நூறு வருடங்களாக கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி அறிவித்து வருகிறோம்!
1. நூறு வருடங்களுக்கு முன்பு யெகோவாவின் மக்கள் என்ன செய்யும்படி உற்சாகப்படுத்தப்பட்டார்கள்?
1 “இதோ, ராஜா ஆட்சி செய்கிறார்! நீங்களே அவரது பிரதிநிதிகள். எனவே, ராஜாவையும் அவருடைய அரசாங்கத்தையும் பற்றி அறிவியுங்கள், அறிவியுங்கள், அறிவியுங்கள்” என்று சகோதரர் ரதர்ஃபோர்ட் நூறு வருடங்களுக்கு முன்பு சொன்னார். கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி உலகம் முழுவதும் அறிவிக்கும்படி யெகோவாவின் மக்கள் உற்சாகப்படுத்தப்பட்டார்கள். கடந்த நூறு வருடங்களாக, நாம் அதைத்தான் செய்து வந்திருக்கிறோம்! முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களைப் போலவே நாமும், “வானத்தின் கீழிருக்கிற எல்லா மக்களுக்கும்” நற்செய்தியைப் பிரசங்கித்திருக்கிறோம். (கொலோ. 1:23) கடந்த நூறு வருடங்களாக கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி நாம் எப்படி அறிவித்து வந்திருக்கிறோம்? கடவுளுடைய ஆட்சி ஆரம்பித்து நூறு வருடங்கள் முடியப்போகும் சமயத்திலும், நாம் எப்படித் அதைப் பற்றி தொடர்ந்து அறிவிக்கலாம்?
2. நம் பிரசுரங்கள் கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி எப்படி அறிவித்து வந்திருக்கின்றன?
2 என்ன செய்தோம்: பல வருடங்களாக, நம் பிரசுரங்கள் கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி அறிவித்து வந்திருக்கின்றன. 1939 முதல், நாம் வெளியிட்டுவரும் முக்கிய பத்திரிகையின் தலைப்பு: காவற்கோபுரம் யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது. கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றியும் அது என்னவெல்லாம் சாதிக்கப்போகிறது என்பதைப் பற்றியும் இந்தப் பத்திரிகையில் அதிகம் சொல்லப்பட்டிருக்கிறது. மக்களுடைய பிரச்சினைகளுக்கெல்லாம் ஒரே தீர்வு கடவுளுடைய அரசாங்கம்தான் என்று விழித்தெழு! பத்திரிகையும் சொல்லிவந்திருக்கிறது. இந்த இரண்டு பத்திரிகைகள்தான் உலகிலேயே அதிகமாக மொழிபெயர்க்கப்பட்டு, விநியோகிக்கப்பட்டு வருகின்றன!—வெளி. 14:6.
3. என்னென்ன விதங்களில் நாம் நற்செய்தியை அறிவித்து வந்திருக்கிறோம்?
3 கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி பிரசங்கிக்க நாம் வேறு பல முறைகளையும் பயன்படுத்தியிருக்கிறோம். முன்பெல்லாம் சவுண்டு கார்கள், வானொலி, ஃபோனோகிராஃப் ஆகியவற்றைப் பயன்படுத்தி நற்செய்தியை அறிவித்தோம். அந்தச் சமயத்தில் கொஞ்சம் சாட்சிகள் மட்டுமே இருந்தாலும், இந்த முறைகளைப் பயன்படுத்தியதால் நம்மால் அநேகருக்கு நற்செய்தியை அறிவிக்க முடிந்தது. (சங். 19:4) சில வருடங்களாக, jw.org மூலம் லட்சக்கணக்கான மக்களுக்கு நற்செய்தியை அறிவித்து வருகிறோம்; பிரசங்க வேலை தடைசெய்யப்பட்ட நாடுகளிலுள்ள மக்களும் நற்செய்தியைத் தெரிந்துகொள்ள இது உதவுகிறது.
4. வேறு என்ன விசேஷ முறைகளை நாம் பயன்படுத்தி வருகிறோம்?
4 நற்செய்தியை அறிவிக்க இன்னும் பல விசேஷ முறைகளையும் நாம் பயன்படுத்தியிருக்கிறோம். உதாரணத்திற்கு 1990-ன் மத்திபத்தில், வீட்டுக்கு வீடு ஊழியத்தோடு பூங்காக்களிலும், கடைகளிலும், வண்டிகளை நிறுத்தும் இடங்களிலும் பிரசங்கிக்க ஆரம்பித்தோம். சமீபத்தில், சில நாடுகளிலுள்ள பெரிய நகரங்களில் விசேஷ பொது ஊழியமும் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. அதோடு நிறைய சபைகள், மேஜைகளையும் வீல் ஸ்டாண்டுகளையும் பயன்படுத்தி ஆள் நடமாட்டம் அதிகம் இருக்கும் இடங்களில் பொது ஊழியம் செய்துவருகிறார்கள். இருந்தாலும், நாம் பிரசங்கிப்பதற்கான முக்கிய வழி வீட்டுக்கு வீடு ஊழியம்தான்; அதை நாம் இன்றும் செய்துவருகிறோம்.—அப். 20:20.
5. புதிய ஊழிய ஆண்டில், நமக்கு என்ன வாய்ப்பு இருக்கிறது?
5 என்ன செய்யப்போகிறோம்: வரப்போகும் புதிய ஊழிய ஆண்டில், அதாவது செப்டம்பர் மாதத்தில், நிறைய பேர் ஒழுங்கான பயனியர் ஊழியம் செய்ய ஆரம்பிப்பார்கள். உங்களாலும் ஒழுங்கான பயனியர் ஊழியம் செய்ய முடியுமா? இல்லையென்றால், அவ்வப்போது துணைப் பயனியர் ஊழியமாவது செய்ய முடியுமா? உங்களால் பயனியர் ஊழியம் செய்ய முடிந்தாலும் சரி முடியாவிட்டாலும் சரி, கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி அறிவிக்க நீங்கள் செய்யும் எல்லா தியாகங்களையும் யெகோவா நிச்சயம் ஆசீர்வதிப்பார்.—மல். 3:10.
6. அக்டோபர் 2014 நமக்கு ஏன் விசேஷ மாதமாக இருக்கும்?
6 அக்டோபர் 2014-ல், கடவுளுடைய அரசாங்கம் ஆட்சி செய்ய ஆரம்பித்து நூறு வருடங்கள் முடிவடையும். எனவே, நாம் ஒவ்வொருவரும் வரப்போகிற நாட்களில், ‘கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நற்செய்தியை’ தொடர்ந்து எல்லோருக்கும் அறிவிப்போமாக!—அப். 8:12.