரங்களில் இருக்கும் வித்தியாசமான குறிப்புகளைத் தெரிந்துவைத்திருந்தால்தான் பலதரப்பட்ட ஆட்களுக்கும் நற்செய்தியை அறிவிக்க முடியும். வயதானவர்கள், வாலிபர்கள், குடும்பத் தலைவர்கள், குடும்பப் பெண்கள், வேலைக்குப் போகும் பெண்கள் என்று எல்லாருடைய சூழ்நிலைகளுக்கும் கவனம் செலுத்தி, விவேகத்துடன் அவர்களுக்கேற்ற கட்டுரையை அளிக்க வேண்டும்.
3 உரையாடலை ஆரம்பிக்கும்முன் வீட்டுக்காரரின் சூழ்நிலையைக் கவனியுங்கள். அவருக்கு குழந்தைகள் இருக்கிறதா, எந்த மதத்தைச் சேர்ந்தவர், குடும்பத்தின்மீது அக்கறையுள்ளவரா என்றெல்லாம் பாருங்கள். இந்தத் தகவல்களை உபயோகித்து அவருடைய சூழ்நிலைக்கும் ஆர்வத்திற்கும் ஏற்றார்போல் உரையாடலை மாற்றியமைக்கலாம். சாதுரியமாகப் பேசுவதன் மூலம்... விவேகமான கேள்விகள் கேட்பதன் மூலம்... அவர் சொல்வதை காதுகொடுத்து கேட்பதன் மூலம்... அவருடைய நம்பிக்கையையும் உணர்ச்சிகயையும் நம்மால் புரிந்துகொள்ள முடியும். அதன்பின் உரையாடலை எப்படித் தொடர்வதென்று தீர்மானிக்கலாம்.
4 சூழ்நிலைக்கேற்ப அணுகுமுறையை மாற்றிக்கொள்ளுங்கள்: ஒரு வீட்டிற்குப் போகும்போது விளையாட்டுச் சாமான்களையோ பிள்ளைகளையோ கவனித்தால் உரையாடலை இவ்வாறு ஆரம்பிக்கலாம்: “இந்தப் பகுதியிலுள்ள பெற்றோரைச் சந்தித்து பிள்ளைகளுக்கு அவர்கள் சொல்லித் தருகிற விஷயங்களைப் பற்றிப் பேசிவருகிறோம். பிள்ளைகளுக்கு ஒழுக்க விஷயங்களைப் பள்ளிகளில் சொல்லித்தராததை நினைத்து நிறையப் பெற்றோர் கவலைப்படுகிறார்கள். நீங்கள் அப்படிக் கவலைப்பட்டிருக்கிறீர்களா?” வீட்டுக்கார் ஆர்வம் காட்டினால் நீங்கள் இப்படிச் சொல்லலாம்: “பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் ஞானமான ஆலோசனை தேவை என்று பைபிள் சொல்கிறது. பைபிளில் நீதிமொழிகள் 14:12 சொல்வதைக் கவனியுங்கள்.” வசனத்தை வாசித்த பிறகு: “சமீபத்தில் படித்த ஒரு புத்தகத்திலிருந்து பைபிளுடைய ஆலோசனை எவ்வளவு நடைமுறையானது என்பதை நான் தெரிந்துகொண்டேன்” என்று சொல்லலாம். பைபிள் கற்பிக்கிறது புத்தகத்தின் 134-வது பக்கத்துக்குத் திருப்பி பொருத்தமான பாராவை கலந்தாலோசியுங்கள்.
5 நன்கு தயாரித்து, யெகோவாவின் சேவையில் விவேகத்துடன் ஈடுபட்டால் அப்போஸ்தலனாகிய பவுலைப் போல நாமும் இவ்வாறு சொல்ல முடியும்: “எப்படியாவது சிலரையேனும் மீட்புக்கு வழிநடத்த எல்லாருக்கும் எல்லாமானேன்.”—1 கொ. 9:22; நீதி. 19:8.