‘ஜனங்களைக் கூடிவரச்செய்யுங்கள்’
1. எகிப்திலிருந்து வெளியே வந்தவுடன் இஸ்ரவேலர்கள் கூடிவந்ததற்கும் நம் நாளில் நடக்கும் மண்டல, சர்வதேச மாநாடுகளுக்கு என்ன ஒற்றுமை இருக்கிறது?
1 இஸ்ரவேலர்கள் எகிப்திலிருந்து வந்த சமயத்தில், சீனாய் மலையில் அவர்களை ‘கூடிவரச்செய்யும்படி’ யெகோவா மோசேயிடம் சொன்னார். யெகோவா சொல்வதைக் கேட்டு, அவருக்குப் பயந்து நடக்கவும் பிள்ளைகளுக்கு அவருடைய வழிகளைக் கற்றுக்கொடுக்கவும் வேண்டியிருந்தது. (உபா. 4:9-13) விசுவாசத்தைப் பலப்படுத்தும் என்னே ஓர் சந்தோஷமான சமயமாக அது இருந்திருக்கும்! இன்னும் சில மாதங்களில், நாமும் யெகோவாவின் போதனையைக் கேட்க மண்டல மாநாட்டிற்கும் சர்வதேச மாநாட்டிற்கும் கூடிவருவோம். இதிலிருந்து முழுமையாக நன்மையடைய என்ன செய்ய வேண்டும்?
2. நாம் மாநாட்டிற்கு எப்படித் ‘தயாராயிருக்கலாம்’?
2 ‘தயாராயிருங்கள்’: சீனாய் மலையில் நடக்கவிருந்த அந்த முக்கிய நிகழ்ச்சிக்கு ‘தயாராக’ இருக்கும்படி இஸ்ரவேலர்களிடம் யெகோவா கட்டளையிட்டிருந்தார். (யாத். 19:10, 11, NW) அதேபோல் இன்றும், நியமிப்புகள் இருப்பவர்கள் மட்டுமல்லாமல் எல்லோருமே மாநாட்டிற்குத் தயாராக வேண்டும். உதாரணத்திற்கு, நெகேமியாவைப்போல் நிறைய பேர் தங்கள் வேலையிலிருந்து விடுப்பு எடுக்க வேண்டியிருக்கும். அர்தசஷ்டா ராஜாவின் பானப்பாத்திரக்காரனாக இருந்த நெகேமியா, எருசலேமிற்குப் போவதற்கும் அங்கிருந்த மதில்களை திரும்ப கட்டுவதற்கும் ராஜாவிடம் அனுமதி கேட்க வேண்டியிருந்தது. ராஜா அனுமதி தர வாய்ப்பில்லை என்று நெகேமியா நினைத்தாலும் யெகோவாவிடம் ஜெபம் செய்துவிட்டு தயவாக அனுமதி கேட்டார். ராஜா அனுமதி கொடுத்ததோடு மதில்களைக் கட்டுவதற்குத் தேவையான உதவியையும் அளித்தார். (நெ. 2:1-9) உங்கள் முதலாளியிடம் விடுப்பு கேட்பதோடு, பயணம் செய்தவற்கும் ஓட்டலில் தங்குவதற்கும் தேவையான ஏற்பாடுகளைச் செய்துவிட்டீர்களா? உங்களுக்குத் தேவைப்படும் உதவியை மூப்பர்கள் தாராளமாக அளிப்பார்கள். நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்னதாகவே வந்துவிடுங்கள். “வழக்கத்தைவிட அதிக கவனம்” செலுத்த தயாராக இருங்கள்.—எபி. 2:1.
3. மாநாட்டிற்காக நம் இருதயத்தை எப்படித் தயார்படுத்தலாம்?
3 நாம் கேட்டு கற்றுக்கொள்ள நம் இருதயத்தையும் தயார்படுத்துவது முக்கியம். (எஸ்றா 7:10) jw.org-ல் மாநாட்டு நிகழ்ச்சிநிரல் முன்னதாகவே கொடுக்கப்பட்டிருக்கும். அதில் எல்லாப் பேச்சுகளின் தலைப்புகளும் அவற்றுக்குரிய முக்கிய வசனங்களும் இருக்கும். மாநாட்டிற்கு முன்னதாகவே இந்த விஷயங்களை நம் குடும்ப வழிபாட்டின்போது சிந்திக்கலாம். சில பிரஸ்தாபிகள் இந்த நிகழ்ச்சிநிரலை “பிரிண்ட்” செய்துகொண்டு, மாநாட்டில் குறிப்புகள் எடுப்பதற்குப் பயன்படுத்துகிறார்கள்.
4. பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுக்க மாநாடுகள் எப்படிப் பெற்றோருக்கு உதவும்?
4 ‘பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுங்கள்’: இஸ்ரவேலிலிருந்த பெற்றோர் தங்கள் ‘பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுக்க’ சீனாய் மலையில் கூடிவர வேண்டியிருந்தது. (உபா. 4:10, பொது மொழிபெயர்ப்பு) இன்றும், பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுக்க மாநாடுகள் உதவுகின்றன. பெற்றோர் பிள்ளைகளைத் தங்கள் அருகிலேயே உட்கார வைக்க வேண்டும். அவர்கள் கவனித்துக் கேட்க பெற்றோர் உதவ வேண்டும். மாநாட்டில் கற்றுக்கொண்ட விஷயங்களை, மாநாடு முடிந்த ஒவ்வொரு நாள் மாலையிலும் பிறகு குடும்ப வழிபாட்டிலும் சிந்திக்கலாம்.
5. வரவிருக்கும் மாநாட்டிலிருந்து நாம் எப்படிப் பயனடையலாம்?
5 இஸ்ரவேலர்கள் கடவுளுடைய ஜனங்களாக இருப்பதன் பாக்கியத்தை நினைத்துப் பார்க்க சீனாய் மலையில் நடந்த அந்த முக்கியமான கூட்டம் உதவியது. (உபா. 4:7, 8) நம் மாநாடுகளும் அவ்வாறே உதவும். மாநாட்டின் மூன்று நாட்களும் நாம் சாத்தானின் கொடூரமான உலகத்திலிருந்து பிரிந்திருப்போம், ஆன்மீக பூஞ்சோலையில் உற்சாகமூட்டும் தோழமையை அனுபவிப்போம், புத்துணர்ச்சியையும் பெறுவோம். (ஏசா. 35:7-9) யெகோவாவின் நாள் நெருங்கிக்கொண்டிருக்கும் சமயத்தில், ஒருவரையொருவர் ஊக்கப்படுத்துவதற்குக் கிடைக்கும் இந்த வாய்ப்பை நழுவவிடாதிருப்போமாக!—எபி. 10:24, 25.